பிரதமர் அலுவலகம்

29.03.2020 அன்று ஒலிப்பரப்பான `மனதின் குரல் 2.0’, 10ஆவது பகுதியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 29 MAR 2020 12:42PM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே, பொதுவாக மனதின் குரலில் நான் பல விஷயங்களை உங்களுக்காகக் கொண்டு வந்து தருவேன்.  ஆனால் இன்றோ, நாட்டிலும் சரி, உலகில் உள்ளோர் மனங்களிலும் சரி, ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் வியாபித்து இருக்கிறது – அது கரோனா உலகளாவிய பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பயங்கரமான பிரச்சனை.  இந்த நிலையில், நான் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினேன் என்று சொன்னால் அது உசிதமாக இருக்காது.  மிகவும் மகத்துவமான விஷயங்கள் குறித்துப் பேச விழைகிறேன், ஆனால் இன்று இந்த பெருந்தொற்று பீடித்திருக்கும் வேளையில் இது தொடர்பான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது.  முதற்கண் நான் என் நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் மன்னிப்புக் கோருகிறேன்.  நீங்கள் அனைவரும் என்னைக் கண்டிப்பாக மன்னிப்பீர்கள் என்று என் ஆன்மா உறுதிபடத் தெரிவிக்கிறது; ஏனென்றால் எடுக்கப்பட்டிருக்கும் சில முடிவுகளால் உங்களுக்குப் பலவிதமான சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றன, அதிலும் குறிப்பாக எனது ஏழை சகோதர சகோதரிகளைப் பார்க்கும் போது, ’இவர் என்ன பிரதம மந்திரி, நம்மையெல்லாம் இப்படிப்பட்ட சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாரே, என்று உங்களுக்குத் தோன்றலாம்.  உங்களிடத்தில் நான் விசேஷமான மன்னிப்பை வேண்டுகிறேன்.  பலர் என்னிடத்தில் கோபமாக இருக்கலாம், இப்படி வீட்டிற்குள்ளேயே அவர்களை அடைத்து வைத்திருப்பது போல வைத்திருக்கிறேனே என்று வருத்தம் இருக்கலாம்.  உங்கள் சங்கடங்கள் எனக்குப் புரிகின்றன, உங்கள் சிரமங்கள் எனக்குத் தெரிகின்றன ஆனால், பாரதம் போன்ற 130 கோடி மக்கள் கொண்ட தேசம் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராட வேண்டுமென்றால் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.  கொரோனாவுக்கு எதிரான போர் என்பது, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே நடைபெறும் போர்; இந்தப் போரில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதாலேயே இத்தகைய தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.  யாருமே மனம் ஒப்பி இத்தகைய கடினமான முடிவுகளை எடுக்கவில்லை ஆனால், உலகின் நிலையைப் பார்க்கும் வேளையில் இந்த ஒரு வழிதான் மிஞ்சியது.  உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.  உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்கள், கடினங்கள் ஆகியவற்றுக்காக மீண்டும் ஒருமுறை நான் உங்களிடத்தில் மன்னிப்புக் கோருகிறேன்.  நண்பர்களே, ‘एवं एवं विकारः, अपी तरुन्हा साध्यते सुखं’ ”ஏவம் ஏவம் விகார:, அபி தருன்ஹா சாத்யதே சுகம்”, அதாவது,நோயையும் அதன் பரவலையும் தொடக்கத்திலேயே எதிர்கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள்.  பின்னர் நோய் கட்டுப்படுத்த இயலாத நிலையில், இதற்கான சிகிச்சை கடினமானதாகி விடும்.  இன்று இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு இந்தியரும் இதைத் தான் புரிந்து வருகிறார்கள்.  சகோதர சகோதரிகளே, தாய்மார்களே, பெரியோர்களே, கரோனா வைரஸானது உலகையே கைது செய்திருக்கிறது.  இது அறிவுடையோர், விஞ்ஞானிகள், ஏழைகள், பணக்காரர்கள், பலவீனமானோர், சக்தி படைத்தோர் என அனைவருக்கும் சவாலாக உருவெடுத்திருக்கிறது.  நாடுகளைப் பிரிக்கும் எல்லைகளுக்கு எல்லாம் இது கட்டுப்படுவதும் இல்லை, பிராந்தியம் பார்த்துப் பீடிப்பதும் இல்லை, தட்பவெப்பம் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை.  இந்த வைரஸ் கிருமியானது மனிதனை உருக்குலைத்து, அவனுக்கு முடிவு கட்டுவது ஒன்றிலேயே குறியாக இருக்கிறது என்பதால், அனைவரும், ஒட்டுமொத்த மனித சமுதாயமும் இந்த வைரஸ் கிருமிக்கு ஒரு முடிவுகட்ட, ஒன்றிணைந்து உறுதி கொள்ள வேண்டும்.  தாங்கள் முழு ஊரடங்கைப் பின்பற்றி வருவதால், மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பதாகச் சிலர் கருதலாம்.  ஐயா, தயவு செய்து இப்படிப்பட்ட பிரமை இருந்தால், இதை தூர விலக்கி வைக்கவும்.  இந்த முழுமையான ஊரடங்கு உங்களை உங்களிடமிருந்து காப்பாற்ற, உங்களைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்ற, உங்கள் குடும்பத்தாரைக் காப்பாற்ற.  இனிவரும் பல நாட்களுக்கு நீங்கள் இதே போன்ற பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், இலக்குவன் கிழித்த கோட்டைக் கடக்காமல் இருக்க வேண்டும்.  நண்பர்களே, யாருமே சட்டத்தை உடைக்க விரும்பவில்லை, விதிமுறைகளைத் தகர்க்க விரும்பவில்லை என்பதை நானறிவேன்; ஆனால் ஏன் சிலர் இப்படிச் செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இன்னும் நிலைமையின் தீவிரம் பற்றி புரியவில்லை.  இப்படிப்பட்டவர்களிடம் நான் கூற விரும்புவதெல்லாம், முழு ஊரடங்கின் விதிமுறைகளை நீங்கள் தகர்த்தீர்கள் என்று சொன்னால், கொரோனாவிடமிருந்து தப்புவது இயலாத காரியமாகி விடும்.  உலகிலே பலரிடம் இத்தகைய தவறான கற்பனை இருந்தது.  இன்று அப்படிப்பட்டவர்கள் எல்லோரும் கழிவிரக்கத்தில் காலம் கழிக்கிறார்கள்.

நண்பர்களே, ‘आर्योग्यम परं भागय्म स्वास्थ्यं सर्वार्थ साधनं’ ‘ஆரோக்கியம் பரம் பாக்யம் ஸ்வாஸ்த்யம் சர்வார்த்த சாதனம்’ என்று ஒரு பொன்மொழி வழக்கில் உண்டு; அதாவது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதே இதன் பொருள்.  உலகிலே அனைத்து சுகங்களைத்தரும் ஒரே வழி என்றால் அது உடல்நலம் தான்.  இத்தகைய சூழ்நிலையில் விதிமுறைகளைத் தகர்ப்பதால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறீர்கள்.  நண்பர்களே, இந்தப் போரில் பல வீரர்கள் வீட்டில் இருந்தபடி அல்லாமல், தங்கள் வீடுகளுக்கு வெளியே இந்த வைரஸ் கிருமியோடு போராடி வருகிறார்கள்.  சிறப்பாக நமது செவிலித் தாய்மார்கள், இப்படிப்பட்ட செவிலியர் பணியில் ஈடுபடும் நமது சகோதரர்கள், மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகிய இவர்கள் தாம் நமது முன்னணி வீரர்கள்.  இத்தகைய நமது நண்பர்கள் கரோனாவைத் தோற்றோடச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இன்று நாம் அவர்களிடமிருந்து உத்வேகம் அடைய வேண்டும்.  கடந்த நாட்களில் அப்படிப்பட்ட சிலரோடு தொலைபேசி வாயிலாக உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அவர்களுக்கு நான் ஊக்கமளித்தேன், அவர்களுடன் உரையாடியதில் எனக்கும் ஊக்கம் உண்டானது.  அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.  இந்த முறை அப்படிப்பட்ட நண்பர்களுடைய அனுபவங்கள், அவர்களுடனான உரையாடல் ஆகியவற்றிலிருந்து சிலவற்றை இந்த முறை மனதின் குரலில் உங்களோடு பகிர வேண்டும் என்று நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்.  முதலாவதாக நம்மோடு இணையவிருக்கிறார் ராம்கம்பா தேஜா அவர்கள்.  இவர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர், வாருங்கள் இவருடைய அனுபவம் என்ன, தெரிந்து கொள்வோமா? சொல்லுங்க ராம்....

ராம்கம்பா தேஜா:  வணக்கம் ஐயா.

மோதிஜி:  ராம் அவர்கள் தானே பேசறீங்க?

ராம்கம்பா தேஜா:  ஆமாங்க, ராம் தான் பேசிட்டு இருக்கேன்.

மோதிஜி: சரி ராம், வணக்கம்.

ராம்கம்பா தேஜா: வணக்கம், வணக்கம்.

மோதிஜி:  கொரோனா வைரஸ் பரவியிருக்கற இந்த வேளையில நீங்க அயல்நாடு போயிருந்ததா கேள்விப்பட்டேனே, அப்படியா?

ராம்கம்பா தேஜா:  ஆமாங்கய்யா.

மோதிஜி:  சரி, நான் உங்ககூட பேச விரும்பினேன்.  சொல்லுங்க ராம், இப்படிப்பட்ட தீவிரமான சங்கடகாலத்தில அயல்நாட்டில இருந்திருக்கீங்க, உங்க அனுபவத்தை நான் தெரிஞ்சுக்க விரும்பறேன்.

ராம்கம்பா தேஜா:  நான் தகவல்தொழில்நுட்பத் துறையில பணியாற்றுற ஒரு ஊழியர்.  வேலை காரணமா சில சந்திப்புக்கள் பொருட்டு நான் துபாய் போயிருந்தேன்.  நாடு திரும்பினவுடனேயே எனக்கு காய்ச்சல் ஏற்பட்டிருச்சு.  ஒரு 4-5 நாட்களுக்குப் பிறகு மருத்துவர்கள் எனக்கு கரோனாவுக்கான பரிசோதனை செஞ்சு பார்த்தப்ப, எனக்கு நோய் பீடிப்பு இருந்ததா கண்டுபிடிச்சாங்க.  உடனடியா என்னை ஹைதராபாதில இருக்கற காந்தி அரசு மருத்துவமனையில சேர்த்தாங்க.  இதன் பிறகு தொடர்ந்து 14 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நான் குணமாயிட்டேன், இப்ப என்னை வீட்டுக்கும் அனுப்பிட்டாங்க.  இது எல்லாமே கொஞ்சம் பயமாத் தான் இருந்திச்சு.

மோதிஜி:  அதாவது நோய் பீடிப்பு பத்தி உங்களுக்குத் தெரிய வந்திச்சு, ஆனா அதுக்கு முன்னாலயே இது எத்தனை பயங்கரமானதுன்னு தெரிஞ்சிருந்திச்சா, ரொம்ப கஷ்டமா இருந்திருக்குமே!!

ராம்கம்பா தேஜா:  ஆமாங்கய்யா.

மோதிஜி: அப்ப இந்தத் தொற்று ஏற்பட்டிருக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்ச அந்தக் கணத்தில உங்க உணர்வு என்னவா இருந்திச்சு?

ராம்கம்பா தேஜா:  முதல்ல நான் கொஞ்சம் பயந்தேன் தான், எனக்கு இந்த மாதிரி ஆயிப் போச்சுன்னு என்னால நம்பவே முடியலை, இது எப்படி எனக்கு வரலாம்னு தான் நினைச்சேன்.  ஏன்னா இந்தியாவுல இது அப்ப 2-3 பேர்களுக்குத் தான் வந்திருந்திச்சு, யாருக்கும் இதுபத்தி அதிகம் தெரிஞ்சிருக்காத நேரம்.  மருத்துவமனையில என்னை அனுமதிச்ச போது என்னை மருத்துவரீதியா தனிமைப்படுத்தி இருந்தாங்க.  முத 2-3 நாட்கள் அது பாட்டுக்குப் போயிருச்சு. ஆனா அங்க இருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் எல்லாரும் ரொம்ப இனிமையா நடந்துக்கிட்டாங்க. ஒவ்வொரு நாளும் என்னைக் கூப்பிட்டு என்கூட பேசுவாங்க, எனக்கு மனோதைரியத்தை அளிப்பாங்க, ஒண்ணும் ஆகாது, சீக்கிரமாவே சரியாயிருவீங்கன்னு சொல்லுவாங்க.  பகல் வேளையில 2-3 முறை மருத்துவர்கள் பேசுவாங்க, செவிலியர்கள் பேசுவாங்க.  முதல்ல பயம் இருந்திச்சுன்னாலும், பிறகு மெல்ல மெல்ல, இத்தனை நல்ல ஆளுங்களோட நான் இருக்கேன், என்ன செய்யணும்னு அவங்களுக்குத் தெரியும், நான் சீக்கிரமே சரியாயிருவேன்னு எனக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்பிச்சுது.

மோதிஜி: குடும்பத்து உறுப்பினர்களோட மனோநிலை எப்படி இருந்திச்சு?

ராம்கம்பா தேஜா:  நான் மருத்துவமனையில சேர்க்கப்பட்ட போது, அவங்க முதல்ல ரொம்ப மன அழுத்தத்தில இருந்தாங்க, அவங்க எல்லாருமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாங்க, ஆனா யாருமே பாதிக்கப்படலை, இது எங்களுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம்.  பிறகு ஒவ்வொரு நாளும் மேம்பாடு தெரியத் தொடங்கிச்சு.  மருத்துவர்கள் எங்களோட பேசிட்டு இருந்தாங்க.  அவங்க குடும்பத்தாருக்கும் இந்தச் செய்தியைத் தெரிவிச்சுட்டு இருந்தாங்க.

மோதிஜி: உங்க தரப்புல நீங்க என்னமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டீங்க, உங்க குடும்பத்தார்  என்னஎன்ன நடவடிக்கைகளை மேற்கொண்டாங்க?

ராம்கம்பா தேஜா: குடும்பத்தாரைப் பொறுத்தமட்டில, முதல்ல அவங்களுக்கு இது பத்தி எல்லாம் தெரியவந்த போது, அப்ப நான் தனிமைப்படுத்தல்ல இருந்தாலும், இந்தச் செயல்பாட்டுக்குப் பிறகும் மேலும் ஒரு 14 நாட்கள் நான் வீட்டிலயும் என்னோட அறையிலேயே இருக்கணும், என்னை நானே தனிமைப்படுத்திக்கணும்னு சொன்னாங்க.  ஆகையினால வீட்டுக்கு வந்தாலுமேகூட, நான் என் அறையில தனியா இருக்கேன், பெரும்பாலும் நாள் முழுவதும் முகக்கவசம் போட்டுக்கிட்டு இருக்கேன், உணவு எனக்கு அளிக்கப்படும் போது, கைகளை கழுவுதல்ங்கறது ரொம்ப முக்கியமானது.

மோதிஜி: சரி ராம், நீங்க உடல் குணமாகி வந்திருக்கீங்க.  உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என்னோட பலப்பல நல்வாழ்த்துக்கள்.

ராம்கம்பா தேஜா:  தேங்க்யூ.

மோதிஜி: நீங்க தகவல்தொழில்நுட்பத் துறையில வேலை செய்யறீங்க இல்லையா!!  நீங்க உங்க அனுபவங்களை ஒலிவடிவத்தில பதிவு செஞ்சு, மக்களோட பகிர்ந்துக்கணும்னு நான் விரும்பறேன், இதை சமூக ஊடகங்கள்ல பரப்புங்க.  இதனால என்ன ஆகும்னா மக்கள் பயப்பட மாட்டாங்க, அதே சமயத்தில கவனமா இருப்பாங்க, எப்படி தப்புவது அப்படீங்கற விஷயமெல்லாம் ரொம்ப சுலபமா மக்கள் கிட்ட போய் சேரும்.

ராம்கம்பா தேஜா:  ஆமாய்யா, வெளிய பார்த்தா, இந்தத் தனிமைப் படுத்தலை மக்கள் எப்படி பார்க்கறாங்கன்னா, ஏதோ சிறைக்குப் போகறா மாதிரியா நினைச்சுக்கறாங்க, ஆனா இது அப்படி கிடையாது.  அரசு தனிமைப்படுத்தல்ல ஈடுபடுத்துதுன்னா இது அவங்களுக்காக, அவங்க குடும்பத்தாருக்காகன்னு புரிஞ்சுக்கணும்.  இதுபத்தி நான் நிறைய பேருக்குத் தெரிவிக்கணும்னு விரும்பறேன்; அதாவது பரிசோதனை செஞ்சுக்குங்க, தனிமைப்படுத்தலைப் பார்த்து பயப்படாதீங்க, மருத்துவரீதியான தனிமைப்படுத்தல்னு சொன்னா, இது எந்த வகையிலயும் களங்கமான விஷயம் இல்லைன்னு தெரிவிக்க விரும்பறேன். 

மோதிஜி:  சரி ராம், உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.

ராம்கம்பா தேஜா: தேங்க்யூ தேங்க்யூ

மோதிஜி:  ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே!!

 

      நண்பர்களே, ராம் சொன்னதைப் போல, கரோனா பெருந்தொற்று ஏற்பட்டவர்களுக்கு என மருத்துவர்கள் பரிந்துரை செய்தவை அனைத்தையும் அவர் தவறாமல் மேற்கொண்டார்; இதன் விளைவாகவே இன்று அவர் முழு உடல்நலன் பெற்று சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  நம்மோடு இப்படி கரோனாவோடு போராடி வெற்றி பெற்ற மேலும் ஒரு நண்பர் இருக்கிறார், ஆனால் இவருடைய ஒட்டுமொத்த குடும்பமுமேகூட இதனால் பீடிக்கப்பட்டார்கள்.  வாருங்கள், ஆக்ராவைச் சேர்ந்த அஷோக் கபூர் அவர்களோடு நாம் உரையாடலாம்.

மோதிஜி: அஷோக் ஜி வணக்கம்.

அஷோக் கபூர்: வணக்கம் ஜி.  இன்னைக்கு நான் உங்ககூட பேசுறது நான் செஞ்ச பெரிய பாக்கியம்.

மோதிஜி:  இது என்னோட பாக்கியமும்கூட.  நான் ஏன் உங்களுக்குப் ஃபோன் செஞ்சேன்னா, உங்க ஒட்டுமொத்த குடும்பமுமே கொரோனாங்கற இந்தப் பெரும் சங்கடத்தில சிக்கினாங்கன்னு கேள்விப்பட்டேன்.

அஷோக் கபூர்:  ஆமாங்க, கண்டிப்பா.

மோதிஜி:  உங்க பிரச்சனை பத்தி நான் மேலும் விபரமா தெரிஞ்சுக்க பிரியப்படறேன், இந்தத் தொற்று பற்றி உங்களுக்கு எப்ப தெரிய வந்திச்சு? என்ன ஆச்சு?  மருத்துவமனையில என்ன நடந்திச்சு?  நீங்க சொல்றதைக் கேட்டு நாட்டுல இதனால மக்களுக்கு பயன் உண்டாகும்னா நான் கண்டிப்பா நாட்டுமக்களோட இவற்றை பகிர்ந்துக்க தயாரா இருக்கேன்.

அஷோக் கபூர்:  கண்டிப்பா ஐயா.  எனக்கு ரெண்டு மகன்கள்.  இவங்க இத்தாலிக்குப் போயிருந்தாங்க.  அங்க காலணிகள் கண்காட்சி நடந்திச்சு.  நாங்க காலணி வியாபாரம் செஞ்சிட்டு இருக்கோம், பட்டறையும் இருக்கு, தயாரிக்கவும் செய்யறோம்.

மோதிஜி: சரி.

அஷோக் கபூர்:  இத்தாலிக்குப் போன இவங்க திரும்ப இந்தியா வந்தாங்க.  எங்க மருமகப்பிள்ளையும் போயிருந்தாரு, அவரு தில்லியில வசிக்கறாரு. அவருக்கு கொஞ்சம் பிரச்சனையான உடனே அவரு ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனைக்குப் போனாரு.  அங்க அவங்க அவருக்கு நோய் தொற்று இருக்கறதா சொன்னாங்க.  பிறகு அவங்களே அவரை சஃப்தர்ஜங்குக்கு மாத்திட்டாங்க.

மோதிஜி:  சரி.

அஷோக் கபூர்:  அங்கிருந்து தான் எங்களுக்கு ஃபோன் வந்திச்சு, நீங்களும் அவருகூட போயிருக்கீங்க, உங்களை பரிசோதனை செஞ்சுக்குங்கன்னு சொன்னவுடனே ரெண்டு பிள்ளைகளும் பரிசோதிச்சுக்க இங்க ஆக்ரா மாவட்ட மருத்துவமனைக்குப் போனாங்க.  ஆக்ரா மாவட்ட மருத்துவமனைக்காரங்க யாருக்கும் எந்த ஆபத்தும் இருக்க கூடாதுங்கறதுக்காக, ஒரு தற்காப்பு நடவடிக்கையா உங்க குடும்பத்தார் எல்லாரையுமே கூட்டிக்கிட்டு வாங்கன்னாங்க.  கடைசியா நாங்க எல்லாருமே போக வேண்டி வந்திச்சு.

மோதிஜி: சரி.

அஷோக் கபூர்:  அடுத்த நாளே அவங்க சொன்னாங்க, உங்க குடும்பத்தார் ஆறு பேருக்கு – அதாவது உங்க ரெண்டு மகன்கள், நான், என் மனைவி, எனக்கே பார்த்தீங்கன்னா 73 வயசாகுது, என் மருமக, என் 16 வயதான பேரன்னு நாங்க 6 பேர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கறதால உடனடியா தில்லி போயிரச் சொன்னாங்க.

மோதிஜி:  அடக்கடவுளே.

அஷோக் கபூர்:  ஆனா ஐயா நாங்க பயப்படலை.  சரி நல்லகாலம் இப்பவே நமக்குத் தெரிய வந்திச்சேன்னு நாங்க தில்லி சஃப்தர்ஜங்க் மருத்துவமனைக்குப் போனோம்.  ஆக்ராவுலேயே எங்களை ரெண்டு ஆம்புலன்ஸ்ல ஏத்தி அனுப்பி வச்சாங்க.  இதுக்கு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கலை.  ஆக்ரா மருத்துவர்களையும், நிர்வாகத்தையும் சும்மா சொல்லக்கூடாது, முழு ஒத்துழைப்பும் உதவியும் அளிச்சாங்க. 

மோதிஜி:  ஓஹோ, நீங்க ஆம்புலன்ஸ்ல வந்தீங்களா?

அஷோக் கபூர்:  ஆமாங்கய்யா, ஆம்புலன்ஸ்ல தான்.  பெரிய பிரச்சனை இல்லை, உட்கார்ந்தபடியே தான் வந்தோம்.  எங்களுக்கு ரெண்டு ஆம்புலன்ஸ்களை குடுத்தாங்க.  கூடவே ரெண்டு மருத்துவர்களும் வந்தாங்க, அவங்க எங்களை சஃப்தர்ஜங்க் மருத்துவமனை வரை கொண்டு விட்டுப்போனங்க.  சஃப்தர்ஜங்க் மருத்துவமனையில ஏற்கெனவே மருத்துவர்கள் வாசல்லேயே தயாரா நின்னுட்டு இருந்தாங்க, அவங்க எங்களை வார்டுக்கு உடனடியா கொண்டு போனாங்க.  எங்க ஆறு பேருக்குமே அவங்க தனித்தனி அறைகளைக் கொடுத்தாங்க.  நல்ல அறைகள், எல்லாமே இருந்திச்சு.  இப்ப நாங்க அங்க 14 நாட்கள் மட்டுமே தனியா இருந்தோம்.  மருத்துவர்கள் பத்திச் சொல்லணும்னா, அவங்க ரொம்பவே உதவிகரமா இருந்தாங்க, எங்களை ரொம்ப நல்லா நடத்தினாங்க, மத்த பணியாளர்களுமே இப்படித்தான்.  அவங்க பாதுகாப்பு உடையில வந்தாங்க இல்லையா, யாரு செவிலியர், யாரு மருத்துவர், யார் வார்ட்பாய்ன்னே தெரியலை.  அவங்க சொல்றதை கேட்டு நாங்க நடந்தோம்.  எங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்கலை.

மோதிஜி:  உங்க தன்னம்பிக்கை ரொம்ப பலமா இருக்கா மாதிரி தெரியுதே!!

அஷோக் கபூர்:  ஆமாம் ஐயா, நான் நல்லா இருக்கேன்.  என் கால்மூட்டுக்கு வேற நான் அறுவை சிகிச்சை செஞ்சிருக்கேன்.  இருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது.

மோதிஜி:  இல்லை, இத்தனை பெரிய சங்கடம் குடும்பத்தார் எல்லாருக்குமே வந்திருக்கு, 16 வயதான பேரன் வரை வந்திருக்கு, இதைத் தாண்டியும் தன்னம்பிக்கையோடு இருக்கீங்களேன்னு கேட்டேன்.

அஷோக் கபூர்:  அவன் ICSE  தேர்வு எழுத வேண்டியிருந்திச்சு.  நாங்க சொன்னோம், தேர்வு எல்லாம் பிறகு பார்த்துக்கலாம், முதல்ல வாழ்க்கைத் தேர்வை பார்ப்போம், கவலைப்படாதேன்னு சொன்னோம்.

மோதிஜி:  சரியா சொன்னீங்க.  உங்க அனுபவம் தான் இதில கை கொடுத்திருக்கு.  குடும்பம் முழுவதுக்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு, மனோதைரியத்தை ஏற்படுத்தி இருக்கு.

அஷோக் கபூர்:  ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டிருந்ததால, ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்க முடியலைன்னாலும், ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்க முடிஞ்சுது. தொலைபேசி வாயிலா பேசிக்கிட்டோம்.  மருத்துவர்கள் எங்களை நல்லவிதமா பார்த்துக்கிட்டாங்க.  நாங்க அவங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம், எங்களுக்கு முழுக்க முழுக்க துணை வந்தாங்க.  மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், வார்ட் பணியாளர்கள்னு எல்லாருமே நல்லா கவனிச்சுக்கிட்டாங்க.

மோதிஜி: உங்களுக்கும் உங்க குடும்பத்தார் எல்லாருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள்.

அஷோக் கபூர்: தேங்க்யூ ஐயா. மிக்க நன்றி. உங்க கூட பேசினது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.  அப்புறம் இன்னொரு விஷயம்யா.... இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தறது தொடர்பா எங்கயாவது போகணும், ஏதாவது செய்யணும்னா நாங்க அதுக்கு தயாரா இருக்கோம்.

மோதிஜி:  நீங்க உங்க வழியில ஆக்ராவுல செய்யுங்க. யாராவது பசியோட இருந்தா,அவங்களுக்கு உணவு கொடுங்க.  ஏழைகளை நல்லா கவனிச்சுக்குங்க, விதிமுறைகளை முறையா பின்பற்றுங்க.  உங்க குடும்பம் முழுவதும் இதில சிக்கியிருந்திச்சு, ஆனா சட்டதிட்டங்களைப் பின்பற்றினதால, நீங்களும் உங்க குடும்பத்தாரும் இதிலேர்ந்து தப்பிக்க முடிஞ்சிருக்கு, ஆகையால எல்லாரும் விதிகளை மதிச்சு நடந்தா, நாடு காப்பாத்தப்படும்னு மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்க.

அஷோக் கபூர்:  மோதி ஐயா, நாங்க காணொளிகளை ஏற்படுத்தி சேனல்களுக்கு கொடுத்திருக்கோம்.

மோதிஜி:  சரி.

அஷோக் கபூர்:  இதை சேனல்காரங்க காமிக்கவும் செஞ்சிருக்காங்க, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வர்றாங்க.

மோதிஜி:  இதை சமூக ஊடகங்கள்ல பிரபலமாக்கணும்.

அஷோக் கபூர்:  ஆமாம் ஆமாம். நாங்க வசிக்கற காலனி, ரொம்ப சுத்தமான காலனி, அங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டோம், நாங்க மீண்டு வந்திருக்கோம், யாரும் பயப்பட வேண்டாம். யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது.  சந்தேகம் இருந்தா பரிசோதனை செய்துக்குங்க.  எங்ககூட இந்தக் காலகட்டத்தில பழகினவங்க பரிசோதனை செய்துக்கிட்டாங்க, யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இறையருள்ல இல்லைய்யா.

மோதிஜி:  உங்களுக்கு மிக்க நல்வாழ்த்துக்கள்.

      நண்பர்களே, நாம அஷோக் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.  பீதியடையாமல், பதட்டமே படாமல், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பது, சரியான நேரத்தில் மருத்துவர்களைத் தொடர்பு கொள்வது, உசிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தப் பெருந்தொற்றை நம்மால் வெற்றி கொள்ள முடியும். நண்பர்களே, நாம் மருத்துவரீதியாக இந்தப் பெருந்தொற்றை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள சில மருத்துவர்களோடும் உரையாடினேன், இவர்கள் தானே இந்தப் போரில் முன்னணி வீரர்களாகப் போராடி வருகிறார்கள்!!  நோயாளிகளை கவனித்துக் கொள்வது இவர்களுடைய அன்றாடக் கடமை இல்லையா!!  நாம் இப்போது தில்லியைச் சேர்ந்த மருத்துவர் நிதேஷ் குப்தாவுடன் உரையாடலாம் வாருங்கள்!!

மோதிஜி:  வணக்கம் டாக்டர்.

டாக்டர். நிதீஷ் குப்தா:  வணக்கம் ஐயா.

மோதிஜி:  நிதேஷ்ஜி, நீங்க இந்தப் போர்ல விடாப்பிடியா முயற்சி செஞ்சிட்டு வர்றீங்க, மருத்துவமனையில உங்க மத்த நண்பர்களோட மனோநிலை பத்தி சொல்ல முடியுங்களா?

டாக்டர். நிதேஷ் குப்தா:  எல்லாருமே ரொம்ப உற்சாகமா இருக்காங்க.  உங்க ஆசிகள் எல்லாரோடயும் இருக்கு.  எல்லா மருத்துவமனைகளுக்கும் நீங்க கொடுத்து வர்ற ஆதரவு இருக்கே, நாங்க கேட்டதை எல்லாம் கொடுத்திருக்கீங்க.  எப்படி இராணுவம் எல்லைப்புறத்தில போரிடுதோ, அதே விடாமுயற்சியோட நாங்க இங்க உறுதியோட இருக்கோம்.  எங்க கடமை ஒண்ணே ஒண்ணு தான் – நோயாளி உடல்நலம் சீராகி வீடு போகணுங்கறது தான். 

மோதிஜி:  நீங்க சொல்றது சரிதான், இது போர்க்கால நிலைமை, நீங்க எல்லாரும் தான் நிலைமையை எதிர்கொள்ளத் தயாரா இருக்கீங்க. 

டாக்டர். நிதேஷ் குப்தா:  ஆமாம்யா.

மோதிஜி:  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கறது மட்டுமில்லாம நீங்க அவங்களுக்கு உளவியல்ரீதியா ஆலோசனைகளையும் அளிக்க வேண்டியிருக்கு இல்லையா?

டாக்டர். நிதேத் குப்தா:  ஆமாங்கய்யா.  இது ரொம்ப ரொம்ப அவசியம்.  ஏன்னா நோயாளிகள் தாங்கள் பீடிக்கப்பட்டிருக்காங்கன்னு கேள்விப்பட்ட உடனேயே பயந்து போயிடறாங்க.  இது ஒண்ணுமில்லை, அடுத்த 14 நாட்கள்ல நீங்க சரியாயிருவீங்க, பிறகு வீட்டுக்குப் போகலாம்னு முதல்ல அவங்களுக்கு புரிய வைக்க வேண்டியிருக்கு.  இதுவரைக்கும் இப்படி நாங்க 16 நோயாளிகளை குணமாக்கி வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கோம்.

மோதிஜி:  அவங்க உள்ளபடியே எதைக்கண்டு பயப்படுறாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?

டாக்டர். நிதேஷ் குப்தா:  எனக்கு என்ன ஆயிடுமோங்கற பயம் தான்.  அவங்க வெளியுலகத்தைப் பார்க்கும் போது, வெளிய பலர் இறந்துகிட்டு இருக்கறதை பார்க்கறாங்க, இப்படி தங்களுக்கும் ஆயிருமோங்கற கவலை அவங்களை வாட்டுது.  ஆனா நாங்க அவங்களுக்கு அவங்க நிலைமையை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கறோம்.  உங்க நிலைமை அத்தனை மோசமில்லை, சாதாரண கபம்-ஜுரம் மாதிரி தான், ஆகையால நீங்க 7-8 நாட்கள்ல சீராயிருவீங்க.  பிறகு உங்களை பரிசோதனை செஞ்ச பிறகு, உங்களுக்கு தொற்று அபாயம் இல்லைன்னு தெரிய வந்தபிறகு வீட்டுக்கு அனுப்பிருவோம்னு சொல்லுவோம்.  ஆகையால திரும்பத் திரும்ப 2-3 மணிநேரத்துக்கு ஒருமுறை அவங்களைப் போய் சந்திப்போம், விசாரிப்போம், இது அவங்களுக்கு இதமா இருக்கும்.

மோதிஜி:  அவங்க தன்னம்பிக்கை அதிகரிக்குது இல்லையா?

டாக்டர். நிதேஷ் குப்தா:  தொடக்கத்தில பயம் என்னவோ இருந்தாலும்கூட, நாங்க புரியவச்ச பிறகு, 2-3 நாட்கள்ல அவங்ககிட்ட குணம் தெரிய ஆரம்பிச்சவுடனே, நாம சரியாயிருவோம்னு அவங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை துளிர்க்குது.

மோதிஜி:  எல்லா மருத்துவர்கள் மனசிலயும் மிகப்பெரிய சேவை செய்யற வாய்ப்பு அவங்களுக்குக் கிடைச்சிருக்கற உணர்வு ஏற்படுதில்லையா?

டாக்டர். நிதேஷ் குப்தா:  ஆமாங்கய்யா. கண்டிப்பா ஏற்படுது.  இதில எந்த பயமும் இல்லைன்னு, நாங்க எங்க குழுவினரை தொடர்ந்து ஊக்கப்படுத்திட்டே இருக்கோம். நாம முழு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டோம்னா, நோயாளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பத்தி புரிய வச்சோம்னா, எல்லாம் சரியாயிரும்.

மோதிஜி:  சரி டாக்டர்.  உங்க கிட்ட ஏராளமான நோயாளிகள் வருவாங்க, நீங்க இதில முழுவீச்சில ஈடுபட்டிருப்பீங்க.  உங்ககூட பேசினது இதமா இருந்திச்சு.  ஆனா உங்க போராட்டத்தில நானும் உங்ககூட இருக்கேன். தொடர்ந்து போராடுங்க.

டாக்டர். நிதேஷ் குப்தா:  உங்க ஆசிகள் தொடரணுங்கறது தான் எங்க எல்லாரோட விருப்பமும்கூட.

மோதிஜி:  பலப்பல நல்வாழ்த்துக்கள் சகோதரரே.

டாக்டர். நிதேஷ் குப்தா: ரொம்ப நன்றிங்கய்யா.

மோதிஜி: நன்றிகள்.  நிதேஷ்ஜி உங்களுக்கு பலப்பல நன்றிகள்.  உங்களைப் போன்றவர்களுடைய முயற்சிகளின் பலனாகத்தான் இந்தியா கொரோனாவுக்கு எதிரான போரிலே கண்டிப்பாக வெல்லும்.  நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் நண்பர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பங்களை பராமரியுங்கள் என்பதே நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள். நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கிறது என்று உலகில் கிடைக்கப்பெறும் அனுபவம் என்ன கூறுகிறது.  இப்படித் திடீரென்று பெருகும் நோய்த்தொற்றின் விளைவாக மிகவும் சிறப்பாக விளங்கிவரும் உடல்நலச் சேவைகள் இருக்கும் நாடுகள்கூட மண்டியிடுவதை நாம் பார்க்கிறோம்.  இந்தியாவில் இத்தகைய நிலைமை ஏற்பட்டு விடாமல் இருக்க நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  இப்போது மேலும் ஒரு மருத்துவர் புணேயிலிருந்து நம்மோடு இணையவிருக்கிறார்.  அவர் டாக்டர் போர்ஸே அவர்கள்.

மோதிஜி: வணக்கம் டாக்டர்.

டாக்டர் போர்ஸே: வணக்கம்.

மோதிஜி:  நீங்க மக்கள் சேவையே மகேசன் சேவைங்கற குறிக்கோளோட பணியாற்றிக்கிட்டு வர்றீங்க.  நான் இன்னைக்கு உங்ககூட சில விஷயங்கள் பத்திப் பேச நினைக்கறேன், நாட்டுமக்களுக்கு நீங்க அளிக்க நினைக்கற செய்தி பத்தித் தெரிஞ்சுக்க விரும்பறேன்.  மருத்துவரோட தொடர்பு கொண்டு எப்ப கரோனா பரிசோதனை செஞ்சுக்கணுங்கறது தொடர்பா பலரோட மனங்கள்ல ஒரு வினா இருந்துக்கிட்டு இருக்கு.  ஒரு மருத்துவர்ங்கற முறையில, நீங்க உங்களையே முழுமையா கரோனா நோயாளிகளுக்குன்னு அர்ப்பணம் செஞ்சிருக்கீங்க.  அந்த வகையில உங்க கருத்துக்கள் மகத்துவம் வாய்ந்தவை, நான் கேட்க ஆவலா இருக்கேன்.

டாக்டர் போர்ஸே: ஐயா, நான் இங்க பி.ஜே. மருத்துவக் கல்லூரியில பணிபுரியற ஒரு பேராசிரியர்.  இங்க நாயுடு மருத்துவமனைங்கற பெயர்ல, புணேயில நகராட்சி மருத்துவமனை ஒண்ணு இருக்கு.  இங்க ஜனவரி 2020லேர்ந்து ஒரு பரிசோதனை மையத்தை ஆரம்பிச்சோம்.  இன்னைக்கு வரைக்கும் இங்கிருந்து 16 கோவித் 19 நோயாளிகள் கண்டறியப்பட்டிருக்காங்க.  இந்த 16 பேரையும் நாங்க தனிமைப்படுத்தலுக்கு ஆட்படுத்தினோம், சிகிச்சை அளிச்சோம்,பிறகு 7 பேர்களை விடுவிப்பு செஞ்சோம்.  பாக்கி இருக்கற 9 பேர்களுமே ரொம்ப சீரா இருக்காங்க.  அவங்க உடல்ல வைரஸ் கிருமி இருந்தாலுமே கூட, அவங்க நல்லபடியா ஆயிட்டு வர்றாங்க.  இப்ப இங்க மாதிரி அளவு ரொம்ப சின்னது தான், 16 பேர்கள் மட்டும் தான்.  ஆனா, இளைய சமுதாயத்தினர்கூட இதனால பாதிப்படைஞ்சு வர்றாங்கன்னு தெரிய வருது.  இருந்தாலுமேகூட, இந்த நோய் அத்தனை தீவிரமா அவங்களை பாதிக்கலைங்கறதால, அவங்க குணமாயிட்டு வர்றாங்க.  பாக்கி இருக்கற 9 பேர்களுடைய நிலைமையும் மோசமாயிரக்கூடாதுங்கறதால நாங்க அவங்களை தொடர் கண்காணிப்புல வச்சிட்டு இருக்கோம், அவங்களும் 4-5 நாட்கள்ல சரியாயிருவாங்க.  இங்க சந்தேகத்துக்கு இடமான வகையில வர்றவங்க சர்வதேச பயணம் போனவங்க, அவங்ககூட தொடர்புல வந்தவங்க; இவங்களோட மாதிரியை எடுக்கறோம்.  இவங்களோட oropharyngeal மாதிரியை, அதாவது உணவுக்குழாயையும் வாயையும் இணைக்கும் பகுதியோட மாதிரியை எடுக்கறோம், மூக்கிலேர்ந்து மாதிரியை எடுக்கறோம், இந்த மூக்கிலேர்ந்து எடுக்கப்பட்ட மாதிரி பத்தின அறிக்கை வந்தவுடனே நாங்க அவங்களை நோய்தொற்று வார்டில அனுமதிக்கறோம்.  ஒருவேளை பாதிப்பு இல்லைன்னா, வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கான பரிந்துரை செய்யறோம், இதை எப்படி கடைப்பிடிப்பதுங்கற வழிமுறையை சொல்லிக்கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கறோம்.

மோதிஜி: என்ன புரிய வைக்கறீங்க?  வீட்டில தனிமைப்படுத்தல் பத்தி என்ன சொல்லிக் கொடுக்கறீங்க?

டாக்டர் போர்ஸே: நீங்க வீட்டில இருந்தாலுமேகூட, நீங்க அங்க தனிமைப்படுத்திக்கணும், மத்தவங்க கிட்டேர்ந்து குறைஞ்சபட்சம் 6 அடி இடைவெளி வச்சிருக்கணும்.  அடுத்ததா, முகக்கவசத்தைப் பயன்படுத்தணும், திரும்பத்திரும்ப கைகளை சுத்தம் செய்யணும்.  உங்ககிட்ட கிருமிநாசினி திரவம் இல்லைன்னா, சாதாரண சோப்பால கையைத் தேய்ச்சு தண்ணியில கழுவணும், அதுவும் திரும்பத்திரும்பக் கழுவணும்.  உங்களுக்கு இருமலோ, தும்மலோ வந்தா, கைக்குட்டையில மூடிக்கிட்டு செய்யணும்.  இதனால வெளிப்படும் சின்னச்சின்ன துளிகள் அதிக தொலைவு பயணிக்காது, தரையிலயும் விழாது, அதிகபட்சம் கைக்குட்டையில தான் இருக்கும், ஆகையால பரவறதுக்கான சாத்தியக்கூறு இருக்காது.  இதைத் தான் நாங்க அவங்களுக்குப் புரிய வைக்கறோம் ஐயா.  ரெண்டாவது விஷயம் என்னென்னா, அவங்க வீட்டில தனிமைப்படுத்தல்ல இருக்கும் போது வெளிய எங்கயும் போகக்கூடாது.  இப்ப முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கு; இந்தக் குறிப்பிட்ட காலத்தில அவங்க குறைஞ்சது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல்ல ஈடுபட்டிருக்கணும்னு நாங்க அவங்களுக்கு செய்தி அளிச்சு வர்றோம்.

மோதிஜி: சரி டாக்டர், நீங்களும் உங்க குழுவினரும் முழு அர்ப்பணிப்போட சேவை செஞ்சிட்டு வர்றீங்க. உங்ககிட்ட வர்ற எல்லா நோயாளிகளுமே குணமாகித்தான் போவாங்க, இந்த நோய் தொற்றுக்கு எதிரான நம்மோட போர்ல உங்க எல்லாரோட உதவியோடயும் நாம வெல்வோங்கற முழு நம்பிக்கை எனக்கு இருக்கு.  

டாக்டர் போர்ஸே: நாம ஜெயிப்போங்கற நம்பிக்கை எனக்கும் இருக்கு ஐயா. 

மோதிஜி: பலப்பல நல்வாழ்த்துக்கள் டாக்டர் போர்ஸே அவர்களே. நன்றி.

டாக்டர் போர்ஸே:  ரொம்ப நன்றிங்கய்யா.

 

      நண்பர்களே, நம்முடைய மருத்துவ நண்பர்கள் அனைவரும் நாட்டுமக்கள் அனைவரையும் இந்தப் பெரும் சங்கடத்திலிருந்து மீட்டெடுக்க கச்சைகட்டிக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.  இவர்கள் கூறும் விஷயங்களைக் காதில் மட்டும் போட்டுக் கொள்வதோடு நின்று விடாமல், இவற்றை நம் வாழ்க்கையில் பின்பற்றவும் செய்ய வேண்டும்.  மருத்துவர்களுடைய தியாகம், தவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பார்க்கும் போது, ஆச்சார்யரான சரகர் கூறிய சொற்கள் தாம் என் நினைவுக்கு வருகின்றன.  ஆச்சார்ய சரகர் அன்று கூறியதை இன்று நமது மருத்துவர்கள் விஷயத்தில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.  ஆச்சார்ய சரகர் என்ன கூறினார் தெரியுமா.....

आत्मार्थम् अपि कामार्थम् अतभूत दयां प्रति ||

वर्तते यत् चिकित्सायां सर्वम् इति वर्तते ||

ந ஆத்மார்த்தம் ந அபி காமார்த்தம் அதபூத தயாம் ப்ரதி.

வர்த்ததே யத் சிகித்சாயாம் சர்வம் இதி வர்த்ததே.

அதாவது, செல்வத்தின் பொருட்டோ, வேறு ஏதோ ஒரு ஆசையின் பொருட்டோ அல்லாது, நோயாளிக்கு சேவை செய்வதை, தயை உணர்வோடு செய்பவரே, உண்மையான மருத்துவர் ஆவர் என்பதே இதன் பொருள்.

 

      நண்பர்களே, மனிதநேயம் மனதில் நிறைந்த ஒவ்வொரு செவிலியரையும், இன்று நான் வணங்குகிறேன்.  நீங்கள் அனைவரும் எந்த சேவை மனப்பான்மையோடு பணியாற்றுகிறீர்களோ, அது ஈடு இணை இல்லாதது.  இந்த ஆண்டு அதாவது 2020ஆம் ஆண்டை உலகம் முழுவதும் செவிலியர் மற்றும் பிரசவம் பார்க்கும் தாதியருக்கான சர்வதேச ஆண்டாகக் கொண்டாடி வருகிறது.  இது 200 ஆண்டுகள் முன்பாக, 1820ஆம் ஆண்டில் பிறந்த ஃப்லோரென்ஸ் நைட்டிங்கேலுடன் தொடர்பு உடையது.  இவர் மனித சேவைக்கு, செவிலியர் சேவைக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்தவர்.  இதை ஒரு புதிய சிகரத்துக்குக் கொண்டு சென்றவர்.  உலகத்தின் அனைத்து செவிலியர்களின் சேவைத்தன்மைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆண்டு, கண்டிப்பாக ஒட்டுமொத்த செவிலியர் சமூகத்துக்கும் மிகப்பெரிய சவாலான நேரமாக உருவெடுத்திருக்கிறது.  நீங்கள் அனைவரும் இந்தத் தேர்விலே வெற்றி பெறப் போவதோடு கூடவே, பல உயிர்களையும் காப்பாற்றப் போகிறீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

      இவர்களைப் போன்ற அனைத்து நண்பர்களின் ஊக்கம் மற்றும் பேரார்வம் காரணமாகவே இத்தனை பெரிய போரை நம்மால் எதிர்கொள்ள முடிந்திருக்கிறது.  உங்களைப் போன்ற நண்பர்கள் – மருத்துவராகவோ, செவிலியராகவோ, துணை மருத்துவ ஊழியர்களாகவோ, ஆஷா சகோதரிகளாகவோ, துணை செவிலியர்களாகவோ, துப்புறவுத் தொழிலாளர்களாகவோ இருக்கலாம், உங்களது ஆரோக்கியம் பற்றிய கவலையும் நாட்டுக்கு உண்டு. இதை எல்லாம் பார்த்தபிறகு தான், இப்படிப்பட்ட சுமார் 20 இலட்சம் நண்பர்கள் நலனுக்காக 50 இலட்சம் ரூபாய் வரையிலான ஆரோக்கியக் காப்பீடு பற்றிய அறிவிப்பை அரசு செய்திருக்கிறது.  இதன் வாயிலாக இந்தப் போரிலே மேலும் அதிக தன்னம்பிக்கையோடு உங்களால் நாட்டை வழிநடத்த முடியும்.

     

      எனதருமை நாட்டுமக்களே, கொரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நம்மைச் சுற்றி இப்படிப் பலபேர்கள் இருக்கிறார்கள், இவர்கள் தாம் சமூகத்தின் நிஜமான ஹீரோக்கள், இத்தகைய மோசமான சூழ்நிலையிலும் அவர்கள் முன்னணி வகிக்கிறார்கள்.  நரேந்திரமோதி செயலியில், NamoAppஇல், பெங்களூரூவைச் சேர்ந்த நிரஞ்ஜன் சுதாகர் ஹெப்பாலே அவர்கள் என்ன எழுதியிருக்கிறார் என்றால், இப்படிப்பட்டவர்கள் தாம் நமது தினசரி வாழ்வின் நாயகர்கள் என்று கூறியிருக்கிறார்.  இது உண்மை தான்.  இவர்கள் காரணமாகவே நமது தினசரி வாழ்க்கை சுலபமாக நடக்கிறது.  சற்றே கற்பனை செய்து பாருங்கள், ஒரு நாள் உங்கள் வீட்டுக் குழாயில் வரும் நீர் தடைப்பட்டுப் போனது என்று சொன்னால், அல்லது உங்கள் வீட்டிற்கு வரும் மின்சார இணைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டால், அப்போது இந்த நிஜவாழ்க்கை நாயகர்கள் தாம் நமது இன்னல்களைத் தொலைப்பவர்கள்.  உங்கள் வீட்டுக்கருலே இருக்கும் சிறிய பலசரக்குக் கடை பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!!  இன்றைய இப்படிப்பட்ட கடினமான வேளையில், அந்தக் கடைக்காரருமேகூட ஆபத்தை எதிர்கொள்கிறார்.  இவையெல்லாம் யாருக்காக?  உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தானே அவர் இத்தனை சிரமங்களை மேற்கொள்கிறார்!!  இதைப் போலவே, ஓட்டுனர்கள், தொழிலாளிகள் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.  நாடு முழுமைக்கும் அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதன் மூலமாக விநியோகச் சங்கிலியில் எந்தவிதமானதொரு தடையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தானே அவர்கள் பணியில் இத்தனை மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்!!  வங்கிச் சேவைகளை அரசு செயல்படுத்தி வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  வங்கித் துறையில் பணியாற்றும் நம்மவர்கள் முழு ஈடுபாட்டோடும், மனதைச் செலுத்தி இந்தப் போருக்குத் தலைமையேற்று வங்கிப் பணிகளை ஏற்றுச் செயல்படுத்தி வருகிறார்கள், உங்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இன்றைய சூழலில் இந்தச் சேவை சிறிய விஷயமல்ல.  அப்படிப்பட்ட வங்கிப் பணியாளர்களுக்கு நாம் எத்தனை நன்றிகளைத் தெரிவித்தாலும், அது தகும்.  பெரிய எண்ணிக்கையில் மின்வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் நமது டெலிவரி சிப்பந்திகள், இந்தக் கடினமான வேளையிலும்கூட பலசரக்குப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.  இந்த முழுமையான ஊரடங்கு வேளையிலும் கூட, டிவி பார்க்க முடிந்தவர்கள், வீட்டில் இருந்தபடியே எந்தத் தொலைபேசி, இணையத்தைப் பயன்படுத்துகிறார்களோ, இவை அனைத்தையும் சீராக வைத்திருப்பதில் யாரோ சிலர் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து வருகிறார்கள்.  இன்று நம்மால் டிஜிட்டல் முறையில் பணத்தை சுலபமாகச் செலுத்த முடிகிறது என்றால், இதன் பின்னணியில் பலரின் உழைப்பு அடங்கி இருக்கிறது.  ஊரடங்கு வேளையில் இவர்கள் தாம் நாட்டின் பணிகளை செவ்வனே நிர்வாகம் செய்து வருகிறார்கள்.  இன்று நாட்டுமக்கள் அனைவர் தரப்பிலும், நான் இப்படிப்பட்ட அனைவருக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.  அவர்கள் தங்களுக்காகவும்கூட, அனைத்துவிதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  நீங்கள் உங்கள் மீது அக்கறை செலுத்துங்கள், உங்கள் குடும்பத்தார் மீது அக்கறை செலுத்துங்கள்.

 

      என் மனம்நிறை நாட்டுமக்களே, கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட சிலர் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தல் செயல்பாடு பரிந்துரை செய்யப்பட்ட சிலருக்கு எதிராக சிலபேர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன்.  இவை எனக்கு மிகுந்த துக்கத்தை அளிக்கிறது.  இது மிகவும் துர்பாக்கியமானது.  தற்போதைய நிலைமையில், ஒருவர் மற்றவருக்கு இடையே சமூகரீதியிலான இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும், உணர்வுரீதியான அல்லது மனிதம்ரீதியான இடைவெளி இருத்தல் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இப்படிப்பட்ட நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஒன்றும் குற்றவாளிகள் இல்லை.  மற்றவர்களுக்கும் இந்தத் தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காகவே இவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  பல இடங்களில் மக்கள் தங்கள் பொறுப்புக்களை மிகுந்த கடமையுணர்வோடு புரிந்து வருகிறார்கள்.  எந்த அளவுக்கு என்றால், நோய்க்கிருமி இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லாத போதும் கூட, அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தலில் ஆட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள் என்றால்,  இவர்கள் அயல்நாடுகளிலிருந்து திரும்பி வந்திருக்கிறார்கள், அதிகபட்ச எச்சரிக்கையை கடைப்பிடிக்கிறார்கள்.  எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு இந்த நோய்க்கிருமியால் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள விரும்புகிறார்கள்.  ஆகையால், இப்படிப்பட்டவர்கள் இத்தனை கடமையுணர்வை வெளிப்படுத்தும் போது, அவர்களிடத்தில் மோசமாக நடந்து கொள்வது, முற்றிலும் தவறானது; மாறாக, அவர்களிடத்தில் கருணையோடு நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.

 

      கொரோனா வைரசை எதிர்கொள்ள மிகப்பெரிய வலிமையான வழிமுறை சமூகரீதியிலான இடைவெளியைப் பராமரித்தல் தான்.  சமூகரீதியான இடைவெளி என்பதன் பொருள் சமூகரீதியிலான ஊடாடலை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது அல்ல.  உள்ளபடியே இந்த வேளை, நமது பழைய சமூக உறவுகளில், புத்துயிர் ஊட்ட வேண்டிய வேளை.  அப்படிப்பட்ட உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தருணம்.  ஒருவகையில் இந்த காலகட்டமானது, சமூகரீதியிலான இடைவெளியை அதிகரித்து, உணர்வுரீதியிலான இடைவெளியை குறைக்க வேண்டிய வேளை.  நான் மீண்டும் கூறுகிறேன், சமூகரீதியிலான இடைவெளியை அதிகரியுங்கள், உணர்வுரீதியிலான இடைவெளியைச் சுருக்குங்கள்.  கோடாவிலிருந்து யஷ்வர்த்தன் அவர்கள் நரேந்திரமோதி செயலியில் என்ன எழுதி இருக்கிறார் என்றால், அவர் இந்த முழுமையான ஊரடங்குக் காலத்தில் குடும்பரீதியான உறவுகளை பலப்படுத்தி வருகிறாராம்.  குழந்தைகளோடு உள்ளரங்கு விளையாட்டுக்கள் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதாகத் தெரிவிக்கிறார்.  மேலும் சமையலறையில் புதிய புதிய உணவுகளையும் சமைக்கிறாராம்.  ஜபல்பூரைச் சேர்ந்த நிருபமா ஹர்ஷேய் அவர்கள் முதன்முறையாக கனமான போர்வையைச் செய்ய வேண்டும் என்ற அவருடைய ஆசை நிறைவேறியதாக, நரேந்திரமோதி செயலியில் தெரிவிக்கிறார்.  இதுமட்டுமல்ல, அவர் தோட்டப் பராமரிப்பு ஆசையையும் நிறைவேற்ற முடிந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.  இதே போல ராய்புரைச் சேர்ந்த பரீக்ஷித் அவர்கள், குருகிராமைச் சேர்ந்த ஆர்யமன் அவர்கள், ஜார்க்கண்டைச் சேர்ந்த சூரஜ் ஆகியோரது பதிவுகளைப் படிக்க முடிந்தது.  இதில் அவர்கள் தங்கள் பள்ளி நண்பர்களுடனான கணினிவழி மீள்சந்திப்பு பற்றி உரையாடியதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.  அவர்களுடைய இந்த எண்ணம் மிகவும் சுவாரசியமானது.  பல பத்தாண்டுகளாக உங்கள் பள்ளி-கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டாமல் போயிருக்கலாம்.  நீங்களும் இந்த எண்ணத்தை செயல்படுத்தித் தான் பாருங்களேன்!!  புபனேஷ்வரைச் சேர்ந்த ப்ரத்யுஷ் அவர்கள், கோல்காத்தாவைச் சேர்ந்த வசுதா ஆகியோர் தாங்கள் படிக்க முடியாத புத்தகங்களை எல்லாம் இப்போது படிப்பதாக எழுதியிருக்கிறார்கள்.  பல ஆண்டுகளாக வீட்டிலே தூசி படிந்து கிடக்கும் தப்லா, வீணை போன்ற இசைக்கருவிகளை தூசிதட்டி, சாதகம் செய்ய ஆரம்பித்து இருப்பதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.  நீங்களும் இப்படிச் செய்யலாமே!  இதன் மூலம் இசையின் ஆனந்தத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம், பழைய நினைவுகளையும் புதுப்பித்துக் கொள்ளலாம்.  அதாவது இதுபோன்ற சங்கடகாலத்தில், வாராது வந்த இந்த வேளையிலே, உங்களை நீங்கள் சந்திக்கக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருப்பதோடு, நீங்கள் உங்கள் ஆழ்மன ஆர்வத்தோடும் இணைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீங்கள் உங்கள் பழைய நண்பர்கள், குடும்பத்தாரோடு இணையக்கூடிய முழுமையான சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கும்.

 

      நமோ செயலியில் ரூர்கியைச் சேர்ந்த சசி அவர்கள், இந்த முழுமையான ஊரடங்குக் காலத்தில், நான் என்னுடைய உடலுறுதிக்காக என்ன செய்யலாம் என்று கேட்டிருக்கிறார்.  இந்தச் சூழ்நிலைகளில், நவராத்திரி விரதத்தை நான் எப்படி கடைப்பிடிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார்.  நான் மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்.... நான் உங்களை வெளியே வரவேண்டாம் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேனே தவிர, உங்களுக்குள்ளே ஆராய்ந்து பார்க்கவும் அமிழ்ந்து போகவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறேன். உங்களை நீங்கள் அறிந்து கொள்ளூம் முயற்சியில் ஈடுபடுங்கள்.  நவராத்திரி விரதம் பற்றிக் கூறவேண்டுமென்றால், இது எனது மற்றும் எனது சக்திக்கும், பக்திக்கும் இடையிலான விஷயம்.  ஆனால் உடலுறுதி என்றால், விஷயம் சற்று நீண்டு விடலாம் என்பதால், சமூக ஊடகத்தில், நான் என்ன செய்கிறேன் என்பது பற்றி சில காணொளிகளை தரவேற்றம் செய்கிறேன்.  நரேந்திரமோதி செயலியில் நீங்கள் கண்டிப்பாக இந்தக் காணொளிகளைப் பாருங்கள்.  நான் செய்வதிலிருந்து சில உங்களுக்கு உதவிகரமாக இருக்கலாம்;  ஆனால் ஒருவிஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நான் உடலுறுதி வல்லுனர் கிடையாது.  அதேபோல நான் யோகக்கலை ஆசிரியரும் கிடையாது.  நான் ஒரு மாணவன் மட்டுமே.  கண்டிப்பாக சில யோக ஆஸனங்களால் எனக்கு அதிக ஆதாயம் கிடைத்திருக்கிறது என்பது என்னவோ உண்மை தான்.  இந்த முழுமையான ஊரடங்கு காரணமாக இந்த விஷயங்கள் உங்களுக்கும் பயனுடையவையாக இருக்கலாம்.

 

      நண்பர்களே, கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டம் இதுவரை காணாதது மட்டுமல்லாமல், சவால்கள் நிறைந்ததும் கூட.  ஆகையால், இந்த வேளையில் மேற்கொள்ளப்படும் முடிவுகளும்கூட, உலக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத-கேட்டிராதவையாக இருக்கின்றன.  கொரோனாவைத் தடுக்க இந்தியர்கள் அனைவரும் மேற்கொண்டுவரும் முயற்சிகள், இவை தாம் கொரோனாவுக்கு எதிரான பெரும்போராட்டத்தில் நமக்கு வெற்றியை அளிக்கும்.  ஒவ்வொரு இந்தியரின் மனவுறுதியும், சுயகட்டுப்பாடும் தாம் நம்மை இந்தச் சங்கடத்திலிருந்து வெளியே கொண்டு வரும்.  இவற்றோடு கூடவே, ஏழைகளின் பொருட்டு நமது புரிந்துணர்வு மேலும் ஆழமானதாக, இன்னும் உணர்வுபூர்வமானதாக இருக்க வேண்டும்.  எங்கேயாவது ஒரு ஏழை துயரத்தோடும், பட்டினியோடும் இருக்கிறார் என்றால், இந்தச் சங்கடமான வேளையில் நாம் முதலாவதாக அவரது பசியைப் போக்க வேண்டும், அவருடைய தேவைகள் பற்றி சிந்திக்க வேண்டும்.  இதை நம் இந்திய தேசத்தால் செய்ய முடியும்.  நம்முடைய மனிதத்தன்மை இதிலே தான் வாசம் செய்கிறது.  இதுவே நமது கலாச்சாரம், இதுவே நமது பண்பாடு.  

 

      எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்று ஒவ்வொரு இந்தியரும், தனது உயிரைப் பாதுகாக்க வீட்டிலேயே அமைந்திருக்கிறார்.  ஆனால் இனிவரும் காலத்தில், இதே இந்தியர், தனது நாட்டின் முன்னேற்றத்துக்காக, அனைத்துத் தடைகளையும் தகர்த்து முன்னேறிச் செல்வார், நாட்டையும் முன்னெடுத்துச் செல்வார்.  நீங்கள், உங்கள் குடும்பத்தாரோடு வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக, எச்சரிக்கையோடு இருங்கள்.  நாம் இந்த மஹா யுத்தத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.  கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.  மனதின் குரலுக்காக, மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம், அதுவரை, இந்தச் சங்கடத்தை முறியடிப்பதில் நாம் வெற்றி பெறுவோம் என்ற மனவுறுதியோடு, நல்விருப்பங்களோடு முன்னேறிச் செல்வோம், உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.


(Release ID: 1609012) Visitor Counter : 558