பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்-19 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்காக 285 படுக்கைகளை ஒதுக்கியது ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம்

Posted On: 25 MAR 2020 1:53PM by PIB Chennai

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்காக 285 படுக்கைகளை ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம் ஒதுக்கியுள்ளது. ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலையில் உள்ள மருத்துவமனைகளுக்காக 40 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இஷாபூரில் உள்ள உலோகம் மற்றும் எஃகு தொழிற்சாலை, கோசிப்பூரில் உள்ள துப்பாக்கி மற்றும் தோட்டா தொழிற்சாலை, கட்கியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை, கான்பூரில் உள்ள தளவாடங்கள் தொழிற்சாலை, கமாரியாவில் உள்ள தளவாடங்கள் தொழிற்சாலை மற்றும் அம்பஜாரியில் உள்ள தளவாடங்கள் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு தலா 30 படுக்கைகளும், அம்பேர்நாத்தில் உள்ள தளவாடங்கள் தொழிற்சாலைக்கு 25 படுக்கைகளும், ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை மற்றும் மேடக்கில் உள்ள தளவாடங்கள் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு தலா இருபது படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியத்தின் தலைவர், ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியத்தின் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் அதற்கேற்ற படுக்கை வசதிகளை அமைக்கும் பணியை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை நேற்று மத்திய அமைச்சரவை செயலாளரின் கூட்டத்தில் அளித்த அறிவுறுத்தலின்படி செயல்படுத்தியுள்ளார். மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான எச் எல் எல் லைஃப்கேர் லிமிடெட் அளித்துள்ள பைலட் ஆர்டரின் அடிப்படையில், ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம் தனிப்பட்டபாதுகாப்பு சாதனங்கள் மற்றும் முக கவசங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.

***



(Release ID: 1608241) Visitor Counter : 162