மத்திய அமைச்சரவை

ஸ்பெயின் நாட்டில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இந்தியாவின் அணுகுமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

Posted On: 27 NOV 2019 11:47AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2019 டிசம்பர் 2-லிருந்து 13 வரை ஸ்பெயின் நாட்டின் மாட்ரிடில் (சிலி தலைமையின் கீழ்) நடைபெறவுள்ள அனைத்துத் தரப்பினருக்கான 25-வது மாநாட்டிற்கு முந்தைய பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவின் அணுகுமுறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தியத் தூதுக்குழுவினர் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் பங்கேற்பார்கள். பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் 2020-க்கு முந்தைய நிலையிலிருந்து கியோடோ ஒப்பந்தப்படி 2020-க்குப் பிந்தைய காலத்திற்குச் செல்ல நாடுகள் தயாராகி வருவதால், அனைத்துத் தரப்பினருக்கான 25-வது மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. பாரீஸ் ஒப்பந்தம், பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கட்டமைப்பு மாநாடு ஆகியவற்றின் கோட்பாடுகள் மற்றும் சிறப்பு அம்சங்களால்- குறிப்பாக சமத்துவம், பொதுத்தன்மை கோட்பாடுகளால்- வழிகாட்டப்படுவதாக இந்தியாவின் அணுகுமுறை இருக்கும். ஆனால் மாறுபட்ட பொறுப்புகளையும், உரிய தனித்தன்மைகளையும் இது கொண்டிருக்கும்.

பருவநிலை மாற்றம் குறித்த இந்தியாவின் கருத்து உலகம் முழுவதும் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள மத்திய அரசு பருவநிலை மாற்றம் தொடர்பாக ஏராளமான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த முன்முயற்சிகள் பருவநிலை சம்பந்தமான நடவடிக்கையில் இந்தியாவின் உறுதியையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்மையில் அழைத்திருந்த பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர், புதுப்பிக்கவல்ல எரிசக்தி இலக்கினை 450 ஜிகாவாட் அளவிற்கு உயர்த்தும் இந்தியாவின் திட்டம் பற்றி எடுத்துரைத்தார். சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டமைப்பின் மூலம் சூரிய மின்சக்தி திறனை விரிவுபடுத்துவதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

தமது செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டுள்ள இந்தியா, பருவநிலை மாற்றத்திற்கான நிதி ஆதாரங்களுக்கு 2020-க்குள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் திரட்டுவது திட்டமிட்டுள்ளது. இதில் வளர்ந்த நாடுகள் முன்னிலைப் பங்கு வகிக்க வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தி உள்ளது. 2020-க்கு முந்தைய உறுதிமொழிகளை வளர்ந்த நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும், இதனை 2020-க்கு பின்னர் எனக் கூறி அமலாக்கத்தில் இடைவெளிகளை ஏற்படுத்துவது வளரும் நாடுகளுக்குக் கூடுதல் சுமையை அளித்து விடக் கூடாது என்று இந்தியா மேலும் வலியுறுத்துகிறது.

ஒட்டு மொத்தமாக இந்தப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்றும் அதன் நீண்டகால மேம்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது.

 

***


(Release ID: 1593724) Visitor Counter : 236