பிரதமர் அலுவலகம்

ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்முயற்சி அமைப்பின் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய சிறப்புரை

Posted On: 29 OCT 2019 11:05PM by PIB Chennai

மாட்சிமைதங்கிய மன்னர் அவர்களே, முக்கியப் பிரமுகர்களே, தாய்மார்களே, நண்பர்களே, நமஸ்காரம், மாலை வணக்கம்!

 

     இந்த மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்ததற்காக, மாட்சிமைதங்கிய மன்னருக்கும், இரண்டு புனித மசூதிகளின் காப்பாளரும், எனது அருமை சகோதரருமான பட்டத்து இளவரசருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.  சவுதி அரேபியாவும், இங்குள்ள புனிதமான மசூதிகளும் உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை மையங்களாகத் திகழ்கின்றன.  இந்த நிலம் உலகப் பொருளாதாரத்திற்கு எரிசக்தி ஆதாரமாக திகழ்கிறது. துடிப்புமிக்க இந்த ரியாத் நகரத்தில் இருக்கும்போது உங்களிடம் ஒரு உத்வேகம் காணப்படுவதை உணர முடிகிறது.

 

நண்பர்களே,

     எதிர்கால முதலீட்டு முன்முயற்சி அமைப்பின் கூட்டத்திற்கான தலைப்புகள், இந்த அமைப்பு, பொருளாதாரம் குறித்து விவாதிப்பதற்கான இடமல்ல என்பதையும், அமைப்பின் நோக்கத்தையும் தெளிவாக எடுத்துரைப்பதாக உள்ளது.  உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை புரிந்து கொள்வதோடு, உலக நலன் பற்றி விவாதிப்பதற்கான அமைப்பாகத் திகழ்கிறது.  இந்தக் காரணத்தால்தான், இந்த ஆற்றல்மிக்க அமைப்பு வர்த்தக உலகின் நாட்காட்டியில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.  மூன்று ஆண்டுகால குறுகிய இடைவெளியிலேயே இந்த அமைப்பு, நெடிய பாதையைக் கடந்துவந்துள்ளது.  இந்த வெற்றிக்கு எனது நண்பரும், சகோதரருமான பட்டத்து இளவரசரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.  அவரது அமைப்பு பாலைவனத்தின் டாவோஸ் என்றழைக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் சவுதி அரேபிய மக்களின் கடின உழைப்பு மற்றும் இயற்கையின் கொடையான பாலைவன மணல் தங்கத்தை விளைவிக்கிறது.  சவுதி அரேபியா ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள் தற்போது சொகுசாக வீற்றிருக்கின்றனர்.   அதேவேளையில், இனி வரக்கூடிய தலைமுறைகளைப் பற்றி சிந்திப்பதோடு, ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலம் குறித்தும் கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனர். இந்த அமைப்பிற்கு எதிர்கால அமைப்பு என்று சாதாரணமாக பெயரை மட்டும் வைத்துவிடாமல், அதன் ஒட்டுமொத்த குறிக்கோளும் தொலைநோக்கு சிந்தனையும், எதிர்காலத்தைப் பற்றியதாகவும் அமைந்ததற்காக பட்டத்து இளவரசரைப் பாராட்டுகிறேன்.  அந்த வகையில் அவரது சகோதரரும், அண்டை நாட்டவர் என்ற முறையிலும், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தின் பிரதிநிதி என்ற முறையில் நான் இதில் பங்கேற்பது இயற்கையானதே.

 

நண்பர்களே,

     இந்திய மக்கள் உங்களுக்குத் தெரிவித்த நல்வாழ்த்துக்களை நான் இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.  சவுதி அரேபியாவுடன் நாங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றிணைந்து பணியாற்றி  வருகிறோம். அதுபோன்ற ஒரு நட்புறவை “சதக்கட்டும்” என்று நீங்கள் கூறினீர்களே,  அதேபோன்று ஒருவருக்கொருவர் நெருங்கிய பிணைப்புடன் இருப்பதாக உணர்கிறோம். வரலாற்று ரீதியான நமது உறவுகளும், தொடர்புகளும், ராணுவ ஒத்துழைப்புக்கு வலுவான அடித்தளமிட்டுள்ளன. பட்டத்து இளவரசருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ராணுவ ஒத்துழைப்புக்கான கவுன்சில் ஒன்றை ஏற்படுத்தியிருப்பதன் மூலம், நம்மிடையேயான நட்புறவை இன்று (அக்டோபர் 29, 2019) நாம் புதிய உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளோம். மாட்சிமைதங்கிய மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரின் வழிகாட்டுதலுடன், எதிர்பாராத பல முன்னேற்றங்களையும், நட்புறவையும் நம்மால் ஏற்படுத்த முடியும். அவரது முயற்சிகள் மற்றும் இந்தியா மீது காட்டும் பாசத்திற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

     எதிர்கால முதலீட்டு முன்முயற்சி அமைப்பில், “உலக வர்த்தகத்திற்காக அடுத்து செய்ய வேண்டியது என்ன” என்பது பற்றி பேசும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது.  இந்தியாவில் அதிகரித்து வரும் வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள், நமது எதிர்பார்ப்புகள் மற்றும் இலக்குகள் குறித்தும் பேசவுள்ளேன்.  அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா தனது பொருளாதாரத்தை இரண்டு மடங்காக அதிகரித்து, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.  அதுபோன்ற ஒரு சூழலில் இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமானதாகவும், அவசியமானதாகவும் அமைந்துள்ளது.

 

நண்பர்களே,

     இன்றைக்கு, இந்தியாவில் வளர்ச்சி வேகத்தை விரைவுபடுத்த விரும்பும் வேளையில், புதிதாக உருவாகும் சூழ்நிலைகளையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். எனவே, உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் 5 முக்கிய அம்சங்களைப் பற்றி நான் உங்களிடம் பேச விரும்புகிறேன்.  முதலாவதாக, தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளின் விளைவு, இரண்டாவது - உலக வளர்ச்சிக்கான கட்டமைப்பின் அவசியம், மூன்றாவது – மனித வளம் மற்றும் வேலையின் எதிர்காலம் தொடர்பான மாற்றங்கள், நான்காவது – சுற்றுச்சூழல் மீதான கருணை, ஐந்தாவது – வர்த்தகத்திற்கு உகந்த ஆளுகையாகும்.

 

நண்பர்களே,

     தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு நாம் அனைவரும் சாட்சி.  செயற்கை நுண்ணறிவு, மரபியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சிக் கட்டத்தைத் தாண்டி, அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன.  இந்தத் தொழில்நுட்ப மாற்றம் சமுதாயத்திற்கு பயனளித்திருப்பதோடு, புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் கலாச்சாரத்தையும் உருவாக்கியிருப்பதுடன், அந்த தொழில்நுட்பங்கள் பற்றிய புதுமை கண்டுபிடிப்புகளை தொடரவும் வழிவகுத்துள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான சவால்கள் அல்லது இளைஞர்களுக்கான ஹேக்கத்தான் அல்லது பள்ளி மாணவர்கள் புதுமை அனுபவங்களை அறிந்து கொள்ளக் கூடிய அடல் ஆய்வகங்கள் என, இந்தியாவில் இந்த கலாச்சாரத்தை வலுப்படுத்த நாம் பல்வேறு வகைகளிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்பம் முதல் தொழில்முனைவோர் வரை என, இந்தியாவில் விரிவான சூழல் முறை தற்போது உருவாகியுள்ளது. நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பலன் தெரியவந்து கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது புதிய தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலைக் கொண்ட உலகிலேயே மூன்றாவது    பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் 2-ஆம் நிலை, 3-ஆம் நிலை நகரங்களிலும் புதிதாகத் தொழில் தொடங்குவது அதிகரித்து வருகிறது.  ஒரு பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புள்ள பிரத்யேக நிறுவனங்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.  நம் நாட்டில் தொடங்கப்படும் பல புதிய தொழில்கள் உலகளாவிய முதலீட்டைக் கொண்டதாக அமைந்துள்ளன.  உணவுப் பொருள் விநியோகம், போக்குவரத்து, விருந்தோம்பல், சுற்றுலா, மருத்துவசிகிச்சை என இந்தியாவில் புதிதாக தொடங்கப்படும் ஒவ்வொரு தொழிலும் உறுதியானவையாக உள்ளன. எனவே, இந்தியாவில் நிலவும் தொழில் முதலீட்டு சூழலைப் பயன்படுத்தி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு உலக முதலீட்டாளர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.  இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புப் பணியில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், அதிகபலனைத் தரும் என நம்புகிறேன்.  இந்தப் பலன் அனைத்தும் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதாக அமையும்.

 

நண்பர்களே,

     உலக வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியமும், படிப்படியாக அதிகரித்து வருகிறது. கட்டமைப்பு வசதிகள், வாய்ப்புகளை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். அடிப்படை வசதிகளை மேற்கொள்வதன் மூலம் தொழில் துறையினர் பெருமளவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வேளையில், தொழில் வளர்ச்சிக்கும் அவசியமானதாகிறது.

 

நண்பர்களே,

     உலகில் கட்டமைப்பு ரீதியான அடிப்படை வசதிகளுக்கான வாய்ப்புகள், வளரும் நாடுகளில் தற்போது பெருமளவிற்கு உள்ளன. ஆசியாவைப் பொறுத்தவரை, கட்டமைப்புப் பணிகளுக்காக ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.  இந்தியாவில் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில், கட்டமைப்புத் துறையில் 1.5 டிரில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.  அதன் பிறகு, கட்டமைப்பு வசதிகளை அங்கொன்றும், இங்கொன்றுமாக ஏற்படுத்துவது பற்றி சிந்திக்காமல், ஒருங்கிணைந்த அணுகுமுறையை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டுள்ளோம். ஒருதேசம்- ஒரே மின்தொகுப்பு, ஒருதேசம் – ஒரே எரிவாயு தொகுப்பு மற்றும் ஒரே தண்ணீர் தொகுப்பு, ஒருதேசம் – ஒரே பயண அட்டை, ஒருதேசம்-ஒரே கண்ணாடியிழை தொடரமைப்பு போன்ற முயற்சிகளை மேற்கொண்டிருப்பதோடு, இந்தியாவில் கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.  ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு, மின்சார வசதி மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இதுவரை இல்லாத அளவிற்கு வேகம் ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.  எனவே, இந்தியாவில் கட்டமைப்புத் துறை வளர்ச்சி என்பது தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருப்பதுடன், திறன் நிறைவடைவதற்கான வாய்ப்பே இல்லை. இதன் விளைவாக முதலீட்டாளர்களுக்கான பலனும் உறுதி செய்யப்படுகிறது.

    

நண்பர்களே,

     2022 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதுவரை புதிய இந்தியாவைப் படைப்பதற்கான இலக்குகளை நமக்குநாமே நிர்ணயித்து வருகிறோம். அந்த புதிய இந்தியாவில், ஒவ்வொரு இந்தியரும் புதிய கனவு, இதயத்தில் புதிய வலிமை மற்றும் நடவடிக்கைகளில் புதிய உத்வேகத்தை பெற்றவர்களாக இருப்பார்கள்.  அந்த புதிய இந்தியாவில், புதிய வாய்ப்புகள் நிறைந்திருக்கும்.   

*****

 



(Release ID: 1592481) Visitor Counter : 162