மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய புத்தக டிரஸ்ட் அமைப்பு #StayHomeIndiaWithBooks முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது

என்.பி.டி.யின் இணையதளத்தில் இருந்து PDF பைல்களாக 100க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Posted On: 25 MAR 2020 9:14PM by PIB Chennai

கோவிட் - 19 பரவுதலைத் தடுப்பதற்கு இந்திய அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மக்கள் வீடுகளுக்குள் (#StayIn) மற்றும் வீடுகளிலேயே (#StayHome) இருப்பதை ஊக்குவிப்பதற்காக  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய புத்தக டிரஸ்ட் அமைப்பு, வீட்டில் இருக்கும்போது புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அதிகம் விற்பனையாகும் தலைப்புகளிலான புத்தகங்களை இலவச பதிவிறக்கத்துக்கு அளிக்க முன்வந்துள்ளது. #StayHomeIndiaWithBooks என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட புத்தகங்களை பி.டி.எப். பைல்களாக என்.பி.டி.யின் இணையதளத்தில் https://nbtindia.gov.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ், இந்தி, ஆங்கிலம், அசாமியா, பங்க்ளா, குஜராத்தி, மலையாளம், ஒடியா, மராத்தி, கோக்போரோக், மிஜோ, போடோ, நேப்பாளி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், உருது மற்றும் சமஸ்கிருத மொழிகளில் இந்தப் புத்தகங்கள் உள்ளன. கற்பனை சாகசக் கதைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், பிரபல அறிவியல் புத்தகங்கள், ஆசிரியர்களின் கையேடுகள், மற்றும் குழந்தைகள், பெரியவர்களுக்கான அதிக புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அத்துடன், தாகூர், பிரேம்சந்த் ஆகியோரின் புத்தகங்களும், மகாத்மா காந்தி பற்றிய புத்தகங்களும் இதில் உள்ளன. குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்து மகிழ்வதற்கான புத்தகங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மேலும் புத்தகங்கள் சேர்க்கப்படும்.

விடுமுறைகள் வந்துவிட்டன (Holidays Have Come), நீங்கள் மறக்க முடியாத விலங்குகள் (Animals You can't Forget), ஒன்பது சிறிய பறவைகள் (Nine Little Birds), புதிர் (The Puzzle), காந்தி தத்துவ சட்கம் (Gandhi Tatva Satkam), இந்தியாவில் பெண் விஞ்ஞானிகள் (Women Scientists in India), செயல்பாடு அடிப்படையில் அறிவியல் கற்றல் (Activity-Based Learning Science), ஏ டச் ஆஃப் கிளாஸ் (A Touch of Glass), காந்தி: அஹிம்சையின்  மாவீரர் (Gandhi: Warrior of Non-Violence)   என்ற சில தலைப்புகளிலும், இன்னும் பல தலைப்புகளிலும் புத்தகங்கள் இலவசப் பதிவிறக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த பி.டி.எப். புத்தகங்கள் படிப்பதற்கு மட்டுமே. அத்தாட்சி இல்லாத அல்லது வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கு அனுமதி இல்லை.



(Release ID: 1608299) Visitor Counter : 219