பிரதமர் அலுவலகம்

சார்க் நாடுகளில் கோவிட் -19 நோயைக் கட்டுப்படுதுவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாடல்

சார்க் நாடுகளுக்காக கோவிட் -19 அவசர நிலை நிதியம் உருவாக்க பிரதமர் யோசனை

Posted On: 15 MAR 2020 6:58PM by PIB Chennai

சார்க் நாடுகளில் கோவிட் - 19 நோயைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்தாடல் செய்தார்.

வரலாற்றைப் பகிர்தல் - கூட்டாக எதிர்காலத்தை எதிர்கொள்தல்

குறுகிய கால அவகாசத்தில் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டமைக்கு சார்க் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். சார்க் நாடுகளுக்கு இடையில் பழங்கால மக்கள் நேரடி தொடர்பு கொண்டிருந்தது பற்றியும், சமூக அளவில் தொடர்புகள் இருந்தது பற்றியும் குறிப்பிட்ட அவர், சவால்களை எதிர்கொள்வதில் இந்த நாடுகள் ஒன்றுபட்டு ஆயத்தமாக வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

எதிர்நோக்கும் பாதை

கூட்டுமுயற்சி என்ற உத்வேகத்தில், கோவிட் - 19 அவசர நிலை நிதியத்தை உருவாக்கலாம் என்று பிரதமர் திரு. மோடி யோசனை கூறினார். சார்க் நாடுகள் தாங்களாக முன்வந்து இதற்குப் பங்களிப்பு செய்யலாம் என்று கூறிய அவர், ஆரம்பகட்ட பங்களிப்பாக இதற்கு இந்தியாவின் சார்பில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். உடனடி செயல்பாடுகளுக்கான செலவினத்தை சமாளிக்க, சார்க் நாடுகளில் யாரும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட விரைந்த செயல்பாட்டுக் குழுவை நாங்கள் உருவாக்குகிறோம் என்றும். அதில் பரிசோதனை உபகணங்கள் மற்றும் சாதனங்களும் இருக்கும் பிரதமர் தெரிவித்தார். தேவையின் அடிப்படையில் அதைப் பயன்படுத்திக் கொள்ள அவை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்று பிரதமர் கூறினார்.

அருகில் உள்ள நாடுகளில் அவசரநிலை செயல்பாட்டு குழுக்களுக்கு ஆன்லைன் பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாக பிரதமர் கூறினார். .

வைரஸ் பாதிப்பு இருப்பவர்களை நல்ல முறையில் பின்தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் அவர்கள் தொடர்பு கொண்டவர்களையும் பின்தொடர்ந்து கண்காணித்தலை சிறப்பாக செய்வதற்கு ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு முனையத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த நோய் கண்காணிப்பு மென்பொருளை சார்க் பங்காளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், இதில் பயிற்சி அளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். நாம் மேற்கொண்டு வருபவற்றில் சிறந்த நடைமுறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, இப்போதுள்ள சார்க் பேரிடர் மேலாண்மை மையம் போன்ற வசதிகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்திற்குள் இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, பொதுவான ஆராய்ச்சி தளம் ஒன்றை நாம் உருவாக்கலாம் என்றும் பிரதமர் கூறினார்.  கோவிட் -19-ன் நீண்டகால பொருளாதார பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்யுமாறு நம் நிபுணர்களை  கேட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். நமது உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படாத வகையிலும், இந்த தாக்கத்தில் இருந்து உள்நாட்டு மதிப்பு சங்கிலித் தொடர் பாதிக்கப்படாமல் இருக்கவும் இவர்கள் ஆய்வு செய்யலாம் என்று அவர் கூறினார்.

பிரதமர் முன்வைத்த திட்டங்களுக்காக சார்க் தலைவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பக்கத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அளிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்த ஒத்துழைப்பு உலகின் மற்ற பகுதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

அனுபவங்களைப் பகிர்தல்

``ஆயத்தமாக இருங்கள், பதற்றம் வேண்டாம்'' என்பது தான் இந்தியாவின் தாரக மந்திரமாக உள்ளது என்று பிரதமர் கூறினார். படிநிலைகளில் நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வசதிகள், இந்தியாவுக்குள் வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தல், தொலைக்காட்சிகளில் அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் பொது மக்கள் விழிப்புணர்வு முயற்சிகள், பாதிப்புக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ள மக்களை சென்றடைய சிறப்பு முயற்சிகள், மருத்துவப் பரிசோதனை வசதிகளை அதிகமாக்குதல், தொற்றுநோயை கையாள்வதில் ஒவ்வொரு நிலையிலும் நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்கப்படுவதை பிரதமர் விளக்கினார்.

பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 1400 பேரை வெற்றிகரமாக வெளியேற்றி இங்கே அழைத்து வந்திருப்பதுடன் மட்டுமின்றி,  `அருகாமை நாடுகளுக்கு முதலில் என்ற கொள்கையின்' அடிப்படையில், அருகில் உள்ள நாடுகளில் இருந்து குடிமக்கள் சிலரை வெளியேற்றி அழைத்து வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஈரானுடனான எல்லை கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது தான் தங்களுக்கு மிகப் பெரிய ஆபத்து வாய்ப்பாக இருக்கிறது என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி கூறினார். அருகாமை நாடுகளுக்கு இடையில், நோயைத் தணிப்பதில், டெலிமெடிசின் முறையில் பொதுவான கட்டமைப்பு உருவாக்குதல், அதிக ஒத்துழைப்பு ஏற்படுத்துதல் ஆகியவற்றில் முன்மாதிரியான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிட் - 19 நோய் பாதிப்பை கையாள இந்திய அரசு மருத்துவ உதவிகள் அளித்தமைக்காக மாலத்தீவுகள் அதிபர் இப்ரஹிம் முகமது சோலிஹ் நன்றி தெரிவித்துக் கொண்டார். வுஹானில் இருந்து மாலத்தீவு குடிமக்கள் 9 பேரை வெளியேற்றி அழைத்து வந்தமைக்கும் அவர் நன்றி கூறினார். கோவிட் - 19 காரணமாக தங்கள் நாட்டில் சுற்றுலாத் துறையில் தேக்கம் ஏற்பட்டிருப்பது பற்றியும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது பற்றியும் அவர் முதன்மைப்படுத்திக் கூறினார்.  சார்க் நாடுகளுடன் சுகாதார அவசர கால அமைப்புகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்படுவதாகவும், பொருளாதார நிவாரண திட்டங்களை உருவாக்குதல், இந்தப் பிராந்தியத்தில் நீண்டகால மீட்சி நடவடிக்கைகளை உருவாக்குதல் ஆகிய யோசனைகளை அவர் முன்வைத்தார்.

சிரமமான காலக்கட்டத்தில் பொருளாதார சரிவை சமாளிக்க சார்க் தலைவர்கள் ஒன்றுபட்டு உதவிகள் செய்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆலோசனை கூறினார். கோவிட் - 19 கட்டுப்படுத்துதல் முயற்சியை இந்தப் பிராந்தியத்தில் ஒருங்கிணைப்பு செய்யவும், சிறந்த நடைமுறைகளின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அமைச்சரவை அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

வுஹானில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இந்திய மாணவர்களை வெளியேற்றி அழைத்து வந்தபோது, வங்கதேசத்தைச் சேர்ந்த 23 பேரையும் அழைத்து வந்தமைக்காக பிரதமர் திரு. மோடிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தப் பிராந்தியத்தின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அளவில் விடியோ கான்பரன்ஸ் மூலம் தொழில்நுட்ப தகவல்கள் குறித்து கலந்தாடல்கள் செய்வதைத் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிட் - 19-ஐ கட்டுப்படுத்த நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அந்த நாட்டின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி விவரித்தார். சார்க் நாடுகள் இணைந்து துடிப்புடன் நடவடிக்கைகள் எடுத்தால், இந்த தொற்று நோய் பரவாமல் தடுப்பதில் சிறந்த திட்டங்களை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

நோய்த் தொற்றுகளுக்கு நாடுகளின் எல்லைகள் தடையாக இருப்பதில்லை என்று பூட்டான் பிரதமர் டாக்டர் லோட்டேய் ட்ஷெரிங் கூறினார்.  எனவே அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றார் அவர். கோவிட் - 19 காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்பு பற்றிக் குறிப்பிட்ட அவர், சிறிய பொருளாதார நாடுகளை இது பெருமளவு பாதிக்கும் என்று குறிப்பிட்டார்.

சுகாதார தகவல்கள், தகவல் தொகுப்பு பரிமாற்றம், உடனுக்குடன் ஒருங்கிணைப்பு போன்றவற்றை செய்வதற்காக சார்க் செயலகத்தில் பணிக்குழு உருவாக்கலாம் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் ஜாபர் மிர்ஜா கூறினார். நோய் பாதித்தவர்களை பின்தொடர்ந்து கண்காணித்தலை நடைமுறைகளை பிராந்திய அளவில் உருவாக்கி, உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் சார்க் சுகாதார அமைச்சர்கள் மாநாடு நடத்துவது பற்றியும் அவர் யோசனையை முன்வைத்தார்.

******


(Release ID: 1606499) Visitor Counter : 467