தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மாநிலங்களுக்கு இடையில் மக்கள் போக்குவரத்து இல்லாதிருப்பதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடிபெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கு அந்தந்தப் பகுதியிலேயே ஏற்பாடு செய்வதுடன், உரிய காலத்தில் ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும்

மாணவர்கள், தொழிலாளர்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவோர் மீது நடவடிக்கை

Posted On: 29 MAR 2020 1:44PM by PIB Chennai

மத்திய அமைச்சரவை செயலரும், உள்துறை அமைச்சகமும் மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். நேற்று மாலையிலும் இன்று காலையிலும் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன் அமைச்சரவைச் செயலர் மற்றும் உள்துறைச் செயலர் காணொளிக் காட்சி மூலம் கலந்தாய்வு நடத்தினர்.

பெரும்பாலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வழிகாட்டுதல்கள் செம்மையாக அமல் செய்யப்பட்டு வருவதாகக் கலந்தாய்வின் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும்படி செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் நிலைமை கண்காணிக்கப்பட்டு, தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இருந்தபோதிலும், நாட்டின் சில பகுதிகளில் குடிபெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் திரும்பச் செல்வது தொடர்பான சில நகர்வுகள் கவனத்திற்கு வந்துள்ளன. மாவட்ட மற்றும் மாநில எல்லைகள் உரியவாறு மூடப்பட வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நகரங்களுக்கு இடையிலோ அல்லது நெடுஞ்சாலைகளிலோ மக்கள் போக்குவரத்து இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சரக்குகள் போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். டி.எம். சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்களை அமல் செய்வதற்கு மாவட்ட மாஜிஸ்ட்ரேட்களும், காவல் கண்காணிப்பாளர்களும் தான் தனிப்பட்ட பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஏழைகள் மற்றும் உதவி தேவையான நிலையில் இருப்பவர்களுக்கு உணவு அளிப்பதற்குப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், குடிபெயர்ந் வந்திருக்கும் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய பணியிடத்திலேயே இதற்கான ஏற்பாடு செய்வதும் இதில் அடங்கியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக எஸ்.டி.ஆர்.எப். நிதியைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு நேற்று உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இந்தத் தலைப்பின் கீழ் மாநிலங்களில் போதிய நிதி உள்ளது.

தொழிலாளர்கள் வேலைபார்த்த இடங்களில் இருந்து, பிடித்தம் எதுவும் இல்லாமல் முடக்கநிலை காலத்திற்கும் அவர்களுக்கு உரிய காலத்தில்  ஊதியம் கிடைப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த காலக்கட்டத்திற்கு தொழிலாளர்களிடம் இருந்து வீட்டு வாடகை கேட்கக் கூடாது. தொழிலாளர்கள் அல்லது மாணவர்களை அவர்கள் உள்ள வளாகங்களில் இருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முடக்கநிலை விதிகளை மீறி, அந்த காலக்கட்டத்தில் பயணம் செல்பவர்கள் அரசு தனிமைப்படுத்தல் மையங்களில் குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு ஆளாக வேண்டியிருக்கும். தனிமைப்படுத்தல் காலத்தில் அவர்களை எப்படி கண்காணிக்க வேண்டும் என்பது குறித்த விரிவான அறிவுறுத்தல்கள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த 3 வார கால முடக்கநிலை உத்தரவை கடுமையாகக் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் வலியுறுத்தப்பட்டது. அனைவரின் பொது நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

****
 



(Release ID: 1609016) Visitor Counter : 220