பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட் – 19-ஐ கையாள்வதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயல் திட்டம் பற்றி பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆய்வு:

ஆயுதப் படைகள், பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தயார்நிலைக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டு மக்கள் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்குமாறு வலியுறுத்தல்

Posted On: 26 MAR 2020 2:23PM by PIB Chennai

கோவிட் - 19 பரவல் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் செயல் திட்டம் குறித்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில்  ஆலோசனை நடத்தினார். கோவிட் - 19 பாதித்த நாடுகளில் இருந்து இந்தியர்களையும், வெளிநாட்டினரையும் வெளியேற்றி அழைத்து வந்ததிலும், பல்வேறு தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்களில் அவர்களுக்கு உரிய சிகிச்சை வசதிகளை செய்து கொடுத்தலிலும் பாதுகாப்புத் துறையின் பல்வேறு துறைகளும், ஆயுதப் படையினரும் ஆற்றிய ஆக்கபூர்வமான பங்களிப்பை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். ஆயுதப் படைகளும் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு துறைகளும் ஆயத்த நிலையை தீவிரப்படுத்திக் கொண்டு, பொது மக்கள் நிர்வாகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்குத் தேவைப்படும் உதவிகளை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

இதுவரை அளிக்கப்பட்ட பல்வேறு உதவிகள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை பற்றி இந்தக் கூட்டத்தில் அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கிடம் அதிகாரிகள் விளக்கினர். சீனா, ஜப்பான், ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இந்திய தேசத்தவர்களை வெளியேற்றி அழைத்து வருவதற்கு, இந்திய விமானப் படை விமானங்கள் பல முறை பயணம் மேற்கொண்டதை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 

ஆயுதப்படைகளிடம் உள்ள பல்வேறு தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்களில் வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 1,462 பேர் இதுவரையில்,சிகிச்சை பெற்றுள்ளனர்.  அவர்களில் 389 பேர்  உடல்நலம் தேறியதும் அங்கிருந்து (டிஸ்சார்ஜ் செய்து) அனுப்பி வைக்கப்பட்டனர் . இப்போது மானேசர், ஹின்டான், ஜெய்சல்மர், ஜோத்பூர், மும்பை ஆகிய இடங்களில் உள்ள மையங்களில், 1,073 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 950 படுக்கை வசதிகளுடன் கூடுதல் தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்கள் ஆயத்த நிலையில் உள்ளன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன  (டி.ஆர்.டி.ஓ. ) ஆய்வகங்களில் 20,000 லிட்டர் கிருமிநாசினி திரவம் தயாரிக்கப்பட்டு  பல்வேறு நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல் துறைக்கு 10,000 லிட்டர் வழங்கப்பட்டதும் இதில் அடங்கும். டெல்லி காவல் துறையினருக்கு 10,000 முகக் கவச உறைகள் (மாஸ்க்குகள்) டி.ஆர்.டி.ஓ. மூலம் வழங்கப்பட்டுள்ளது. உடல் கவச உடைகள், வென்டிலேட்டர்கள் போன்ற தனிநபர் பாதுகாப்பு சாதனங்களைத் தயாரிப்பதற்கு சில தனியார் நிறுவனங்களுடன் டிஆர்டிஓ கூட்டு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

கிருமிநாசினிகள், மாஸ்க்குகள், உடல் கவச உடைகள் தயாரிப்பை ராணுவ தளவாட உற்பத்தி வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது. வென்டிலேட்டர்கள் தயாரிப்பில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது.

மாலத்தீவுகளில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ மருத்துவக் குழுக்கள் அங்கு பணிகளை முடித்துவிட்டு திரும்பி வந்துள்ளன. அருகில் உள்ள நட்பு நாடுகளுக்கு, தேவையின் அடிப்படையில் சேவைகள் அளிக்க இரண்டு ராணுவ மருத்துவக் குழுக்களும், கப்பல் படையின் இரண்டு கப்பல்களும் தயார் நிலையில் உள்ளன.

ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், பாதுகாப்புத் துறை செயலர் டாக்டர் அஜய்குமார், கப்பல்படை தலைமைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், விமானப் படை தலைமைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதவ்ரியா, ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே, பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலர் திரு. ராஜ்குமார், முன்னாள் படைவீரர் நலன் துறை செயலாளர் திருமதி சஞ்சீவனி குட்டி, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டுத் துறை செயலர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 


(Release ID: 1608388) Visitor Counter : 260