சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்—19 அண்மைத் தகவல்: பிபிஇ உபகரணங்கள், என்95 முகக்கவசங்கள் மற்றும் வென்ட்டிலேட்டர்கள் பயன்பாட்டுக்குக் கிடைத்தல்

Posted On: 30 MAR 2020 3:45PM by PIB Chennai

நாட்டில் கோவிட்-19 வராமல் முன்கூட்டியே தடுத்தல், கட்டுக்குள் வைத்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பணிகள் உயர்மட்டக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இதற்காக மாநிலங்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு வகையான நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டுள்ளன.  பிபிஇ உபகரணங்கள், முகக்கவசங்கள் மற்றும் வென்ட்டிலேட்டர்கள் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த இன்றியமையாத பொருள்களைத் தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் தயாரித்து வருகின்றன.  தளவாடத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் மருத்துவப் பணியாளர்களுக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்க முயற்சி எடுத்து வருகின்றன.  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வென்ட்டிலேட்டர்களைத் தயாரிக்க இருக்கிறது.  இந்த நோய்த்தொற்று நெருக்கடியின் போது மருந்துப்பொருள்கள் பற்றாக்குறை ஏற்படாது என மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அரசுக்கு உறுதி அளித்துள்ளன.  வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கூட வென்ட்டிலேட்டர்களை வடிவமைத்துத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.  மருத்துவப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் எந்த ஒரு நெருக்கடியையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருக்கிறார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) பயன்படுத்தப்படுகின்றன.  அவை நம் நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை.  எதிர்வரும் காலத்தில் பிபிஇ உபகரணங்களுக்கான அதிக அளவுத் தேவையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அவற்றை நம் நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஜவுளி அமைச்சகமும்,  சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு அமைச்சகமும் இணைந்து இந்த முயற்சியை நிறைவேற்ற இணைந்து செயல்படுகின்றன.  உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சூழலுக்கு ஏற்ப செயல்படத் தொடங்கி உள்ளனர். இதுவரை 11 உற்பத்தியாளர்கள் தரப்பரிசோதனைகளைப் பூர்த்தி செய்துள்ளனர்.  அவர்களுக்கு 21 லட்சம் ஒற்றை அங்கி பிபிஇ-க்கள் தயாரிப்பதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.  தற்போது அவை தினமும் 6-7,000 ஒற்றை அங்கிகளை விநியோகித்து வருகின்றன.  அடுத்த வாரத்திற்குள் இந்த எண்ணிக்கையானது ஒரு நாளைக்கு 15,000 என அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இன்று மேலும் ஒரு உற்பத்தியாளர் இதற்காகத் தகுதி பெற்றுள்ளார்.  அவருக்கு 5 லட்சம் ஒற்றை அங்கிகள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 3.34 லட்சம் பிபிஇ-க்கள் உள்ளன.  ஏற்கனவே சுமார் 60,000 பிபிஇ-க்களை கொள்முதல் செய்து இந்திய அரசு விநியோகித்து உள்ளது.  இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சீனாவில் இருந்து 10,000 பிபிஇ-க்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்து அவை பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.  மேலும் நன்கொடையாகப் பெற்ற 3 லட்சம் பிபிஇ ஒற்றை அங்கிகள் ஏப்ரல் 4இல் வந்து சேரும். தளவாடத் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு 3 லட்சம் பிபிஇ-க்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அயல்நாட்டு பிபிஇ உபகரணத் தயாரிப்பு தொழிற்சாலைகள் உலகளவில் அதிகரித்து வரும் தேவையை எதிர்கொண்டு வருகின்றன.  அத்தகைய தொழிற்சாலைகளை வெளியுறவு அமைச்சகம் அணுகி வருகிறது.  ஆன்லைன் மூலம் செயல்படும் ஒரு சிங்கப்பூர் நிறுவனம் 10 லட்சம் பிபிஇ உபகரணங்களை விநியோகிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றைப் பெறுவதற்கான ஆணை, வெளியுறவு அமைச்சகம் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.  கொரியாவில் உள்ள மற்றொரு விநியோகஸ்தரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  அவருக்கு வியட்நாம் மற்றும் துருக்கியில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் இருக்கிறது. இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு 1 லட்சம் பிபிஇ உபகரணங்களுக்கு மேல் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளது.  20 லட்சம் பிபிஇ உபகரணங்களை விநியோகிக்க இந்த நிறுவனத்துக்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

என்95 முகக்கவசங்கள் இரண்டு உள்நாட்டுத் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படுகின்றன.  தற்போதைய நிலையில் அவர்களால் ஒரு நாளைக்கு 50,000 முகக்கவசங்களை மட்டுமே விநியோகிக்க முடியும். அடுத்த வாரத்திற்குள் அந்த நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 1லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கும் அளவிற்கு தங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உள்ளன. ஒரு நாளைக்கு 20,000 என்99 முகக்கவசங்கள் தயாரிப்பதற்கு உள்ளூர் தயாரிப்பாளர்களுடன் டிஆர்டிஓ (DRDO) இணைந்து செயலாற்றி வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தேதியில் நாட்டில் உள்ள மருத்துவமனைகள் 11.95 லட்சம் என்95 முகக்கவசங்களை இருப்பில் வைத்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில் கூடுதலாக 5 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  இன்றைய தினம் 1.40 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

வென்ட்டிலேட்டர்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு தேவை.  ஏனெனில் இத்தகைய நோயாளிகளுக்கு குறுகிய கால சுவாசநோய் (ARDS) ஏற்படும்.  அதற்கு வென்ட்டிலேட்டர்கள் அவசியம் தேவை.  இன்றைய தேதியில் 20க்கும் குறைவான கோவிட்-19 நோயாளிகள் மட்டுமே வென்ட்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர்.  இது தவிர, கோவிட்-19 நோயாளிக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 14,000க்கும் அதிகமான வென்ட்டிலேட்டர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

நொய்டாவில் உள்ள ஆக்வா ஹெல்த்கேர் என்ற உள்நாட்டுத் தயாரிப்பு நிறுவனம் இந்த நிலைமைக்கேற்ற வென்ட்டிலேட்டர்களைத் தயாரிக்கும் தகுதி உடையதாக இருப்பதால் அந்த நிறுவனத்திற்கு 10,000 வென்ட்டிலேட்டர்கள் தயாரித்து வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் மாதம் 2ஆம் வாரத்தில் இருந்து இந்த நிறுவனத்திடம் இருந்து வென்ட்டிலேட்டர்களின் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 30,000 வென்ட்டிலேட்டர்களுக்கான ஆணை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து இந்த முயற்சியை நிறைவேற்றும். இந்திய வாகனத் தயாரிப்பாளர்களும் வென்ட்டிலேட்டர்கள் தயாரிப்பதற்குத் தயாராகி வருகின்றனர்

இதற்கு இடையில் ஹேமில்ட்டன், மின்ட்ரே மற்றும் ட்ரேஜெர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வென்ட்டிலேட்டர்கள் விநியோகிக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. வெளியுறவு அமைச்சகம் 10,000 வென்ட்டிலேட்டர்கள் வாங்க சீன விநியோகஸ்தர்களை அணுகி வருகிறது.



(Release ID: 1609306) Visitor Counter : 304