பிரதமர் அலுவலகம்
வனவிலங்குகளில் இடம்பெயரும் உயிரினங்களின் பாதுகாப்புக்கான 13வது மாநாட்டினை காந்தி நகரில் பிரதமர் தொடங்கி வைத்தார்
கால வரம்புக்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே புலிகள் எண்ணிக்கையை இந்தியா இரண்டு மடங்காக்கியுள்ளது : பிரதமர்
நுண்ணிய பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாக மாசுபடுவதை தடுக்கும் வகையில் கடல் ஆமை கொள்கையையும் கடல்பகுதி நிர்வாகக் கொள்கையையும் இந்தியா அறிவிக்கவுள்ளது
Posted On:
17 FEB 2020 1:19PM by PIB Chennai
வனவிலங்குகளில் இடம்பெயரும் உயிரினங்களின் பாதுகாப்புக்கான 13வது மாநாட்டினை காந்தி நகரில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உலகில் பல வகையான உயிரினங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்று தெரிவித்தார். உலகின் நிலப்பரப்பில் 2.4%மாக உள்ள இந்தியாவில் உலக உயிரினங்களில் 8% உள்ளன என்று அவர் கூறினார். வன விலங்குகளையும், பறவை இனங்களையும் பாதுகாப்பது பல்லாண்டு காலமாக இந்தியாவின் கலாச்சார நெறிகளின் ஒரு பகுதியாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இது கருணையையும், சகவாழ்வையும் ஊக்கப்படுத்துகிறது என்றார். “காந்தி ஜி-யால் ஊக்கம் பெற்று, அஹிம்சை, விலங்குகள் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு என்ற நெறிமுறைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பொருத்தமாக சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு சட்டங்களிலும் இது பிரதிபலிக்கிறது” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் வனப்பரப்பு அதிகரித்து வருவது பற்றி பேசிய பிரதமர், தற்போது நாட்டின் ஒட்டுமொத்த புவிப்பரப்பில் வனப்பகுதி 21.67%மாக உள்ளது என்றார். சேமிப்பு, நீடித்த வாழ்க்கை முறை, பசுமை மேம்பாட்டு மாதிரி ஆகியவற்றின் மூலம் “பருவநிலை செயல் திட்டத்திற்கு” இந்தியா எவ்வாறு பங்களிப்பு செய்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சூழலில், மின்சார வாகனங்கள், பொலிவுறு நகரங்கள், தண்ணீர் சேமிப்பு என்பதை நோக்கி முன்னேறுவதையும் அவர் குறிப்பிட்டார். வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வைத்திருப்பது என்ற பாரிஸ் ஒப்பந்த இலக்கை நிறைவேற்றும் வகையிலான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் சில நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சிலவகை உயிரினங்களின் பாதுகாப்புத் திட்டங்கள் ஊக்கமளிக்கும் விளைவுகளை எவ்வாறு ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பிரதமர் விவரித்தார். “2010ல் 1411ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கையை 2967ஆக அதிகரித்து, 2022க்குள் இரண்டு மடங்காக்குவது என்ற இலக்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே இந்தியா எட்டியுள்ளது” என்று அவர் கூறினார். இதற்கான சிறப்புமிக்க நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் புலிகள் பாதுகாப்பை பலப்படுத்த ஒருங்கிணையுமாறு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள புலிகள் பாதுகாப்பு நாடுகளுக்கும் மற்றவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். ஆசிய யானைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் அவர் பேசினார். பனிச்சிறுத்தை, ஆசிய சிங்கம், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், இந்தியாவின் அரிய வகை பஸ்டார்ட் பறவை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்தியாவின் அரியவகை பஸ்டார்ட் பறவைக்குப் புகழ் சேர்க்கும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள ‘ஜிபி’ – தி கிரேட்’ முகமூடி பற்றியும் அவர் குறிப்பிட்டார். இடம்பெயரும் உயிரினங்களின் பாதுகாப்புக்கான 13வது மாநாட்டின் இலச்சினையாக தென்னிந்தியாவின் பாரம்பரியமான ‘கோலம்’ இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இயற்கையோடு இயைந்த வாழ்வின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக இது உள்ளது என்றார். “இடம்பெயரும் உயிரினங்கள் கோலினை இணைக்கின்றன அவற்றை வீடுகளுக்கு இணைந்து நாம் வரவேற்போம்” என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாக இருப்பது “அதிதி தேவோ பவ” என்ற மந்திரத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வரும் 3 ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவின் சில முன்னுரிமைத் துறைகள் பற்றியும் பிரதமர் விவரித்தார்.
இடம்பெயர்ந்து வரும் பறவைகளுக்கான மத்திய ஆசியப் பகுதியாக இந்தியா விளங்குவதைக் குறிப்பிட்ட பிரதமர், மத்திய ஆசிய பறவைகள் இடம்பெயரும் வழிகளிலும் அவை தங்கும் இடங்களிலும், அவற்றைப் பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டு அதற்கான தேசிய செயல் திட்டத்தை இந்தியா தயாரித்துள்ளது என்றார். “இது தொடர்பாக மற்ற நாடுகளும் செயல் திட்டங்களை உருவாக்கினால் இந்தியா மகிழ்ச்சியடையும். பறவைகள் கடந்து செல்லும் பாதை உள்ள மத்திய ஆசியாவின் அனைத்து நாடுகளுடன் தீவிரமாக ஒத்துழைத்து, இடம்பெயரும் பறவைகள் பாதுகாப்பில் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்த நாங்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடு நாடுகளுடன் தமது நெருக்கத்தை வலுப்படுத்த இந்தியா ஆர்வத்துடன் உள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்தியா முன்னணிப் பாத்திரம் வகிக்கும் இந்திய பசிபிக் கடல் முன்முயற்சி அமைப்புடன் இயைந்ததாக இது இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 2020க்குள் கடல் ஆமை கொள்கையையும் கடல்பகுதி நிர்வாகக் கொள்கையையும் இந்தியா அறிவிக்கும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார். இது நுண்ணிய பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசினைக் கட்டுப்படுத்த உதவும் என்று அவர் கூறினார். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒரு சவாலாக உள்ளது என்றும், இதன் பயன்பாட்டைக் குறைப்பதற்கு இயக்கம் ஒன்றை இந்தியா நடத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அண்டை நாடுகளின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளோடு இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பல பகுதிகள் பொதுவான எல்லைகளைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், ‘இரு நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பாதுகாப்பு பகுதிகள்’ உருவாக்கம் வனவிலங்குகள் பாதுகாப்பு ஒத்துழைப்பில் மிகவும் ஆக்கப்பூர்வமான விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளது என்றார்.
நீடித்த வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறிய பிரதமர், சுற்றுச்சூழல் ரீதியில் பலவீனமாக உள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த அடிப்படை கட்டமைப்புக் கொள்கை விதிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
நாட்டின் வனப்பகுதிக்கு அருகே வாழ்கின்ற லட்சக்கணக்கான மக்கள் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரையும் அரவணைப்போம்” என்ற உணர்வுடன், தற்போது கூட்டு வன நிர்வாக குழுக்கள், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுக்கள் என்ற வடிவில் ஒருங்கிணைக்கப்பட்டு வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்போடு எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பிரதமர் விவரித்தார்.
*****
(Release ID: 1603441)
Visitor Counter : 407