பிரதமர் அலுவலகம்

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் பதிலுரை

வேகம் மற்றும் அளவுகோல், தீர்மானம் மற்றும் உறுதியான முடிவையே மக்கள் விரும்புகின்றனர் – பிரதமர்
வேளாண் துறைக்கான ஒதுக்கீடு 5 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தகவல்
அதிக முதலீடு, மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் நோக்கம்

Posted On: 06 FEB 2020 5:07PM by PIB Chennai

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, நம்பிக்கை உணர்வு மற்றும் எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான செயல் திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் உரை வகுத்திருப்பதாக கூறினார்.

     “நூற்றாண்டின் 3-வது தசாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் காலகட்டத்தில் அவர் உரையாற்றி உள்ளார். குடியரசுத் தலைவரின் உரை, நம்பிக்கை உணர்வு மற்றும் எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான செயல் திட்டத்தை அளித்துள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார்.

     தற்போது நாட்டு மக்கள் எதற்காகவும் காத்திருக்க தயாராக இல்லை என்று பிரதமர் தெரிவித்தார்.  வேகம் மற்றும் அளவுகோல், தீர்மானம் மற்றும் உறுதியான முடிவு, உணர்திறன் மற்றும் தீர்வையே அவர்கள் விரும்புகின்றனர். எங்களது அரசு விரைவாக செயல்பட்டதால், 5 ஆண்டுகளில் 37 மில்லியன் மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருப்பதுடன், 11 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் நவீன கழிவறை வசதியையும், 13 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் சமையல் எரிவாயு இணைப்புகளையும் பெற்றுள்ளனர். தற்போது 2 கோடி மக்களின் சொந்த வீடு கனவு நனவாகி உள்ளது. தில்லியில் 1700-க்கு மேற்பட்ட சட்டவிரோத காலனிகளில் வசிக்கும் 40 லட்சம் மக்களின் சொந்த வீடு கனவும் நிறைவேறி உள்ளது.

வேளாண் துறைக்கான ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரிப்பு

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே தங்களது முன்னுரிமையாக இருக்கும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார். கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி நிர்ணயத்தல், பயிர்க் காப்பீடு மற்றும் பாசன வசதி தொடர்பான திட்டங்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தன. நாங்கள் தான் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றரை மடங்கு உயர்த்தியதுடன். தடைபட்டு கிடந்த பாசன திட்டங்களை நிறைவேற்றி முடிக்க 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளோம்.

“பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் ஐந்தரை கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இணைந்துள்ளனர்; காப்பீட்டு பிரீமியம் தொகையாக 13.5 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது, 56 ஆயிரம் கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வேளாண் துறைக்கான ஒதுக்கீடு தங்களது ஆட்சியில் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார். “பிரதமரின் விவசாயிகளுக்கான ஆதரவு நிதி திட்டம் ஏராளமான விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதன் காரணமாக ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் இடைத் தரகர்களோ அல்லது கூடுதல் பணிச்சுமையோ கிடையாது” என்றும் அவர் கூறினார்.

அதிக முதலீடு, மேம்பட்ட கட்டமைப்பு வசதி மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்

நிதிப் பற்றாக்குறையை தமது அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். “விலைவாசி உயர்வும் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, பேரியல் பொருளாதாரமும் நிலையாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் திரு.மோடி விவரித்தார்.

“தொழில் துறை, நீர்ப்பாசனம், சமூக கட்டமைப்பு, கிராமப்புற கட்டமைப்பு, துறைமுகங்கள் மற்றும் நீர்வழி பாதைகளை மேம்படுத்த நாங்கள் ஏராளமான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

“நிமிர்ந்து நில் இந்தியா மற்றும் முத்ரா திட்டங்கள் ஏராளமானோரின் வாழ்க்கையில் வளத்தை ஏற்படுத்தி உள்ளது. முத்ரா திட்டப் பயனாளிகளில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். முத்ரா திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 22 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடனுதவி காரணமாக கோடிக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்”.

“தொழிலாளர் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன் தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசித்தே இவை மேற்கொள்ளப்படுகிறது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

“நம்மைப் பொறுத்தவரை கட்டமைப்பு வசதி என்பது, எதிர்பார்ப்புகள் மற்றும் சாதனைகளின் பிணைப்பாக திகழ்வதோடு, மக்களின் கனவுகளோடு சேர்ப்பதாகவும், மக்களின் படைப்பாற்றலை நுகர்வோரிடம் சென்றடைவதாகவும் இருக்க வேண்டும். கட்டமைப்பு வசதி என்பது ஒரு குழந்தையை அவளது பள்ளியோடு இணைப்பதாகவும், ஒரு விவசாயியை சந்தையுடன் இணைப்பதாகவும், வியாபாரிகளை நுகர்வோருடன் இணைப்பதாகவும் இருக்க வேண்டும். இது மக்களுடன் மக்களை இணைப்பதாகும்” என்று பிரதமர் தெரிவித்தார்.

இது பற்றி விரிவாக பேசிய பிரதமர், அடுத்த தலைமுறை கட்டமைப்பு வசதிகள்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

“முற்காலத்தில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினால் அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே “பொருளாதார வாய்ப்புகளை” அளித்தது. வேறு யாருக்கும் பயனளிக்கவில்லை. நாங்கள் இந்த துறையை வெளிப்படையானதாக ஆக்கியிருப்பதோடு, இணைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பணியாற்றி வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

வருங்காலத்தில் நாங்கள், கட்டமைப்புத் துறையில் ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ய இருக்கிறோம், இது வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்யும்” என்றும் அவர் தெரிவித்தார்.

 

@PMOIndia

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் குறித்து குடியரசுத் தலைவர் பேசியுள்ளார்

கூடுதல் குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த நீண்டகால கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்.

பயிர்க் காப்பீடு மற்றும் பாசனத் திட்டங்களுக்கும் இது பொருந்தும்: பிரதமர் @narendramodi

 

@PMOIndia

நிதிப் பற்றாக்குறையை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம்

விலைவாசி உயர்வும் கட்டுப்பாட்டில் இருப்பதோடு, பேரியல் பொருளாதாரமும் நிலையாக உள்ளது: பிரதமர் @narendramodi

 

@PMOIndia

எங்களது தொலைநோக்குப் பார்வை:

அதிக முதலீடு

மேம்பட்ட கட்டமைப்பு வசதி

அதிகரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டுதல்

அதிக வேலைவாய்ப்பு உருவாக்குதல்: பிரதமர் @narendramodi

 

@PMOIndia

அடுத்த தலைமுறை கட்டமைப்பு வசதி போன்றவைதான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்

முற்காலங்களில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதி குறிப்பிட்ட சிலரின் “பொருளாதார வாய்ப்புகளை” மட்டுமே மேம்படுத்தியது. வேறு யாருக்கும் பயனளிக்கவில்லை.

நாங்கள் இந்த துறையை வெளிப்படையானதாக ஆக்கியிருப்பதோடு இணைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பாடுபட்டு வருகிறோம்: பிரதமர் @narendramodi

 

@PMOIndia

தொழிலாளர் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதுவும் தொழிற்சங்கங்களை கலந்தாலோசித்த பிறகே மேற்கொள்ளப்படும்: பிரதமர் @narendramodi

*******

 


(Release ID: 1602319) Visitor Counter : 276