பிரதமர் அலுவலகம்

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாளும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

வைரஸ் பரவலைத் தடுப்பதில் அனைத்து மாநிலங்களும் ஓர் அணியாகக் கூட்டாக செயல்படுவது உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது: பிரதமர்

முடக்கநிலை காலம் முடிந்ததும் மீண்டும் மக்கள் திரள்வதை பல கட்டங்களாக அனுமதிப்பதற்கான பொதுவான ஓர் அணுகுமுறையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்: பிரதமர்

உயிரிழப்புகள் குறைந்தபட்ச அளவில் இருக்க வேண்டும் என்பதே நமது லட்சியம்: பிரதமர்

நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமரின் தலைமைப் பண்புக்கு முதலமைச்சர்கள் பாராட்டு, கருத்துகள் பகிர்வு; நிஜாமுதீன் மாநாட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நோய் பரவுதலைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தனர்

நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் சமுதாயத் தலைவர்கள், சமூக நல அமைப்புகளை அணுகுமாறும், சமுதாய அளவிலான அணுகுமுறைகளைக் கையாளுமாறும் முதலமைச்சர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

Posted On: 02 APR 2020 2:32PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன்  காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

முடக்கநிலை முடிவுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக மாநிலங்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதன் காரணமாகத்தான் கோவிட்-19 பரவுதலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வைரஸ் பரவுதலைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் ஓர் அணியாக செயல்பட்டிருப்பது குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார். இருந்தபோதிலும், உலகளாவிய சூழ்நிலையில் திருப்திகரமாக மாறிவிட்டது என்று சொல்வதற்கான நிலை வெகு தொலைவில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்த அவர், சில நாடுகளில் இரண்டாவது சுற்றாக அந்த வைரஸ் தாக்குதல் ஏற்படக் கூடும் என்ற அச்சம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்தபட்ச அளவாக இருக்க வேண்டும் என்பது தான் நாட்டின் பொதுவான லட்சியமாக உள்ளது என்று பிரதமர் கோடிட்டுக் காட்டினார். அடுத்த சில வாரங்களில் மருத்துவப் பரிசோதனைகள், பின்தொடர் கண்காணிப்புகள், தனிமைப்படுத்தல் மற்றும் தனிமையாக்கி சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று பிரதமர் கூறினார். அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் கிடைக்கும் நிலையைப் பராமரித்தல், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தலின் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார். கொவிட்-19 நோயாளிகளுக்கென தனியாக, பிரத்யேகமான மருத்துவமனை வசதிகள் இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர்கள் கிடைப்பதை அதிகரிப்பதற்கு, ஆயுஷ் மருத்துவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்வது பற்றியும் மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆன்லைன் பயிற்சி அளித்தல், துணை மருத்துவ அலுவலர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். தொண்டர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுதல் போன்ற யோசனைகளையும் அவர் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தொடர்புடைய துறையினரின் பணிகள் இரட்டிப்பு வேலையாக அமைந்துவிடாமல் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். மாவட்ட அளவில் நெருக்கடி மேலாண்மை குழுக்கள் அமைக்க வேண்டியது மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளை நியமிப்பதன் அவசியம் பற்றியும் பிரதமர் பேசினார். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை நிலையங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் மாவட்ட, மாநில மற்றும் மத்திய அளவில் தகவல்களை ஒருங்கிணைப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறினார். பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி வழங்குவதை பல கட்டங்களாக அளிப்பதன் மூலம் வங்கிகளில் கூட்டம் சேருவதைத் தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றார் அவர்.

இப்போது பயிர்கள் அறுவடைக் காலமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, முடக்க நிலையில் இருந்து சில விதிவிலக்குகளை அரசு அளித்துள்ளது. ஆனால் அந்த செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பது மற்றும் முடிந்த வரையில் சமூக இடைவெளியை பராமரிப்பதை கண்காணித்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டியது அவசியம் என்றார் அவர். தானியங்களை கொள்முதல் செய்வதற்கு ஏ.பி.எம்.சி. தவிர வேறு வழிமுறைகள் பற்றியும் மாநிலங்கள் யோசிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உணவு தானியங்களைக் கொண்டு செல்லும் வாகன வசதியைப் பகிர்தலுக்கான செயலிகள் போன்ற, ஆதார வசதிகளை தொகுப்பாக சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்றும் பிரதமர் கூறினார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமரின் தலைமைப் பண்புக்காகவும், தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்காகவும் முதலமைச்சர்கள் நன்றி தெரிவித்துக் கண்டனர். முடக்கநிலை அமல் என்று உரிய காலத்தில், தைரியமாக பிரதமர் முடிவு எடுத்ததாக அவர்கள் பாராட்டினர். இந்த முடிவு காரணமாக, நாட்டில் வைரஸ் பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர்கள் கூறினர். சமூக இடைவெளியைப் பராமரித்தல், சந்தேகத்துக்குரிய நபர்களை பின்தொடர்வு செய்து கண்காணித்தல், நிஜாமுதீன் மாநாடு நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலையில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், சமுதாய அளவில் பரவாமல் தடுத்தல், மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவப் பணியாளர் தொகுப்பைப் பலப்படுத்துதல், டெலி மருத்துவத்துக்கான  வசதியை ஏற்படுத்துதல், மன நல கலந்தாய்வு வசதிகள், தேவை நிலையில் இருப்போருக்கு உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், குடிபெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களின் நலன்களை கவனித்துக் கொள்வது ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் பற்றி முதலமைச்சர்கள் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நெருக்கடியின் தீவிரத்தைக் குறைப்பதற்கு மருத்துவம் மற்றும் நிதி ஆதார வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி முதலமைச்சர்கள் பேசினர்.

முதலமைச்சர்களின் ஆலோசனைகளுக்காகவும், கள நிலவரம் குறித்த தகவல்களை தெரிவித்தமைக்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். வைரஸ் தாக்குதல் தீவிரமாக இருக்க வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் காண்பது, அந்தப் பகுதியை சுற்றி வளைப்பது, அதற்கு வெளியே வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என்று பிரதமர் கூறினார். நாடு முழுக்க அமைதி, சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். நம்பிக்கை மற்றும் நம்பிக்கைக்குரிய விஷயங்கள் மீதான தாக்குதலாக கொவிட்-19 அமைந்துவிட்டது என்றும், நமது வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிட்டது என்றும் பிரதமர் கூறினார். மாநிலம், மாவட்டம், நகரம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவில் சமுதாயத் தலைவர்கள், சமூக நல அமைப்புகளின் உதவியை நாடி, நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் ஒன்றுபட்ட சமுதாய அளவிலான அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

முடக்கநிலை காலம் முடிந்ததும் மீண்டும் மக்கள் கூட்டமாக வந்து சேருவதை பல கட்டங்களாக அமையும்படி உறுதி செய்வதற்கான பொதுவான அணுகுமுறையை உருவாக்க வேண்டியதும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். இதுகுறித்து மாநிலங்கள் ஆலோசித்து, அணுகுமுறைகளை அனுப்பி வைக்கலாம் என்றார் அவர். கொவிட்-19 பரவுதலைக் கட்டுப்படுத்துவதில் சமூக இடைவெளியைப் பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

சில மாநிலங்களில் முடக்கநிலையை இன்னும் தீவிரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களை மாவட்ட அளவில் சிறப்பாக அமல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு, நிஜாமுதீன் மாநாட்டு நிகழ்வைத் தொடர்ந்து நோய் பரவும் நிலை, மேற்கொண்டு வைரஸ் பரவுதல் ஏற்பட்டால் அதைக் கையாள்வதற்கான ஆயத்த நிலைகள், அதிக அளவில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் தொடர்பு இணைப்பைத் துண்டிப்பதில் உள்ள செயல்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தகவல்களைத் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், ஐ.சி.எம்.ஆர். டைரக்டர் ஜெனரல் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். மாநில முதலமைச்சர்களுடன், அந்தந்த மாநிலங்களின் உள்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

 

*****


 



(Release ID: 1610296) Visitor Counter : 204