பிரதமர் அலுவலகம்

பிரதமர் மற்றும் ஜெர்மனி பிரதமருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்

Posted On: 02 APR 2020 8:03PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று ஜெர்மனி பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மெர்கல்லுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இரு தலைவர்களும் கொவிட்-19 தொற்று குறித்து விவாதித்தனர், இரு நாடுகளில் தற்போது நிலவும் சூழல், சுகாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு  எதிரான போரில், சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை என்ற கவலையைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், இந்த விஷயத்தில் ஒத்துழைப்புக்கான வழிகளைக் காண வேண்டும் என ஒப்புக்கொண்டனர்.

நவீன வரலாற்றில், கொவிட் -19 தொற்று  ஒரு முக்கியமான திருப்பு முனை என்னும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் கருத்தை ஜெர்மன் பிரதமர் ஒப்புக்கொண்டார். உலகம் முழுவதற்குமான மனிதநேய நலன்களைப் பகிர்ந்து கொள்வதில், புதிய உலகமயமாக்கல் என்னும் பார்வையை உருவாக்க இந்தத் தொற்று வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஜெர்மன் பிரதமர் கூறினார்.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எளிய யோகா பயிற்சிகளையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத சிகிச்சைகளையும் பரப்பும் இந்தியாவின் அண்மைக்கால முன்முயற்சிகள் பற்றி ஜெர்மன் பிரதமருக்கு பிரதமர் திரு.மோடி தெரிவித்தார். இத்தகைய முறைகள், குறிப்பாக தற்போதைய முடக்க சூழலில் உடல் ஆரோக்கியத்தையும், மனவலிமையையும் அதிகரிக்க பயனளிக்கக்கூடியவை என்று ஜெர்மன் பிரதமர் ஒப்புக்கொண்டார்.

***


(Release ID: 1610602) Visitor Counter : 242