பாதுகாப்பு அமைச்சகம்
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு அமைச்சகத்தின் முயற்சிகளை பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்
சிவில் அதிகாரிகளுக்கு உதவும் முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்
Posted On:
01 APR 2020 3:25PM by PIB Chennai
கோவிட்-19 தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு நிறுவனங்கள் அளித்து வரும் உதவிகள் குறித்து இன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் காணொளி காட்சி மூலம் ஆய்வு செய்தார். பாதுகாப்பு இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், கப்பல்படை தலைமைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதௌரியா, இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே, பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் டாக்டர் அஜய் குமார், பாதுகாப்பு உற்பத்தி செயலாளர் திரு ராஜ்குமார், முன்னாள் படைவீரர் நலம் செயலாளர் திருமதி சஞ்சீவனீ குட்டி, பாதுகாப்பு நிதித்துறை செயலளார் திருமதி கார்கி கவுல், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி & அபிவிருத்திக் கழக தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி, இராணுவ மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குனர் லெப் ஜெனரல் அனுப் பானர்ஜி, பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள், இன்னும் மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் காணொளி காட்சி மூலம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
வெளியேற்றுதல், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மருத்துவப் பராமரிப்பு வழங்குதல், கிருமி நாசினிகள், முகக்கவசங்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) போன்ற மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி & ஆராய்ச்சியில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளில் பல்வேறு படைப்பிரிவுகள், அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் இதர அமைச்சகங்கள் / நிறுவனங்களுடன் நெருக்கமாக இணைந்து மேற்கொள்ளும் தங்களது முயற்சிகள் மற்றும் பணிகளை இரண்டு மடங்கு அளவிற்கு அதிகரிக்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கோவிட்-19 சவாலைச் சமாளிக்க பிரத்யேக மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் 9,000 மருத்துவனை படுக்கைகள் தயாராக உள்ளன என்றும் அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார். வெளியேற்றப்பட்ட சுமார் 1,000 பேர் ஜெய்சல்மார், ஜோத்பூர், சென்னை, மனேஸ்வர், ஹிண்டான் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் தனிமைப்படுத்துதல் காலகட்டம் ஏப்ரல் 7, 2020 அன்று முடிகிறது. கப்பல்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனைச் செய்வதற்கு கப்பல்படை கப்பல்கள் தயாராக உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தார். உள்ளூர் சிவில் நிர்வாகத்தின் தேவைகளுக்கு ஏற்ற உதவிகளையும் கப்பல் படையினர் அளித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விமானப்படைத் தளபதி ஏர்.சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதௌரியா தோராயமாக 25 டன் எடை அளவுள்ள மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் பணியில் கடந்த ஐந்து நாட்களில் விமானப்படை விமானங்கள் பல முறை பயணப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார். அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும் உறுதி செய்து கொண்டு அவசரக்கால பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே சிவில் நிர்வாகத்துக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு 8,500க்கும் அதிகமான மருத்துவர்களும் துணை ஊழியர்களும் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தார். அண்டை நாடுகளுக்கும் உதவ வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங்கின் அறிவுறுத்தலைச் சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி நேபாள நாட்டுக்கு மருத்துவ உபகரணங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு ஆர்&டி துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓ (DRDO) தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி திரு ராஜ்நாத் சிங்கிடம் டிஆர்டிஓ ஆய்வுக்கூடங்கள் 50,000 லிட்டர் கிருமி நாசினியைத் தயாரித்து உள்ளன என்றும் அவை தில்லி காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் பிரிவுகளுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தார். மேலும் அவர் ஒரு லட்சம் லிட்டர் கிருமி நாசினிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு உள்ளன என்று கூறினார். போர்க்கால அடிப்படையில் ஐந்து அடுக்கு நானோ தொழில்நுட்பத்திலான என்99 முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். இதில் 10,000 முகக் கவசங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டன என்றும் விரைவில் ஒரு நாள் உற்பத்தி 20,000 முகக் கவசங்கள என்ற அளவிற்கு அதிகரிக்கப்படும் என்றும் கூறினார். டிஆர்டிஓ ஆய்வுக்கூடங்கள் தில்லி காவல்துறைக்கு 40,000 பிற வகை முகக் கவசங்களை விநியோகித்து உள்ளன. அதிகாரம் அளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக உள்ள டிஆர்டிஓ செயலாளர் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து மருத்துவ உபகரணங்களின் தேவை குறித்து ஒருங்கிணைப்பு பணிகளைச் செய்து வருகிறார். மற்றொரு டிஆர்டிஓ ஆய்வுக்கூடம் ஒரு நாளைக்கு 20,000 பிபிஇ தயாரிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து உள்ளது. ஒரு வென்ட்டிலேட்டரை நான்கு நோயாளிகள் ஒரே சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறிய மாற்றங்களைச் செய்யும் நடவடிக்கையில் டிஆர்டிஓ ஈடுபட்டு உள்ளது.
------
(Release ID: 1609997)
Visitor Counter : 224