பாதுகாப்பு அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான தென் மண்டல கடற்படைப் பிரிவின் நடவடிக்கைகள்

Posted On: 27 MAR 2020 12:25PM by PIB Chennai

21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தென்மண்டல கடற்படை கட்டளைப் பிரிவு  மாநில அரசு மற்றும் கடற்படை தலைமையகத்துடன் கலந்தாலோசித்து, கொவிட்-19 தொற்றுக்கு எதிரான இரண்டு அம்ச உத்தியை நடைமுறைபடுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில், முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ள அதே வேளையில், கடற்படையின் பணிகளுக்குத் தேவையான வகையில் பணியாளர்களை ஈடுபடுத்துவதுடன் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளப்படும். மருத்துவம் சாராத பணியாளர்கள், போர்க்கள உதவி செவிலியர்கள் ஆகியோர் அடங்கிய கொண்ட 10 குழுக்கள் கொச்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் நிலைமையைக்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, மருத்துவப் பணியாளர்களுக்கு உதவுவார்கள். இத்தகைய குழுக்கள், தென்மண்டலத்தின் அனைத்து பிற இடங்களிலும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விடுப்பில் இருக்கும் பணியாளர்களும், தற்காலிகப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும், ‘’எங்கு இருக்கின்றனரோ, அங்கேயே இருக்க வேண்டும், பயணம் கூடாது’’ என்ற கொள்கையைக் கடைபிடிக்குமாறு இந்தியக் கடற்படை, அறிவுறுத்தியுள்ளது.

 

தென்மண்டல கடற்படை கட்டளைத் தலைமையகம்,  கொச்சியில் இருக்கும் தனது பயிற்சிப் பிரிவுகளில் ஒன்றை, 200 இந்தியக் குடிமக்களுக்கான கொரோனோ பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளது. இதில், அரசின் உத்தரவின் பேரில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களில் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்  தங்க வைக்கப்படுகின்றனர். சேவைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டால், 200 பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைத் தங்க வைப்பதற்கான மற்றொரு தனி மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மையங்களிலும், தற்போதைய உத்தரவின்படி, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உணவு வழங்கவும், கழிப்பறைகள், மருத்துக்கழிவு மேலாண்மை பராமரிப்பு , கேளிக்கை ஏற்பாடுகள் ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையம், கடமை உணர்வு கொண்ட இந்தியக் கடற்படையின் அதிகாரிகளால், நிர்வகிக்கப்படும். நோயாளிகளின் தேவைகளை கவனிப்பதற்காக இந்தியக் கடற்படை மருத்துவர்கள் மற்றும் செவிலியர் சேவைப் பணியாளர்களை உள்ளடக்கிய தனி மருத்துவ மையமும் இயங்கும். மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ள மருத்துவ நெறிமுறைகள் இங்கு கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகின்றன.

 

பொது இடங்களில், சிறப்பு சுகாதார இயக்கங்களும், குடும்பத்தினர் உள்ளிட்ட பணியாளர்களுக்கான விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 



(Release ID: 1608520) Visitor Counter : 143