சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

``முடக்கநிலை மற்றும் தனிநபர் இடைவெளி: கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு சிறப்பான சமூகத் தடுப்பு மருந்து''



ஜாஜ்ஜார் எய்ம்ஸ் மருத்துவமனை கோவிட்-19 சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக செயல்படும்

Posted On: 05 APR 2020 6:07PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று ஜாஜ்ஜாரில் உள்ள எய்ம்ஸ் வளாகத்தை சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார். கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளுக்கான ஆயத்த நிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

ஜாஜ்ஜார் எய்ம்ஸ் வளாகம் கோவிட்-19க்கான பிரத்யேக மருத்துவமனையாக செயல்படும் என்றும், அதில் 300 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தல் வார்டுகள் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கூடுதல் மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படும். அதிநவீன வசதிகள் கொண்ட அந்தக் கட்டடத்தில் பல்வேறு பகுதிகளை அவர் பார்வையிட்டார். டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் மற்ற அலுவலர்களுக்கான குடியிருப்பு வளாகமான விஷ்ராம் சடன் பகுதியையும் அவர் பார்த்தார். கோவிட்-19 பாதித்து சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிகளிடம் செல்போனில் அவர் வீடியோ அழைப்பு மூலம் பேசி நலம் விசாரித்தார். ஜாஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள வசதிகள் பற்றி அவர்களுடைய கருத்துகளையும் அமைச்சர் கேட்டறிந்தார். தேவையைப் பொருத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக அதுபற்றி அவர் கேட்டறிந்தார்.

கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட மற்றும் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு உரியவர்களுக்கு டிஜிட்டல் வசதிகள் மற்றும் வீடியோ / குரல்வழி தொலைபேசி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தினமும் 24 மணி நேரமும் கவனித்து வருவதற்காக ஜாஜ்ஜார் எய்ம்ஸ் நிர்வாகத்துக்கு டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் பாராட்டு தெரிவித்தார். ``கடந்த சில நாட்களில், நான் டெல்லி எய்ம்ஸ், எல்.என்.ஜே.பி., ஆர்.எம்.எல்., சப்தர்ஜங் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தியுள்ளேன். இப்போது ஜாஜ்ஜாரில் எய்ம்ஸ் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இதுபோன்ற சோதனைக் காலங்களில் நமது சுகாதாரத் துறையின் வீரர்களின் தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதைப் பார்க்கும் போது நெகிழ்ச்சியாக உள்ளது'' என்றும் அவர் கூறினார். நோய்த் தொற்றுப் பரவலைக் கையாள்வதற்கு இந்த மருத்துவமனைகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் திருப்தி தெரிவித்தார். டாக்டர்கள், நர்ஸ்கள், மற்றும் சுகாதாரத் துறையின் மற்ற அலுவலர்கள் என முன்களத்தில் நின்று போராடும் அனைவரின் சேவைகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். நெகிழ்வுத் தன்மை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கடமைப்பாடு ஆகியவற்றை அவர் பாராட்டினார்.

நோயாளிகளால் டாக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிக் குறிப்பிட்ட அவர், அதுபோன்ற நிகழ்வுகளில் உள்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். ``இப்போது டாக்டர்களுக்கு அனைத்து வகையிலும் அரசாங்கம் பக்கபலமாக நிற்கிறது என்பதால், அவர்கள் எந்த அச்சமும் இல்லாமல் செயலாற்ற வேண்டும். டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார அலுவலர்கள் மரியாதைக்கு உரியவர்கள், ஆதரிக்கப்பட வேண்டிய, ஒத்துழைப்பு அளிக்கபட வேண்டியவர்கள்'' என்று அமைச்சர் கூறினார்.

மேலும், கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுத்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் மேலாண்மை ஆகியவை உயர் நிலையில் கண்காணிக்கப்படுவதாகவும், மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். தொடர்புடைய அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

தனிப்பட்ட பாதுகாப்பு உடைகள் (PPE),  N95 முகக்கவச உறைகள், வென்டிலேட்டர்கள் கையிருப்பு பற்றிக் குறிப்பிட்ட அவர், ``எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால், தேவை அதிகரிக்கும் நிலையை சமாளிப்பதற்கு ஏற்ப போதிய எண்ணிக்கையில் ஏற்கெனவே ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன'' என்று கூறினார்.

நாட்டை இருளில் இருந்து பிரகாசமான ஒளிக்கு கொண்டு செல்வதற்கு மாண்புமிகு பிரதமர் திரு. மோடி விடுத்துள்ள அழைப்பை ஏற்று ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு வீடுகளில் மக்கள் முன்வந்து விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


(Release ID: 1611521) Visitor Counter : 140