மத்திய அமைச்சரவை

இந்தியா - ஜெர்மனி இடையில் ரயில்வே துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 25 MAR 2020 3:43PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய ரயில்வே அமைச்சகத்துக்கும், ஜெர்மனியின் டி.பி. என்ஜினியரிங் & கன்சல்ட்டிங் GMBH -க்கும் இடையில் ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் 2020 பிப்ரவரி மாதம் கையெழுத்திடப்பட்டது.

விவரங்கள்:

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பின்வரும் விஷயங்களில் ஒத்துழைப்புக்கு வகை செய்கிறது:

 

  1. சரக்கு கையாளுதல் (எல்லை கடந்த போக்குவரத்து, ஆட்டோமோட்டிவ் போக்குவரத்து மற்றும் சரக்குகள் போக்குவரத்து உள்பட).
  2. பயணிகளைக் கையாளுதல் (அதி விரைவு மற்றும் எல்லை கடந்த போக்குவரத்து உள்பட).
  3. கட்டமைப்பு உருவாக்கல் மற்றும் மேலாண்மை (பிரத்யேகமான சரக்குப் போக்குவரத்துத் தடங்கள் மற்றும் பயணிகள் ரயில் நிலையங்கள் உருவாக்குதல் உள்பட).
  4. நவீன, போட்டித்தன்மை மிகுந்த ரயில்வே நிறுவனம் உருவாக்குதல் (நிறுவன கட்டமைப்புகள் மேம்பாடு மற்றும் ரயில்வே சீர்திருத்தம் உள்பட)
  5. ரயில்வே செயல்பாடுகள், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையும், நிர்வாகத் தேவைகளுக்கான விஷயங்களிலும் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள் உருவாக்குதல்
  6. முன்னதாக யூகித்தறிந்து பராமரித்தலுக்கு திட்டமிடுதல்
  7. தனியார் ரயில் செயல்பாடுகள், மற்றும்
  8. இரு தரப்பாருக்கும் இடையில் பரஸ்பரம் எழுத்துபூர்வமாக ஒப்புக்கொள்ளப்படும் வேறு எந்த விஷயங்களும்

 

பின்னணி:

ரயில்வே அமைச்சகம், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக பல்வேறு வெளிநாட்டு அரசுகள் மற்றும் தேசிய ரயில்வேக்களுடன், ஒத்துழைப்புக்கானது என அடையாளம் காணப்பட்ட விஷயங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU)/ ஒத்துழைப்புக்கான குறிப்பாணைகள் (MoC)/ நிர்வாக ஏற்பாடுகள் (AA)/ விருப்பம் தெரிவிக்கும் கூட்டு அறிவிக்கைகள் (JDI) ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ளது. இதில் அதிவிரைவு ரயில், இப்போதுள்ள வழித்தடங்களில் வேகத்தை அதிகரித்தல், உலக தரத்திலான ரயில் நிலையங்களை உருவாக்குதல், தீவிர சீரமைப்பு செயல்பாடுகள் மற்றும் ரயில்வே கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.

******



(Release ID: 1608138) Visitor Counter : 157