உள்துறை அமைச்சகம்

தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் தொழுகை கூட்டத்தில் பங்கேற்று கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டடவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்த அரசு உறுதி

Posted On: 31 MAR 2020 6:00PM by PIB Chennai

தில்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் 21-ம் தேதி பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய தெலங்கானாவைச் சேர்ந்தவர்களுக்கு கோவிட்-19 தொற்று பாதித்திருப்பதைத் தொடர்ந்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 தாக்க வாய்ப்புள்ள இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தும் விதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் தில்லி காவல்துறை ஆணையருக்கு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான அறிவுரைகள், மாநில காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு மார்ச் 28, 29 தேதிகளில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தில்லி நிஜாமுதீன் மார்க்கசில் தங்கியிருந்த அந்த அமைப்பின் தொண்டர்களை மாநில அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுமாறு கேட்டுக்கொண்டனர். மார்ச் 29 வரை, அந்த அமைப்பைச் சேர்ந்த 162 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு ,அவர்கள் தனிமை முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை, 1339 தப்லிக் ஜமாத் ஊழியர்கள் நரேலா, சுல்தான்புரி, பக்கர்வாலா தனிமை முகாம்களுக்கும், எல்என்ஜெபி, ஆர்ஜிஎஸ்எஸ், ஜிடிபி, டிடியு மருத்துவமனைகளுக்கும், எய்ம்ஸ் ஜஜ்ஜார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தற்போது கோவிட்-19 தொற்று குறித்த பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக, தப்லிக் அணியைப் போல இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர், சுற்றுலா விசா மூலம் வருவதுண்டு. சுற்றுலா விசாவில் வருபவர்கள், மத ரீதியிலான செய்லபாடுகளில் ஈடுபடக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் ஏற்கனவே, அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டு தப்லிக் ஜமாத் ஊழியர்களின் விசா பிரிவுகளை மாநில காவல்துறை ஆய்வு செய்து, விசா விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

*****



(Release ID: 1609848) Visitor Counter : 219