சுற்றுலா அமைச்சகம்

கடந்த இரண்டு நாட்களில் `Stranded in India' இணையதளம் மூலம் உதவிகோரி 500க்கும் மேற்பட்ட விசாரணைகள் / கோரிக்கைகள் சுற்றுலா அமைச்சகத்துக்கு வந்துள்ளன

Posted On: 02 APR 2020 4:24PM by PIB Chennai

சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக இந்திய அரசின் மத்திய சுற்றுலா அமைச்சகம் 2020 மார்ச் 31 ஆம் தேதி ‘Stranded in India’  என்ற இணையதளத்தைத் தொடங்கியது. முதல் இரண்டு நாட்களிலேயே அந்த தளத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட விசாரணைகள் / கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளைக் கையாள்வதற்கு வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாநில அதிகாரிகளின் ஆதரவுடன் இந்த அமைச்சகம் கூட்டு முயற்சிகள் மேற்கொண்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பு செய்து வருகிறது. விருந்தினர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் தொடர்பாக அந்தந்த தூதரகங்களுடன் அமைச்சகம் ஒருங்கிணைப்பு செய்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து வந்துள்ள பெரும்பாலான விசாரணைகள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கான வசதிகள் பற்றியதாக உள்ளது. தங்களால் திரும்பிச் செல்ல முடியாத நிலையில், விசா அனுமதி காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

முடக்கநிலை காலம் முடிந்ததும் விமான பயணம் மேற்கொள்ள வசதியாக டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்குச் சென்று சேருவதில் உள்ள பிரச்சினைகள் பற்றியும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாநில அதிகாரிகளுடன் இணைந்து சுற்றுலா அமைச்சகம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உணவு, மருந்து, வயது முதிர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான மருந்து போன்ற அவசர கால உதவிகளை அளிப்பது துரிதப்படுத்தப் பட்டுள்ளது.

முடக்கநிலை காலத்தில் இந்த விருந்தினர்களை தங்க வைத்திருக்கும் ஹோட்டல் நிர்வாகங்களுடன், இந்த அமைச்சகத்தின் ஹோட்டல் மற்றும் உணவகப் பிரிவு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. விருந்தினர்களுக்கு ஏதும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தால், அவை தொடர்பாக அவர்களுடைய நாட்டின் தூதரகத்துடன் அமைச்சகம் ஒருங்கிணைப்பு செய்து வருகிறது. இந்த விருந்தினர்கள் வெளியேறிச் செல்வதற்கு தூதரகங்கள் ஏற்பாடு செய்யும் வரையில் அவர்களுக்கான ஆதரவை நீட்டிக்க வேண்டும் என்றும், நடைமுறை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளன.

விருந்தினர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக , மத்திய, மாநில அளவில் உள்ள சுற்றுலாத் துறை அதிகாரிகள், மாநில சுற்றுலாத் துறை பிரதிநிதிகளைக் கொண்ட பணிக் குழு ஒன்றை சுற்றுலா அமைச்சகம் உருவாக்கியுள்ளது. ஒருங்கிணைப்புக் குழு வாட்ஸப், இமெயில்கள் மற்றும் தொலைபேசிகள் மூலம் இயங்கிக் கொண்டுள்ளன. தகவல் பரிமாற்றம் எளிதாக நடைபெறுவது மற்றும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதை உறுதி செய்வதற்கு இந்த அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

சுற்றுலா அமைச்சகத்தில் இப்போது 1363 என்ற ஹெல்ப்லைன் வசதி தினமும் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சமீபத்திய சரியான தகவல்கள் அளிப்பதை இந்த மையம் உறுதி செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு தயவுசெய்து strandedinindia.com அல்லது  incredibleindia.org  இணையதளத்தைப் பாருங்கள்.

 

*******



(Release ID: 1610364) Visitor Counter : 118