பிரதமர் அலுவலகம்

உலகளாவிய நலவாழ்வுக்கான ஐக்கிய நாடுகள் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் அம்சங்கள்

प्रविष्टि तिथि: 23 SEP 2019 11:51PM by PIB Chennai

நமஸ்தே!

அதிபர் அவர்களே,

உலகத்தின் நலனானது பொதுமக்களின் நலனில் துவங்குகிறது. இதற்கு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். ஆகையால்தான், இந்தியாவுக்கு இது உயர்ந்த முன்னுரிமை கொண்ட விஷயமாக இருக்கிறது.

     இதற்காக நான்கு தூண்கள் என்ற ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். முதல் தூண் என்பது தடுப்பு மருத்துவம். யோகா, ஆயுர்வேதம் மற்றும் உடல் உறுதிக்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 1.25 லட்சத்திற்கும் அதிகமான நலவாழ்வு மையங்களை நாங்கள் கட்டமைத்துள்ளோம்.

     நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு போன்ற வாழ்க்கை முறை தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.

     இ – சிகரெட்டுக்கான மவுசு கூடி வருவது கவலையை ஏற்படுத்துகிறது. இந்த அபாயத்திலிருந்து இளம்தலைமுறையை காப்பதற்காக இந்தியா இ – சிகரெட்டை தடை செய்துள்ளது.

     எமது தூய்மை இந்தியா இயக்கம் லட்சக்கணக்கானவர்களின் வாழ்வை காக்க உதவியுள்ளது.

     தடுப்பு மருந்துகளுக்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். புதிய தடுப்பூசிகளை பயன்படுத்தி வருவதோடு, தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களிடம் அவற்றை சென்றடையச் செய்வதிலும் நாங்கள் மேம்பட்டுள்ளோம்.

     குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதி என்பது இரண்டாவது தூணாகும். உலகத்தின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான்பாரத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதன் கீழ், 50 கோடி மக்களுக்கு மருத்துவ உதவி அளித்துள்ளோம். இதில் இலவச சிகிச்சையிலிருந்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் செலவழிப்பது வரை அடங்கும். கடந்த ஓராண்டில் மட்டும் இத்திட்டத்தினால் 45 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.

     5,000-க்கும் அதிகமான சிறப்பு மருந்தகங்களை நாங்கள் துவக்கியுள்ளோம். இவைகளில் 800-க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

     இதயத்திற்கான ஸ்டண்ட்டின் விலையை 80 விழுக்காடு குறைத்துள்ளோம். மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவை 50 முதல் 70 விழுக்காடு குறைத்துள்ளோம்.

     சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்கள், இந்தியாவில் இலவச டயாலிசிஸ் வசதியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

     வினியோக முறையை மேம்படுத்தியுள்ளது மூன்றாவது தூணாகும். இதற்காக, இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் பலவற்றை நாங்கள் எடுத்துள்ளோம். இத்துறையில் அடிப்படை சீர்திருத்தங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளோம்.

     இலக்கு சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வது நான்காவது தூணாகும். தாய்மார்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருந்தால், அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். ஆகையால், தேசிய ஊட்டச்சத்து இயக்கம் போன்ற இலக்கு சார்ந்த முன்முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

     நிலைத்த வளர்ச்சி இலக்குகள் என்பது 2030 ஆம் ஆண்டில் காசநோயை ஒழிக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது. இந்தியாவிலோ 2025 ஆம் ஆண்டிலேயே இந்நோயை ஒழிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த இலக்கையும் அடைவோம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

     காற்று மாசினால் ஏற்படும் நோய்களுக்கும், விலங்குகளால் மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கும் எதிராக இயக்கம் ஒன்றை நாங்கள் துவக்கி உள்ளோம்.

சான்றோர்களே,

     ஆரோக்கியம் என்பது வெறுமனே நோயிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் உரிமையாகும். இதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பது எமது அரசின் பொறுப்பாகும்.

     இந்தியாவின் முயற்சிகள் எல்லாம் இந்திய எல்லைக்குள் மட்டும் சுருங்கி விடுவதற்கல்ல. பல நாடுகளுக்கு, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு, குறைவான செலவில் தொலைதூர-மருத்துவம் வாயிலாக மருத்துவ வசதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

     எமது அனுபவத்தையும், திறன்களையும் அனைத்து வளரும் நாடுகளுக்கும் கிடைக்கச் செய்வோம்.

சான்றோர்களே,

     அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும், நோயில்லாத வாழ்வு அமையட்டும் என்ற வாழ்த்துகளுடன் நான் எனது உரையை முடிக்கிறேன்.

மிக்க நன்றி

***


(रिलीज़ आईडी: 1586449) आगंतुक पटल : 331
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu