பிரதமர் அலுவலகம்
தூய்மை இந்தியா இயக்கத்திற்கென “உலக கோல்கீப்பர் விருதை” பிரதமர் பெற்றுக் கொண்டார்
Posted On:
25 SEP 2019 7:15AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, தூய்மை இந்தியா இயக்கத்திற்கென பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் “உலக கோல்கீப்பர்” விருதை நேற்று (24.09.2019) பெற்றுக் கொண்டார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் போது இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, அதனை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண்ட இந்திய மக்களுக்கு பிரதமர் இந்த விருதினை அர்ப்பணித்தார்.
“தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றி இந்திய மக்களால்தான் சாத்தியமானது. மக்கள் இதனை தங்கள் சொந்த இயக்கமாக மாற்றி ஆக்கப்பூர்வமான பலன்களை உறுதியாகப் பெற உதவினார்கள்” என்று விருதை பெற்றுக் கொண்ட பின் பிரதமர் கூறினார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டுவிழாவின் போது இந்த விருதைப் பெறுவது தமக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான தருணம் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் 130 கோடி மக்களும் உறுதி ஏற்றால் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு தூய்மை இந்தியா இயக்கம் அத்தாட்சி என்று கூறினார். மகாத்மா காந்தியடிகளின் தூய்மையான இந்தியா என்ற கனவை நனவாக்கும் வகையில் இந்தியா மகத்தான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது என்று அவர் கூறினார்.
“கடந்த 5 ஆண்டுகளில் சாதனை அளவாக 11 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த இயக்கம் நாட்டின் ஏழை மக்களுக்கும், பெண்களுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த 11 கோடி கழிவறைகள், சுகாதாரத்தையும், உடல் நலத்தையும் மேம்படுத்தியதோடு, கிராமப்பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் உதவின என்று பிரதமர் கூறினார்.
உலக சுகாதாரத் திட்ட மேம்பாடுகள் குறித்து பேசிய பிரதமர், இதர நாடுகளுடன் தனது அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார். இதனைடுத்து சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்துவதில் கூட்டு முயற்சி உருவாகும் என்றார்.
உடல் தகுதிக்கான இந்திய இயக்கம், நீர் வள இயக்கம் ஆகியவற்றை மக்கள் இயக்கமாக மாற்றுவதில் இந்தியாவின் முயற்சிகள் உடல் நலனுக்கான நடவடிக்கைகளாக உருவெடுத்து வருகின்றன என்று பிரதமர் கூறினார்.
****
(Release ID: 1586160)
Visitor Counter : 235