பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை

Posted On: 05 FEB 2020 2:00PM by PIB Chennai

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

     மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்ள இன்று நான் உங்கள் அனைவரின் முன்பாக வந்திருக்கிறேன்.

     இந்த விஷயம் என்னைப் போலவே, கோடிக்கணக்கான நமது சகோதர, சகோதரிகளின்  இதயத்திற்கும் நெருக்கமானது. இதுகுறித்துப் பேசுவதை நான் பெருமிதமாக உணர்கிறேன். 

     இந்த விஷயம் ராமஜென்ம பூமியோடும், பகவான் ஸ்ரீராமரின் பிறந்த இடமான அயோத்யாவில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டுவதோடும் தொடர்புடையது.

 

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

     2019 நவம்பர் 9 அன்று, குருநானக் தேவின் 550-ஆவது பிறந்தநாளையொட்டி கர்தார்பூர் சாஹிப் பாதையை தேசத்திற்கு அர்ப்பணிப்பதற்காக நான் பஞ்சாபில் இருந்தேன். இந்த தெய்வீகமான சூழலில், ராம்ஜென்மபூமி விஷயத்தில் நாட்டின் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு பற்றி நான் அறிந்தேன்.

     ராம்ஜென்மபூமியின் உள்ளேயும், வெளியேயும் உள்ள பிரச்சினைக்குரிய நிலம் பகவான் ஸ்ரீ ராம் லல்லா விராஜ்மானுக்கு சொந்தமானது என இந்தத் தீர்ப்பில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது.

     மத்திய அரசும், மாநில அரசும் கலந்து பேசி, சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

      உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மனதில்கொண்டு இன்றுகாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் இந்த விஷயத்தின் மீது எடுத்துள்ள முக்கியமான முடிவுகளை மேன்மைதங்கிய இந்த அவையுடனும், ஒட்டுமொத்த தேசத்துடனும் பகிர்ந்து கொள்ள நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க பகவான் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கும் தொடர்புடைய மற்ற விஷயங்களுக்கும் விரிவான திட்டத்தை எனது அரசு தயாரித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, “ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா” என்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அறக்கட்டளை அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பகவான் ஸ்ரீராம் பிறந்த இடமான அயோத்யாவில் பிரம்மாண்டமான தெய்வீகத் தன்மை கொண்ட ஸ்ரீராமர் கோவில் கட்டுவதற்கும் அது தொடர்பான மற்ற விஷயங்களில் முடிவெடுப்பதற்கும் இந்த அறக்கட்டளைக்கு முழுமையான அதிகாரம் அளிக்கப்படும்.

 

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

     மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, விரிவான பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசனைக்குப்பின், சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரப்பிரதேச அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  அந்த மாநில அரசு இதற்கு ஒப்புதலும் அளித்துள்ளது.

 

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

தெய்வீகத்தன்மை கொண்ட பகவான் ஸ்ரீராம், அயோத்யா, சமய பக்தி நிறைந்த அயோத்யா தாம் ஆகியவற்றின் வரலாற்றுச் சூழலை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இவை அனைத்தும் இந்தியாவின் ஆன்மா, லட்சியங்கள், நீதிநெறிகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதாகத் திகழ்கின்றன.

அயோத்யாயில் பகவான் ஸ்ரீ ராமருக்கு பிரமாண்டமான கோயில் கட்டுவதைக் கருத்தில் கொண்டும், தற்போது ராம் லல்லா தரிசனத்துக்காக வருகை தரும் யாத்ரீகர்கள், இனி எதிர்காலத்தில் வருகை தர இருப்போர் என அனைவரின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டும், அரசு மேலும் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

அயோத்யா சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள, உட்புற, வெளிப்புற பகுதிகள் உள்பட ஏறக்குறைய 67.703 ஏக்கர் பரப்பளவிலான முழு நிலத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த் ஷேத்ராவிடம் வழங்க எனது அரசு முடிவெடுத்துள்ளது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த நவம்பர் 9, 2019 அன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட போது, நமது ஜனநாயக அமைப்பின் மீது கொண்ட முழு நம்பிக்கையால் சிறந்த முதிர்ச்சியை இந்திய மக்கள் வெளிப்படுத்தினர்.

இன்று இந்த அவையில், நாட்டு மக்களின் இந்த மனப்பக்குவத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.

நமது கலாசாரமும், பாரம்பரியமும் ``வசுதைவ குடும்பகம்”, ``சர்வ பவந்து சுகினா” என்ற தத்துவங்களை நமக்கு வழங்கி உள்ளன. இதுவே நாம் தொடர்ந்து முன்னேற தூண்டுதலாக உள்ளது. 

இந்தியாவில் உள்ள அனைத்து சமயத்தினரும், அவர்கள் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், சமணர்கள் என இருந்தாலும், ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆவர்.

எனது அரசு, `அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரையும் அரவணைப்போம்’ என்ற மந்திரத்தை நோக்கிச் செல்வதால், இந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் முன்னேறுகிறார்கள், மகிழ்ச்சியுடனும் நலமுடனும் இருக்கிறார்கள், இவர்கள் வளமுடன் இருப்பதால் நாடும் வளர்ச்சி அடைகிறது.

இந்த முக்கியமான தருணத்தில், இந்த மேன்மையான அவையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அயோத்யாவில் உள்ள ஸ்ரீ ராம் தாமைப் புனரமைக்கவும், பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கும் ஒருமித்த குரலில் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

*****



(Release ID: 1602960) Visitor Counter : 166