பிரதமர் அலுவலகம்

2020 பிப்ரவரி 16 ஆம் தேதி பிரதமர் வாரணாசிக்கு செல்கிறார்

தீன்தயாள் உபாத்யாயா நினைவகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து சிலையைத் திறந்துவைக்கிறார்

வாரணாசி, உஜ்ஜைனி, ஓம்காரேஷ்வர் ஆகிய மூன்று ஜோதிர்லிங்க புனித தலங்களை இணைக்கும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்

வாரணாசியில் 430 படுக்கைகளுடன் கூடிய பல்நோக்கு சிறப்பு அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்

Posted On: 14 FEB 2020 2:09PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, தமது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வரும் 16 ஆம் தேதி ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார்.

     ஸ்ரீ ஜெகத்குரு விஸ்வராத்யா குருகுலத்தின் நூற்றாண்டு விழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.  ஸ்ரீ சித்தாந்த் ஷிகாமணி கிரந்தத்தின் 19 மொழிகளிலான மொழியாக்கத்தையும், அதன் கைபேசி செயலியையும் பிரதமர் வெளியிடுகிறார்.

     பின்னர் திரு.நரேந்திர மோடி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு மையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  அந்த நிகழ்ச்சியில் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர பஞ்சலோக சிலையை பிரதமர் திறந்துவைக்கிறார்.  நாட்டில் உள்ள தலைவர்களின் சிலைகளில் இதுதான் உயரமான சிலையாகும். 200-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் இரவு-பகலாக கடந்த ஓராண்டில் பாடுபட்டு இந்தச் சிலையை செய்து முடித்துள்ளனர்.

     பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் வாழ்க்கை குறிப்புகள் அந்த நினைவு மையத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டில் இந்தத் திட்டத்தில் சுமார் 30 ஒடிஷா கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள் பணியாற்றினர்.

நினைவு மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பின்னர் நடைபெறவுள்ள பொது நிகழ்ச்சியில் பிரதமர் 30-க்கும் மேற்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதில் காசி இந்து விஸ்வ வித்யாலயாவில் (பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி) 430 படுக்கைகளைக் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையும், 74 படுக்கைகளைக் கொண்ட மனநல மருத்துவமனையும் அடங்கும்.

பிரதமர் பின்னர், காணொலி மூலம் ஐஆர்சிடிசியின் மஹாகால் விரைவு ரயிலை கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார். வாரணாசி-உஜ்ஜைனி-ஓம்காரேஷ்வர் ஆகிய மூன்று ஜோதிர் லிங்க புனித தலங்களை இந்த ரயில் இணைக்கிறது.  நாட்டிலேயே இரவில் இயக்கப்படும் முதல் தனியார் ரயில் இதுவாகும்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ‘ஒரு காசி அநேக ரூபம்’ என்ற திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்து வரும் கலைஞர்கள் மற்றும் பொருட்களை வாங்குவோர் இடையே பிரதமர் கலந்துரையாடுவார்.  பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, ஹஸ்தகலா சங்குலில் இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.  உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உற்பத்திப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும்.

 

 

*****


(Release ID: 1603206) Visitor Counter : 176