ரெயில்வே அமைச்சகம்
தனிமைப்படுத்துதல் தேவைகளுக்காக 3.2 லட்சம் படுக்கைகள் வரை இடமளிக்கும் வகையில் 20000 பெட்டிகளை மாற்றியமைக்க இந்திய ரயில்வே தயார்
கொவிட்-19 நோயாளிகளுக்காக தயார் செய்யப்படும் தனிமைப்படுத்துதல் பெட்டிகளில் தேவையான அனைத்து வசதிகள்
80,000 படுக்கைகள் வரை இடமளிக்கும் வகையில் 5,000 பெட்டிகள் முதல் கட்டமாகத் தயார்
பல்வேறு மண்டலங்களில் பெட்டிகள் மாற்றியமைக்கப் படுகின்றன
Posted On:
31 MAR 2020 2:59PM by PIB Chennai
கொவிட் 19 தயார் நிலையின் ஒரு பகுதியாக, நாடெங்கிலும் உருவாக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்துதல் வசதிகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் 20000 ரயில் பெட்டிகளை, தனிமைப்படுத்துதல் பெட்டிகளாக மாற்றியமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ராணுவ மருத்துவ சேவைகள், பல்வேறு ரயில்வே மண்டலங்களில் உள்ள மருத்துவத் துறை, ஆயுஷ்மான் பாரத், இந்திய அரசின் சுகாதார அமைச்சகம், ஐந்து மண்டல ரயில்வேக்களுடன் இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தனிமைப்படுத்துதல் பெட்டிகளுக்கான மாதிரிகளை ஐந்து ரயில்வே மண்டலங்கள் ஏற்கனவே தயார் செய்துள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட இந்த 20000 பெட்டிகள் தனிமைப்படுத்துதல் தேவைகளுக்காக 3.2 லட்சம் படுக்கைகள் வரை கொண்டிருக்கும். ஆரம்பக்கட்டமாக, 5000 பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகளாக மாற்றும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. 80000 படுக்கைகளுக்கு வரை இந்த 5000 பெட்டிகள் இடமளிக்கும். ஒரு பெட்டியில் 16 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குளிர் சாதன வசதி இல்லாத ஐசிஎஃப் (இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை) பெட்டிகளை மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகளாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய முறை கழிப்பிடம் மட்டுமே குளியல் அறையாக மாற்றப்படும். அதில் வாளி, குவளை, சோப் அளிப்பான் போன்றவை பொருத்தப்படும். கழுவும் பேசின்களில் தூக்கும் முறையிலான கைப்பிடி உள்ள குழாய்கள் பொருத்தப்படும். பக்கெட்டில் தண்ணீர் நிரப்பிக்கொள்ள அதே போன்றதொரு குழாய் சரியான உயரத்தில் பொருத்தப்படும்.
எட்டு படுக்கைகள் உள்ள அறைகளின் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்குமான வழிகளை மறைக்கும் விதத்தில் குளியல் அறைக்கு அருகில் உள்ள சிறு அறையில் வழியின் குறுக்காக இரண்டு மருத்துவமனை/நெகிழித் திரைச்சீலைகள் பொருத்தப்படும். சேமிப்பு மற்றும் துணை மருத்துவப்பகுதிகளாக இந்த சிறு அறை பயன்படுத்தப்படும். மருத்துவத் துறையால் அளிக்கப்படும் இரண்டு பிராண வாயு உருளைகளுக்காக இந்த சிறு அறையின் பக்கவாட்டில் தேவையான பற்று இரும்புகள் (கிளாம்ப்) பொருத்தப்படும்.
ஒவ்வொரு பகுதியிலும், நடுப்படுக்கைகள் அகற்றப்படும். ஒவ்வொரு மெத்தைக்கும் இரண்டு என்னும் வகையில், மருத்துவ சாதனத்தை வைப்பதற்காக கூடுதல் பாட்டில் பிடிகள் அனைத்து கேபின்களிலும் பொருத்தப்படும். ஒவ்வொரு கேபினுக்கும் கூடுலாக மூன்று சட்டை மாட்டி வைக்கும் ஆணி இறுக்குகள் இரண்டு பொருத்தப்படும். கொசுக்கள் உள்ளே வருவதைத் தடுப்பதற்கும், சரியான வெளிச்சம் கிடைப்பதற்கும் ஜன்னல்களில் கொசு வலை பொருத்தப்படும். கால்களைப் பயன்படுத்தி திற்ந்து மூடக்கூடிய வகையிலான சிகப்பு, நீலம் மற்றும் மஞ்சள் நிறக் கோடுகள் கொண்ட மூடிகளுடைய மூன்று குப்பைத் தொட்டிகள் ஒவ்வொரு அறைக்கும் வழங்கப்படும்.
பெட்டிக்குள் வெப்பத்தின் தாக்கத்தைத் தடுக்கும் விதமாக, மூங்கில்/சணல் பாய்கள் பெட்டியின் கூரை மீது அனைத்துப் பகுதிகளிலும், ஜன்னலுக்கு கீழேயும் ஒட்டப்படும். மடிக் கணினி மற்றும் கை பேசிக்கு மின்னூட்டம் அளிக்கும் முனையங்கள் அனைத்தும் வேலை செய்யும். எப்போது தேவைப்பட்டாலும் அப்போது அனைத்து வசதிகளோடு கிடைக்குமாறு பெட்டிகள் உறுதி செய்ப்பட வேண்டும்.
5000 பெட்டிகளில் 473 பெட்டிகள் மாற்றி அமைப்பதற்காக தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
(Release ID: 1609637)
Visitor Counter : 287