நிலக்கரி அமைச்சகம்

கொவிட்-19 பொது முடக்க காலத்தில் நிலக்கரி விநியோகத்தைப் பராமரிக்க நிலக்கரி அமைச்சகம் உறுதி; பிரகலாத் ஜோஷி

Posted On: 28 MAR 2020 12:14PM by PIB Chennai

கொவிட் -19  தொற்றால் அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய பொது முடக்க காலத்தில், மின்சாரத்துறையும், இதர முக்கிய துறைகளும் பாதிக்கப்படாமல் இருக்க நிலக்கரி விநியோகத்தை உறுத்திப்படுத்தும் வகையில், அது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நிலக்கரி அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகளும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.

நிலக்கரி உற்பத்தி, விநியோகம், அனுப்புதல் ஆகியவற்றைக் கண்காணிக்கும் வகையில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளின் கூட்டம் தினசரி நடத்தப்பட்டு வருகிறது. முதல் மெய்நிகர் கூட்டம், நிலக்கரி அமைச்சக செயலர் திரு. அனில் குமார் ஜெயின் தலைமையில் காணொளி மூலம் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இது தொடர்பான தினசரி அறிக்கை நிலக்கரித்துறை அமைச்சருக்கு அனுப்பப்படும்.  நிலக்கரித்துறை அமைச்சகம் காகிதத்தைப் பயன்படுத்தாத அலுவலகம் என்பதால், அதன் முழுப்பணியாளர்களும், அமைச்சகத்தின் மின்னணு அலுவலகத் தளத்திலோ, அமைச்சகத்தின் பட்டியல் விதிமுறையின்படியோ, வீட்டிலிருந்தோ பணியாற்றி வருகின்றனர்.

மார்ச் 26-ம்தேதி நிலவரப்படி, மின்சார உற்பத்தி நிலையங்களில், 24 நாட்களுக்குத் தேவையான 41.8 மெட்ரிக் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. நிலக்கரி சார்ந்த ஒவ்வொரு தொழிலும், மின்சாரத்துறையும் தடையின்றி நிலக்கரியை எளிதாகவும், போதிய அளவிலும் பெறும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான நிலையில், நிலக்கரி உற்பத்தியும், விநியோகமும் பாதிக்கப்பட மாட்டாது என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

தற்போதைய, பொது முடக்கச் சூழலில், நிலக்கரி அமைச்சகத்தின் எந்த ஒப்புதலும் தடைபடாது என்று திரு. பிரகலாத் ஜோஷி மேலும் உறுதியளித்துள்ளார்.

 

 

*****


(Release ID: 1608859) Visitor Counter : 134