பிரதமர் அலுவலகம்

ஸ்பெயின் நாட்டுப் பிரதமருடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

Posted On: 04 APR 2020 9:55PM by PIB Chennai

ஸ்பெயின் நாட்டு அரசின் அதிபர் (பிரதமருக்கு இணையானவர்) மேதகு பெட்ரோ சான்சேஸ் பெரெஸ்-கேஸ்டெஜானுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார். கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச சவால்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

ஸ்பெயினில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துக் கொண்டார். மேலும், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைந்து குணமடைய வேண்டுவதாக அவர் தெரிவித்தார். ஸ்பெயின் மேற்கொண்டுவரும் அதிரடி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பதாக ஸ்பெயின் தலைவரிடம் பிரதமர் உறுதியளித்தார். தன்னால் முடிந்த உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சர்வதேச அளவில் சுகாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய காலத்தில், உலகுக்கு மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய உலகமயமாக்கல் வழிமுறை தேவை என்ற பிரதமரின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக ஸ்பெயின் பிரதமர் கூறினார்.

நோய்த்தொற்று காரணமாக, தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ள மக்களின் உளநலனையும், உடல்நலனையும் உறுதிப்படுத்துவதற்காக எளிதில் கிடைக்கும் யோகா மற்றும் பாரம்பரிய மூலிகை மருந்துகளைப் பயன்படுத்துவது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான தேவைகள் தொடர்பாக இரு நாட்டுக் குழுவினரும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.



(Release ID: 1611278) Visitor Counter : 192