மத்திய அமைச்சரவை

முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு மத்திய அமைச்சரவை இரங்கல்

प्रविष्टि तिथि: 13 AUG 2019 1:49PM by PIB Chennai

முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கஸ்ட் 6, 2019 அன்று இரவு காலமானதையொட்டி மத்திய அமைச்சரவை இன்று இரங்கல் தெரிவித்துள்ளது.  அவரது மறைவினால், நமது நாடு தனிச்சிறப்பு மிக்க தலைவரையும், சிறந்த நாடாளுமன்றவாதியையும் இழந்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானம்:-

பிப்ரவரி 14, 1952 அன்று ஹரியான மாநிலம் அம்பாலாவில் பிறந்த திருமதி. சுஷ்மா சுவராஜ் அம்பாலா கண்டோன்மெண்டில் உள்ள சனாதன் தர்மா கல்லூரியில் பட்டம் பெற்றார். பிறகு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அவர் சட்டப்படிப்பு பயின்றார். கான்பூர் வேளாண் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது. 1973 ஆம் ஆண்டு அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.

திருமதி. சுஷ்மா சுவராஜ் பொது வாழ்க்கையில் மிக இளம் வயதிலேயே இணைந்தார். 1977 ஆம் ஆண்டு தனது 25 வயதில் அவர் ஹரியானா சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஹரியானா மாநிலத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். ஹரியானா சட்ட மன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று 1987-1990 காலகட்டத்தில் அம்மாநிலத்தின் கல்வி, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

1990 ஆம் ஆண்டு அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு 11-வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக பதவி வகித்தார். 1998 ஆம் ஆண்டு அவர் மீண்டும் 12 வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக பொறுப்பேற்ற போது அவருக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் புது தில்லியின் முதல் பெண் முதல்வராகப் பொறுப்பேற்றார். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2003 ஆம் ஆண்டு ஜனவரி வரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக பொறுப்புவகித்த அவர், 2003 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2004 ஆம் ஆண்டு மே மாதம் வரை மத்திய சுகாதாரம், குடும்பலம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தார்.  2006 ஆம் ஆண்டு அவர் மீண்டும் மாநிலங்கவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு 15வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2009 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2014 ஆம் ஆண்டு மே மாதம் வரை எதிர்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார்.  2014 ஆம் ஆண்டு அவர் 16 மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மே மாதம் வரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

திருமதி. சுஷ்மா சுவராஜ், அவரது தலை சிறந்த சொற்பொழிவாற்றல் மற்றும் இரக்க குணத்தினால் அனைவரின் மனத்திலும் என்றும் இடம்பெற்றிருப்பார். அவர் ஒரு திறமையான நிர்வாகியாகவும் மனிதாபிமானம் மிக்கவராகவும் இருந்தார். வெளிநாடுகளில்,  பிரச்சனைகளில் சிக்கியிருந்த இந்தியர்களுக்கு உதவி செய்ததன் மூலம் அவர் அனைவரின் உள்ளத்தையும் வென்றார். இந்த நற்பண்புகளினால், 2017 ஆம் ஆண்டு அமெரிக்க நாளிதழான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இவரை “இந்திய மக்களால் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி என்று அறிவித்தது.

இந்த நாட்டுக்காக திருமதி. சுஷ்மா சுவராஜ் பல்வேறு பொறுப்புகளில் ஆற்றிய சேவையை இந்த அமைச்சரவை பாராட்டுகிறது என்பதை பதிவு செய்கிறது. அவரது குடும்பத்திற்கு அரசு சார்பிலும் ஒட்டுமொத்த நாட்டின் சார்பிலும் இந்த அமைச்சரவை இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது”.

*****


(रिलीज़ आईडी: 1581850) आगंतुक पटल : 295
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam