பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட முன்னாள் படைவீரர்கள் அணிதிரட்டப்படுகின்றனர்

”தனக்கு முன் மற்றவருக்குச் சேவை” என்ற முழக்கத்துடன் முன்னாள் படைவீரர்கள் முன்வருகின்றனர்

Posted On: 02 APR 2020 10:25AM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள சவால்களை எதிர்க்கும் போராட்டத்தில் நாடு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  இந்தச் சூழலில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் நலத்துறையானது மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தேவைப்பட்டால் உதவி அளிக்கும் வகையில் முன்னாள் படைவீரர்களின் சேவைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை எடுத்துள்ளது.  நெருக்கடி காலத்தில் விலைமதிப்பற்ற மனிதவளத்தை ஒன்று திரட்டுதல் என்ற பணியின் ஒரு அங்கமாக இது இருக்கிறது.

மாநில படைவீரர் வாரியங்கள் மற்றும் மாவட்ட படைவீரர் வாரியங்கள் இரண்டும் இணைந்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உதவும் வகையில் தன்னார்வமாக முன்வரும் முன்னாள் படைவீரர்களை முடிந்த அளவிற்கு அடையாளம் கண்டு ஒன்று திரட்டி வருகிறது.  இவர்கள் நோயாளிகளைத் தடம் அறிதல், சமூகக் கண்காணிப்பு, தனிமைப்படுத்தும் இடங்களை நிர்வகித்தல் அல்லது தங்களுக்கு ஒதுக்கித் தரப்படும் வேலைகளைச் செய்தல் போன்ற பொதுமக்களோடு தொடர்புடைய கள நடவடிக்கைகளை மேற்கொண்டு நிர்வாகத்திற்கு உதவி செய்வார்கள். 

தேசமே அறைகூவல் எழுப்பிக் கொண்டு இருக்கும் இந்தச் சூழலில் “தனக்கு முன் மற்றவருக்குச் சேவை” என்ற முழக்கத்துடன் சூழலுக்கு ஏற்ப நாடு முழுவதும் உள்ள முன்னாள் படைவீரர்கள் உதவ முன்வருவது பாராட்டுக்குரியது ஆகும். கொரோனா நோய்த்தொற்று சவாலைச் சமாளிக்க இவர்கள் தேவைப்படுகிறார்கள். பாதகமான சூழ்நிலைகளில் செயல்படுவதற்கு இவர்கள் ஏற்றவர்கள் ஆவர்.  ஏனெனில் முன்னார் படைவீரர்கள் கட்டுப்பாடு உடையவர்கள், குறிக்கோளை நிறைவேற்றும் நோக்கமுடையவர்கள், நன்கு பயிற்சி பெற்றவர்கள்.  இவர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமங்களில் பரவலாக இருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் “அரசாட்சியின் காவலர்கள்” என்ற பெயரிலான ஒரு நிறுவனத்தில் 4,200 முன்னாள் படைவீரர்கள் உள்ளனர்.  இவர்கள் அனைத்து கிராமங்களில் இருந்தும் தகவல் தரவைச் சேகரிப்பதில் உதவுகின்றனர்.  சட்டீஸ்கர் அரசு காவல்துறைக்கு உதவுவதற்கு சில முன்னாள் படைவீரர்களை பணியமர்த்தியுள்ளது.  அதே போன்று ஆந்திரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தன்னார்வ முன்னாள் படைவீரர்கள்களின் சேவை தேவை எனக் கேட்டுள்ளனர்.  உத்திரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்ட படைவீரர் நல அதிகாரிகளும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறைகளோடு தொடர்பில் உள்ளனர்.  மேலும் ஓய்வுபெற்ற இராணுவ மருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களைத் தயார் நிலையில் இருக்குமாறு கூறியுள்ளனர்.  தேவைப்பட்டால் தனிமை வார்டு / தனிமைப்படுத்தப்படும் மையங்களாகச் செயல்படும் வகையில், உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள படைவீரர் ஓய்வு இல்லங்கள் தயார் நிலையில் உள்ளன.  கோவாவில் கட்டுப்பாட்டு அறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  உள்ளூர் நிர்வாகத்திற்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதைச் செய்து தருவதற்கு ஏற்ற வகையில் முன்னாள் படைவீரர்கள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

***



(Release ID: 1610334) Visitor Counter : 164