மத்திய அமைச்சரவை

ஐடிபிஐ வங்கியில் அரசு முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 03 SEP 2019 3:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில் ரூ.4,557 கோடியை முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

இது ஐடிபிஐ வங்கியின் சீரமைப்பு நடைமுறைகளை நிறைவு செய்ய உதவுவதுடன் லாபகரமான மற்றும் இயல்பான கடன் முறைக்கு வங்கி திரும்பவும் உதவும். வாய்ப்பான காலத்தில் அரசு தனது முதலீட்டை திரும்பப் பெறவும் இயலும்.

 

ஐடிபிஐ வங்கி தனது கணக்குகளை நேர் செய்யும் பணிகளை முடிக்க அதற்கு ஒரே தவணையிலான முதலீடு தேவைப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18.8 சதவீதமாக உச்சத்தில் இருந்த வாராக் கடன் 2019 ஜூன் மாதத்தில் 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டு ஏற்கனவே கணிசமான அளவுக்கு சீர் செய்யப்பட்டுள்ளது.  இதற்கான மூலதனம் அதன் பங்குதாரர்களிடமிருந்து வரவேண்டும்.  51 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள எல் ஐ சி அதற்கு மேல் முதலீடு செய்ய காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பு அனுமதிக்காது. தேவைப்படும் ரூ.9,300 கோடியில் எல்ஐசி 51 சதவீதத்தை வழங்கும். (ரூ.4,243 கோடி) எஞ்சிய 49 சதவீதம் அளவுக்கான ரூ.4,557 கோடிக்கு அரசு ஒரே தவணை முறையில் அதன் பங்கை வழங்கத் தீர்மானித்துள்ளது. 

 

இந்த முதலீட்டுக்கு பின்னர் ஐடிபிஐ வங்கி தனது முயற்சியால் மேலும் முதலீட்டை அதிகரித்துக் கொள்ள இயலும் என எதிர்பார்க்கிறது. இதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியின் உடனடி சீரமைப்பு நடவடிக்கைக்கான வரம்புக்குள் வங்கி அடுத்த ஆண்டு வாக்கில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீடு மறுமுதலீட்டு பத்திரங்கள் மூலமாக வழங்கப்படும். அதாவது அரசு முதலீட்டுக்கான தொகையை வங்கிக்குச் செலுத்தும், வங்கி அதே நாளில் அரசிடமிருந்து மறுமுதலீட்டுப் பத்திரத்தை வாங்கும். இதனால் செலாவணி நிலையிலோ அல்லது நடப்பாண்டுக்கான பட்ஜெட்டிலோ எந்தத் தாக்கமும் ஏற்படாது.


 



(Release ID: 1583983) Visitor Counter : 161