எரிசக்தி அமைச்சகம்

மின் விளக்குகளை அணைத்து வைக்கும் நேரத்தில் மின்தொகுப்பு செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கான பதில்கள்

Posted On: 05 APR 2020 5:21PM by PIB Chennai

மின் தொகுப்பு செயலிழந்துவிடுமா என்பது பற்றிய அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது

கேள்வி 1: வீடுகளில் மட்டும் மின் விளக்குகளை அணைக்க வேண்டுமா அல்லது தெரு விளக்குகள், பொதுவான பகுதி மின் விளக்குகள், அத்தியாவசிய சேவை இடங்களிலும் இரவு 9 முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை அணைக்க வேண்டுமா?

பதில்: பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதைப் போல, பொது மக்கள் தாங்களாக முன்வந்து வீடுகளில் மட்டும் மின் விளக்குகளை அணைக்கலாம். தெரு விளக்குகள், பொதுவான இடங்களில் உள்ள மின் விளக்குகள், மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் நடைபெறும் இடங்களில் மின் விளக்குகளை அணைக்க வேண்டாம் என்பது மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கூறப்படுகிறது.

கேள்வி 2: வீட்டில் மின் விளக்குகளை அணைத்து வைக்கும்போது, என் வீட்டில் உள்ள மற்ற மின் சாதனங்கள் பாதுகாப்பாக இருக்குமா?

பதில்: உங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் பாதுகாப்பாக இருக்கும். மின் விசிறிகள், ஏ.சி.கள், குளிர்சாதனப் பெட்டிகள் (பிரிட்ஜ்கள்) போன்றவற்றை நீங்கள் அணைத்திட வேண்டாம். இதுபோன்ற மின்தேவை மாறுபாடுகளைக் கையாளும் வகையில் இந்திய மின்தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மின்தேவை மாறுபாடுகளால் அலைவரிசை மாற்றம் ஏதும் ஏற்பட்டால் அதைத் தாங்கும் வகையில், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பல நிலைகளில் நமது மின் தொகுப்பில் உள்ளன. எனவே, உங்களுடைய மின்சாதனங்கள் அனைத்தும் முழு பாதுகாப்பாக இருக்கும். எனவே உங்கள் தேவைக்கேற்ப அவற்றை இயல்பான பயன்பாட்டில் வைத்திருக்கலாம்.

கேள்வி 3: ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9.09 மணி வரையில் மின்தொகுப்பு ஸ்திரத்தன்மையை கையாள்வதற்குப் போதிய ஏற்பாடுகளும், நடைமுறைகளும் தயாராக இருக்கின்றனவா?

பதில் : ஆமாம். மின்தொகுப்பு ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கத் தேவையான போதுமான ஏற்பாடுகளும், தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கேள்வி 4: மின் விளக்குகளை அணைக்க வேண்டும் என்பது கட்டாயமா அல்லது விருப்பத்தின் அடிப்படையிலானதா?

பதில்: விருப்ப அடிப்படையிலானது. ஏற்கெனவே கூறியபடி, வீட்டு மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்.

கேள்வி 5: இவ்வாறு செய்வது மின்தொகுப்பில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும், வோல்ட்டேஜ் குறைவதால் மின் சாதனங்கள் பாதிக்கப்படலாம் என்று சில தகவல்கள் கூறுகின்றனவே?

பதில்: அந்த அச்சங்கள் முழுக்க தேவையற்றவை. அவையெல்லாம் சாதாரணமாக நடக்கக் கூடியவை. ஆனால் இந்திய மின் தொகுப்பு, இதுபோன்ற மின்தேவை மாறுபாடு மற்றும் அலைவரிசை மாறுதல்களை தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளின்படி கையாளும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

கேள்வி 6: நாம் மின் விளக்குகளை அணைத்து வைப்பதால் ஏற்படும் மின் தேவை ஏற்ற இறக்கத்தைக் கையாளும் அளவுக்கு நமது மின் தொகுப்பு மேலாண்மையும் தொழில்நுட்பமும் செயல்பாட்டில் உள்ளனவா?

பதில்: இந்திய மின் தொகுப்பு நவீன தொழில்நுட்பம் கொண்டது, நிலையான செயல்பாட்டுத் தன்மை கொண்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடியது. எந்தவொரு சமயத்தில்  இதுபோன்ற மின்தேவை மாறுபாடுகள் ஏற்பட்டாலும் அந்த சூழ்நிலையைக் கையாள்வதற்குத் தேவையான கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

கேள்வி 7: மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி. போன்றவை அணைத்து வைக்கப்பட வேண்டுமா அல்லது ஆன் செய்து வைக்கப்பட வேண்டுமா?

பதில்: உங்கள் வீட்டு மின் சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். மக்களின் தேவைக்கு ஏற்ப இந்த சாதனங்கள் இயல்பான பயன்பாட்டில் இருக்கலாம். இரவு 9 மணிக்கு குறிப்பாக இவற்றை அணைத்து வைக்க வேண்டும் என்று கிடையாது.

கேள்வி 8: தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு விடுமா?

பதில்: இல்லை.

உண்மையில் பொது மக்கள் பாதுகாப்புக்காக தெருவிளக்குகளை ஆன் செய்தே வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கேள்வி 9: மருத்துவமனைகள் அல்லது பிற அவசர சேவை வளாகங்கள் மற்றும் முக்கியமான வளாகங்களில் மின் விளக்குகள் அணைக்கப்படுமா?

பதில்: கிடையாது. மருத்துவமனைகள் மற்றும் பொது பயன்பாட்டு இடங்கள், உள்ளாட்சி சேவைகள், அலுவலகங்கள், காவல் நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் நடைபெறும் இடங்களில் மின் விளக்குகள் அணைக்கப்படாது. பிரதமர் விடுத்த வேண்டுகோள், வீடுகளில் மின் விளக்குகளை அணைக்க வேண்டும் என்பது மட்டுமே.

கேள்வி 10: மொத்த மின் தேவையில் வீடுகளின் மின் விளக்குகளுக்கான தேவை 20 சதவீதமாக உள்ளது. திடீரென இந்த 20 சதவீத மின்தேவை குறையும்போது, மின்தொகுப்பின் ஸ்திரத்தன்மை பாதிக்காதா? இதற்காக அமைச்சகம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

பதில்: வீடுகளுக்கான மின் தேவை 20 சதவீதத்தை விட மிகவும் குறைவு. இதுபோன்ற மின் தேவை குறைவு ஏற்படும் போது எளிதாக நிலைமையை கையாள முடியும். அதற்கான தரநிலைப்படுத்திய தொழில்நுட்ப செயல்பாட்டு நடைமுறைகள் செயல்பாட்டில் உள்ளன.

கேள்வி 11: மின் விநியோகம் துண்டிக்கப்படுமா? அப்படியானால், அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

பதில்: மின் விநியோகத்தை நிறுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை.

***


(Release ID: 1611395) Visitor Counter : 281