பாதுகாப்பு அமைச்சகம்
கொவிட்-19 சவாலை எதிர்கொள்ள கன்டோன்மென்ட் போர்டுகள் (படைவீரர் நகரங்கள்) தயாராகின்றன
Posted On:
27 MAR 2020 3:20PM by PIB Chennai
நாடெங்கிலும் உள்ள 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், சுமார் 21 லட்சம் மக்கள் தொகையுடன் (ராணுவ மற்றும் சிவில் உட்பட) பரவி அமைந்துள்ள அறுபத்தி இரண்டு கன்டோன்மென்ட் போர்டுகள் (படைவீரர் நகரங்கள்), கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவல் விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன. எந்த நிலைமையையும் சமாளிக்க, மருத்துவமனைகள்/சுகாதார மையங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் படுக்கை வசதிகளை ஏற்படுத்துமாறு அனைத்து கன்டோன்மென்ட் போர்டுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தங்களது பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ள கன்டோன்மென்ட் போர்டுகளின் தலைவர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள், தேவையான உதவிகளை தக்க சமயத்தில் செய்து வருகின்றனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து அறிவுறுத்தல்களும் அனைத்து கன்டோன்மென்ட் போர்டுகளாலும் தவறாது கடைபிடிக்கப்படுகின்றன.
கன்டோன்மென்ட் போர்டுகளில் உள்ள அனைத்து கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள், பள்ளி வளாகங்கள், நூலகங்கள், பூங்காக்கள் மற்றும் சந்தைகள் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகின்றன. ஒலிபெருக்கிகள், கையேடுகள், விளம்பரப் பதாகைகள்/துண்டுப் பிரசுரங்கள் மூலம் கன்டோன்மென்ட் பகுதிகளில் உள்ள அனைத்து முக்கியமான இடங்கள், அலுவலகங்கள் மற்றும் கடைத்தெருக்களில் கொவிட் 19 குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. அங்குள்ள உள்ளிட மருத்துவ அதிகாரிகள், அவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பட்டறைகள் நடத்தி, கொவிட்-19 பரவாமல் தடுக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைப்பதோடு, கன்டோன்மென்ட் பொது மருத்துவமனைகளை எந்தவிதமான அவசரத் தேவைக்குமாகத் தயார்படுத்துகின்றனர். ராணுவ எஸ்டேட்டுகளின் தலைமை இயக்குநரின் உத்தரவுகளின் படி, செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க அனைத்து கன்டோன்மென்ட் பொது மருத்துவமனைகளும் முழு நேரமும் இயங்குகின்றன.
முகக் கவசங்கள், கையுறைகள், சானிடைசர் பாட்டில்களை கன்டோன்மென்ட் போர்டுகள் அனைத்துப் பணியாளர்களுக்கும் அளிக்கின்றன. கன்டோன்மென்ட் பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்களும், தங்கும் விடுதிகளும் விதிகளைத் தவறாமல் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கன்டோன்மென்ட் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள், உணவுப் பொருட்கள் போன்றவை தொடர்ந்து கிடைக்க அலுவலகப் பணியாளர்களைக் கொண்ட பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து காய்கறி மற்றும் மளிகை கடைகளிடம் பதுக்கலில் ஈடுபடக் கூடாதென்றும், மக்கள் கூட்டத்தைத் தவிர்க்குமாறும், பொது முடக்க விதிகளைப் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான, தங்குதடையில்லாத தண்ணீர் விநியோகம் மற்றும் தெரு விளக்கு சேவைகளை கன்டோன்மென்ட் போர்டுகள் உறுதி செய்து வருகின்றன. மக்களுக்கான தொலைபேசி உதவி எண்கள் பெரும்பாலான கன்டோன்மென்ட்களில் செயல்பாட்டில் உள்ளன.
கன்டோன்மென்ட் பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகம், ஜனநாயக அமைப்புகளான கன்டோன்மென்ட் போர்டுகளின் கீழ் உள்ளது. கன்டோன்மென்ட் போர்டுகளில் உள்ள இந்த பிரத்யேக அமைப்பு, கன்டோன்மெட் பகுதிகளில் ராணுவத்தினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கு இடமளிக்க முன்னுரிமை கொடுத்து வெற்றிகரமாக செயல்படுகிறது. அதே சமயம், கன்டோன்மெட் போர்டுகள், ராணுவ இருப்பிடங்களில் இருந்து மாறுபடுகின்றன. நிர்வாக உத்தரவின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ராணுவ இருப்பிடங்கள் முழுக்க முழுக்க ராணுவத்தினர் தங்குவதற்காக மட்டுமே. ஆனால், கன்டோன்மென்ட் போர்டுகளோ, ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு சாரரையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
*********
(Release ID: 1608849)
Visitor Counter : 195