பிரதமர் அலுவலகம்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து மக்களவையில் 2019 ஜூன் 25 ஆம் தேதி பிரதமர் அளித்த பதிலுரை
Posted On:
25 JUN 2019 11:55PM by PIB Chennai
மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,
17வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசுவதற்கு நான் இங்கே விளைகிறேன்.
இந்தியாவின் சாமானிய மக்களின் உயர் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கும் மற்றும் வலியுறுத்தும் விஷயங்கள் பற்றிய நோக்கங்களைத் தெரிவிக்க, தனது உரையில் குடியரசுத் தலைவர் முயன்றிருக்கிறார். நாட்டு மக்கள் எங்களை இந்த அவைக்கு அனுப்பி வைத்த நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுடன் ஒத்திசைவு கொண்டதாக குடியரசுத் தலைவரின் உரை அமைந்திருந்தது. எனவே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரை என்பது, கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக இருக்கும்.
வலிமையான, பாதுகாப்பான, வளமையான மற்றும் மக்கள் பங்கேற்புடன் கூடிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்று நமது நாட்டின் பெரிய தலைவர்கள் பலரும் கனவு கண்டனர். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு, நாம் ஒன்றுபட்டு உறுதியான முறையில், அதிக தீவிரமாகவும், வேகமாகவும் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது. இதுதான் இப்போதைய தேவையாக உள்ளது. இன்றைய உலகச் சூழலில் இந்த வாய்ப்பை இந்தியா நழுவ விட்டுவிடக் கூடாது.
அதே உத்வேகத்துடன் நாம் ஒன்றாக முன்னேறிச் செல்ல வேண்டும். நாட்டு மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில் எல்லா தடைகளையும் நம்மால் தாண்டிவிட முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த விவாதத்தில் நாடாளுமன்றத்தில் 60 மாண்புமிகு உறுப்பினர்கள் உரையாற்றியுள்ளனர். முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை மிக நன்றாக முன்வைக்க முயற்சி செய்து விவாதத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கினர். அனுபவமிக்க உறுப்பினர்களும், தங்களுக்கே உரிய பாணியில் விவாதத்தை முன்னெடுத்து வைத்தனர்.
திரு. ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, திரு. டி.ஆர். பாலு, திரு. தயாநிதி மாறன், திரு. சவ்கத்ராய் ஜெய்தேவ்ஜி, திருமிகு. மகுவா மொய்த்ரா, பி.வி. மிதுன் ரெட்டி, வினயக் ராவுத், ராஜீவ் ரஞ்சன் சிங், பினாகி மிஸ்ரா, ஸ்ரீநமநாகேஸ்வர ராவ், முகமது ஆசாம் கான், அசாதுதின் ஓவைசி, ஸ்ரீ பிரதாப் சந்திர சாரங்கி, டாக்டர் ஹினகாவித் உள்பட விவாதத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் அனைவருமே மனிதர்கள் என்பதும், கடந்த 30 நாட்களின் தாக்கம் இன்னும் நீடிக்கிறது என்பதும் உண்மை. அதில் இருந்து விடுபடுவது கடினமானது. எனவே, தேர்தல் உரைகளின் சிறிதளவு தாக்கமும் இங்கே காணப்பட்டது. அதேபோன்ற உரைகள் இடம் பெற்றன. இதுதான் இயற்கையின் நியதி. நீங்கள் மரியாதைக்குரிய இந்தப் பொறுப்பில் இருந்து அவையை நடத்தி உள்ளீர்கள். அனைவரையும் கருத்தில் கொண்டு அவையை முன்னெடுத்துச் சென்றீர்கள். இந்தப் பொறுப்புக்கு நீங்கள் புதியவர். புதிய உறுப்பினர்கள் இருந்தால், தொடக்கத்திலேயே அவர்களுக்குப் பிரச்சினைகளைத் தர சிலர் விரும்புவார்கள்.
இருந்தபோதிலும், இதுபோன்ற சூழ்நிலைகள் இருந்தாலும், நீங்கள் அனைத்தையும் பாராட்டுக்குரிய வழியில் செய்தீர்கள். அனைத்து நடவடிக்கைகளுக்கும் உங்களுக்கு நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். புதிய மக்களவைத் தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தமைக்காக உறுப்பினர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,
பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்த தேசம் வலுவான தேர்தல் முடிவைத் தந்திருக்கிறது. அதே அரசுக்கு அதிக பலத்துடன் அதிகாரத்தை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போது இந்த எளிமையான சூழலில், இந்தியா போன்ற துடிப்பான ஜனநாயக நாட்டில், வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பது குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படலாம். வாக்காளர்கள் தங்களைவிடவும் தேசத்தை மிகவும் நேசிக்கிறார்கள், நாட்டுக்காக முடிவு எடுக்கிறார்கள். இந்தத் தேர்தல் மூலம் இதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. எனவே நாட்டின் வாக்காளர்களுக்கு பல பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2014 ஆம் ஆண்டில் நானும் எனது அணியினர் அனைவரும் முற்றிலும் புதியவர்களாகவும், பழக்கமற்றவர்களாகவும் இருந்தபோதிலும், சூழ்நிலைகளில் இருந்து மீள்வதற்கு ஒரு வாய்ப்பாக இந்தத் தேசம் பரீட்சார்த்தமாக எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தது. ஆனால் 2019 தேர்தல் முடிவுகள், எல்லா வகையிலும் எங்களைப் பற்றி ஆய்வு செய்த பிறகு தரப்பட்டதாகும். அவர்கள் எங்களை பரீட்சித்துப் பார்த்து, எங்களைப் புரிந்து கொண்டு, அந்த அடிப்படையில் மீண்டும் எங்களுக்கு அதிகாரத்தை அளிக்க வாக்களித்துள்ளனர். இதுதான் ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமாகும். வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் அல்லது களத்திற்கு உள்ளே அல்லது வெளியே இருந்த அனைவரும் 'सर्वजनहिताय, सर्वजनसुखाय' (`மக்களின் நன்மைக்காக, அனைவரின் மகிழ்ச்சிக்காக' - என்று அர்த்தம்) என்ற கொள்கைகளை அமல்படுத்துவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் நன்மைக்காக வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டனர். அதற்கு மக்கள் மீண்டும் ஒரு முறை அங்கீகாரம் அளித்து, நாட்டுக்கு சேவை செய்ய அதிகாரத்தைத் தர தேர்வு செய்துள்ளனர்.
மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,
ஒருவருடைய பணியை கடவுளின் வடிவமாக இருக்கும் மக்கள் அங்கீகரிப்பதைப் போன்ற உண்மையைக் காட்டிலும் திருப்தி தரும் வேறு விஷயம் இருக்க முடியாது. வெறுமனே வெற்றி பெறுவது அல்லது தோல்வி அடைவது அல்லது புள்ளி விவரங்கள் பற்றிய விஷயமாக மட்டும் இது இல்லை. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, முழு ஈடுபாடு ஆகியவை பற்றியதாகும். மக்களுக்காக வாழ்வது மற்றும் போராடுவதாகும். ஐந்து ஆண்டுகளாக இடைவிடாமல் உறுதியுடன், அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது ஆன்மிக அனுபவத்துக்கு ஈடானது. எனவே, வெற்றி பெறுவது அல்லது தோல்வி அடைவது பற்றி நான் நினைக்கவில்லை. அதையும் தாண்டி என் சிந்தனை செல்கிறது. 130 கோடி மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் கனவுகள் எப்போதும் என் மனதில் இருக்கும்.
மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,
2014 ஆம் ஆண்டில் மைய மண்டபத்தில் முதல் முறையாக எனது எண்ணங்களை முன்வைக்க என் நாட்டு மக்கள் எனக்கு வாய்ப்பு அளித்தபோது, எனது அரசு ஏழை மக்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டதாக மட்டும் தெரிவித்தேன். அந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை, ஆழ்ந்த மன நிறைவுடன் என்னால் சொல்ல முடியும். விவாதத்தின் தொடக்கத்தில் முதலாவது முறை எம்.பி.யான பிரதாப் திரு.சாரங்கி ஜி மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த எனது சகோதரி டாக்டர் ஹினா காவிட் ஜி ஆகியோர் பிரச்சினைகளின் நுணுக்கங்கள் அனைத்தையும் முன்வைத்தனர். அதன்பிறகு மேற்கொண்டு சொல்வதற்கு எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன்.
மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,
நமது நாட்டில் பொது வாழ்வில் நமக்கு வழிகாட்டியாக இருந்த அனைத்து பெரிய தலைவர்களும் ஒரு விஷயம் பற்றி - பரம ஏழைகள் மற்றும் அவர்களுடைய நலன்கள் பற்றி - எப்போதும் பேசியுள்ளனர். பூஜ்ய பாபு, பாபா சாகேப் அம்பேத்கர் ஜி, லோகியா ஜி அல்லது தீன்தயாள் உபாத்யாய ஜி போன்ற அனைவரும் ஒரே விஷயத்தை தான் கூறியுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், அதே உத்வேகத்துடன் நாங்கள் எப்போதும் செயல்பட்டோம்.
சுதந்திரத்துக்குப் பிறகு, நாம் ஒரு கலாச்சாரத்தை கவனக் குறைவாக ஏற்றுக் கொண்டு, அதை பரப்பிவிட்டோம். அதன்படி சாமானிய மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு ஏராளமான தடைகள் மற்றும் சவால்களைக் கடந்தாக வேண்டியுள்ளது. நான் யார் மீதும் குற்றஞ்சாட்டவில்லை. சாமானிய மக்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் அவருடைய உரிமைகளை கிடைக்கச் செய்ய வேண்டாமா? ஆட்சி முறை அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் அனுமானித்துக் கொண்டோம்.
இந்த விஷயங்களை மாற்றுவதற்கு நீண்ட காலம் ஆகும் என்று எனக்குத் தெரியும். அரசுகளை நமது வழியில் செயல்பட வைப்பது கடினமானது. 70 ஆண்டு கால நோய்களை ஐந்து ஆண்டுகளில் குணமாக்குவது கஷ்டம். ஆனால் இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், எங்களுடைய கடமையில் இருந்து நாங்கள் விலகிவிடவில்லை அல்லது அதை விட்டுக் கொடுக்கவும் இல்லை என்பதையும், அதே வழியில் தொடர்ந்து சென்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எது உண்மை, எது பொய் என்பதை இந்தத் தேசம் நமக்குக் கூறுகிறது. கழிப்பறை என்பது வெறும் கான்கிரீட் அமைப்பு என்றோ, எரிவாயு என்பது உணவு சமைப்பதற்கானது மட்டும் என்றோ இல்லை என்பதை தேசம் உணர்ந்து கொண்டது. அரசு ஏன் இந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தது என்பதன் நோக்கத்தை தேசம் புரிந்து கொண்டுள்ளது. நான் ஒருபோதும் எரிவாயு கேட்டதில்லை; என் வாழ்நாள் முழுக்க மின்சாரம் இல்லாமல் இருந்தேன்; பிறகு ஏன் அவர்கள் இதைச் செய்கிறார்கள்? முந்தைய காலத்தில் - `அவர்கள் ஏன் இதைச் செய்யவில்லை' - என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இப்போது அவர்களுக்கு நம்பிக்கை வளர்ந்துவிட்டது. எனவே அவர்கள் ``அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்'' என்று கேட்கிறார்கள். `அவர்கள் ஏன் இதைச் செய்யவில்லை' என்பதில் இருந்து ``அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்'' என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதற்கான பயணம் நெடியது. ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. இப்போது நாட்டுக்குள்ளேயே புதிய திறன்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அதே உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் முயற்சி செய்கிறோம்.
மக்கள் நலனில் அக்கறை உள்ள ஓர் அரசு வறுமையைக் கையாளும்போது, பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் மக்கள் வாழ்வு எளிதாக்கப்பட வேண்டும். ஆனால் அதே சமயத்தில் தேசமும் முன்னேற வேண்டும். ஏழை மக்கள் கைதூக்கிவிடப்பட்டு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதேசமயத்தில் நவீன இந்தியாவும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். எனவே, வளர்ச்சி என்ற நீரோட்டம், ஒருபுறம் சாமானிய மக்களின் நலன்களில் கவனம் செலுத்தியும், மறுபுறம் நவீன கட்டமைப்புத் திட்டங்களை அமல் செய்யும் வகையிலும் தொடர்ந்து செல்ல வேண்டும்.
நாங்கள் இரண்டு அம்சங்களிலும் கவனம் செலுத்தினோம். நெடுஞ்சாலைகள், ஐ- சாலைகள், நீர்வழித் தடங்கள், ரயில் பாதைகள், சாலைகள், உடான் திட்டம் மூலம் விமானப் போக்குவரத்து வசதிகள், ஸ்டாட் அப் திட்டங்கள், புதிய சிந்தனை திட்டங்கள், ஆய்வக அடிப்படையிலான சோதனைத் திட்டங்கள் மூலமும் சந்திரயான் மூலமும், நவீன இந்தியாவை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. அனைத்து சவால்களையும் சமாளித்து நாம் போராட வேண்டியுள்ளது.
இங்கு பல புதிய விஷயங்கள் சொல்லப்பட்டன. கோபத்துடன் சில விஷயங்களும் சொல்லப்பட்டன. அது தேர்தல் மனநிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட செயல்திட்டம் உள்ளது. அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. இருந்தபோதிலும் `நமது வல்லமையை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடலாம்' என்று இங்கே குறிப்பிடும் தவறை நாம் செய்யக் கூடாது. யாரையும் குறைத்து மதிப்பிட்டு நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது.
உங்களுடைய மேன்மை குறித்து நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். தரையைக் காண முடியாத அளவுக்கு நீங்கள் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். வேர்களில் இருந்து விலகிப் போய்விட்டீர்கள். தரையில் இருக்கும் மக்களைப் பாருங்கள். எனவே, மேலாதிக்கப் போக்கு எனக்கு நல்லது இல்லை. நீங்கள் அப்படியே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலாதிக்கப் போக்கு நிலை குறித்து நமக்குள் போட்டி கிடையாது. ஏனென்றால் வேருடன் இருந்து, மக்களுடன் நெருங்கி இருப்பது தான் எங்களுடைய கனவாக இருக்கிறது.
தேசத்தை பலப்படுத்துவதற்கு வேர்களுடன் இணைந்திருப்பது தான் எங்கள் கனவு. எனவே, நாங்கள் போட்டியில் கிடையாது. எனவே, உங்களுடைய மேலாதிக்கத்தனம் வளர்வதற்கு எங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலர் புகழப்பட்டு, குறிப்பிடப் பட்டார்கள் என்பது உண்மை. அவ்வாறு குறிப்பிடாமல் போய்விட்டால் அது தங்களுக்கு இழுக்கு என்று கருதிக் கொள்கிறார்கள். இப்படி இருக்கக் கூடாது. ஆனால் நடக்கிறது.
2004க்கு முன்பு அடல் ஜி -யின் அரசு இருந்தது. 2004 முதல் 2014 வரை அவர்கள் ஆட்சி செய்தார்கள். ஒருமுறை கூட அவர்கள் அடல் ஜி அரசைப் புகழ்ந்து பேசியதோ அல்லது ஆட்சி பற்றிக் குறிப்பிட்டதோ இல்லை என்று என்னால் சவாலாகக் கூற முடியும். அடல் ஜி அரசை விடுங்கள். நரசிம்மராவ் அரசைப் பற்றிக் கூட அவர்கள் புகழ்ந்தது கிடையாது. சொல்லப் போனால், அவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் ஜி அரசைப் பற்றியாவது தங்கள் உரையில் இப்போது ஏதும் குறிப்பிட்டார்களா? அந்த பெரிய தலைவர்களுடன் ஒப்பிடும் போது நான் ஒன்றுமே கிடையாது. நான் சாதாரணமானவன். ஆனால் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்; சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு மத்திய மற்றும் மாநில அரசுகளும் முக்கிய பங்காற்றியுள்ளன என்று செங்கோட்டையில் நின்று இரண்டு முறை பேசிய முதலாவது பிரதமர் நான் தான்.
இந்த அவையில் இதே விஷயத்தைப் பல முறை நான் கூறியிருக்கிறேன். அதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஆம், அவர்களுக்கு வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால், எங்களுடைய மனப்போக்கு, குணாதிசயம், சிந்தனை ஆகியவற்றை வெளிப்படுத்த ஒரு உதாரணத்தை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
குஜராத் முதல்வராக நீண்ட காலம் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. குஜராத்துக்கு அது பொன்னான வாய்ப்பு. எனவே, அந்த ஆண்டில் அனைவரையும் ஒருங்கிணைத்து பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் இப்போது ஒரு முக்கிய பணி பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் ஆளுநர்கள் ஆற்றிய உரைகளை புத்தகமாகத் தொகுத்து, வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் தெரிவித்திருக்கிறேன். இப்போது சொல்லுங்கள். கடந்த 50 ஆண்டு கால ஆளுநர்கள் எந்த ஆட்சிக் காலங்களைச் சேர்ந்தவர்கள்?
ஒரு வகையில் அது அப்போது ஆட்சியில் இருந்த அரசுகளின் நற்செயல்களைத் தொகுக்கும் செயல்பாடு. அவை எங்கள் கட்சியின் அரசுகள் அல்ல. இருந்தபோதிலும், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் ஆட்சி அமைப்பில் அனைவருடைய பங்களிப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது எங்களுடைய சிந்தனையின் அங்கமாக உள்ளது. அது நேர்மறை செயல்பாடு. அது செய்தித் தாள்களின் தலையங்கங்களைத் தொகுப்பது அல்ல. ஆளுநர்களின் உரைகளைத் தொகுப்பது. அது இன்னும் கிடைக்கிறது.
எனவே, மற்றவர்களின் பணியை ஒருபோதும் அங்கீகரிக்காதவர்களுக்கு, எங்களைப் பற்றி குறை கூறவோ அல்லது முந்தைய அரசுகளின் பணிகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று கூறுவதற்கோ எந்த உரிமையும் கிடையாது. நரசிம்ம ராவ் ஜி -க்கு அவருடைய காலத்திலேயே பாரத ரத்னா விருது வழங்கியிருக்க வேண்டும்; டாக்டர் மன்மோகன் சிங் ஜி -க்கு அவருடைய முதலாவது ஆட்சிக் காலத்துக்குப் பிறகு பாரத ரத்னா விருது வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், குடும்பத்துக்கு வெளியில் இருப்பவர்கள் ஒருபோதும் எதையும் பெற்றது கிடையாது. ஆனால் நாங்கள் வித்தியாசமானவர்கள். பிரணாப் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது எந்தக் கட்சிக்காக பாடுபட்டவர் என்பது பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. அவருக்கு பாரத ரத்ன விருது வழங்குவதற்கு நாங்கள் முடிவு எடுத்தது, தேசத்தின் வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட்டது. எனவே தொடர்ந்து எங்களை குற்றம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். இதுவரை போகட்டும். இனிமேல் செய்யாதீர்கள்!
யாருடைய பங்களிப்பையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. 125 கோடி இந்தியர்களும் நாட்டை முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்று நான் கூறும்போது, எல்லோரும் அதில் அடங்கிவிடுகிறார்கள். எனவே, தயவுசெய்து விவாதத்தின் தரத்தை குறைத்துவிட வேண்டாம்.
மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,
`யார் இதைச் செய்தார்கள்' என்று அவர்கள் பல முழக்கங்களை எழுப்பினர். இன்று ஜூன் 25 ஆம் தேதி. பலருக்கு ஜூன் 25 ஆம் தேதியின் முக்கியத்துவம் தெரியாது. அவர்கள் அருகில் இருப்பவர்களைக் கேட்கிறார்கள். தேசத்தின் ஆன்மா ஜூன் 25 இரவில் நசுக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகம் நமது அரசியல் சாசனத்தின் பக்கங்களில் இருந்து பிறக்கவில்லை. நமது தேசத்தின் ஆன்மாவாக பன்னெடுங்காலமாக ஜனநாயகம் இருந்து வந்துள்ளது. அந்த ஆன்மா நசுக்கப்பட்டது. நாட்டின் ஊடகங்கள் மிரட்டப்பட்டன. நாட்டின் உயர்ந்த தலைவர்கள் சிறை வைக்கப் பட்டார்கள். ஒருவருடைய அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த இந்தியாவே சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. நீதித் துறை மற்றும் அதன் தீர்ப்பை மதிக்காத போக்கிற்கு, வாழும் உதாரணமாக அந்த செயல்பாடு இருக்கிறது.
ஜூன் 25-ம் தேதியாகிய இன்று ஜனநாயகத்தை நோக்கிய நமது பற்றுறுதியையும், உறுதிப்பாட்டையும் மேலும் அதிகமான தீவிரத்துடன் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஒரு புறத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே மறுபுறத்தில் அதை நசுக்கிய பாவத்தை யாராலும் மறுக்க முடியாது. இந்த அவமானத்தை மறைக்கவே முடியாது என்பதை இந்தப் பாவத்தில் பங்கு கொண்டவர்கள் அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இது மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதன் மூலமே அத்தகைய பாவத்தை செய்யும் யாரும் இனி பிறக்கவே முடியாது. இது நினைவுபடுத்தவே தவிர, யாரையும் அவமானப்படுத்த அல்ல.
இது ஜனநாயகம் குறித்த பற்றுறுதியின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவுபடுத்தவே. ஊடகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்த அந்த நேரத்தில் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஒவ்வொருவரும் இருந்து வந்த அந்த நேரத்தில் தேர்தலுக்குப் பிறகு அவர்கள் தங்கள் தீர்ப்பை தெரிவித்தார்கள். ஜனநாயகத்திற்காக அவர்கள் வாக்களித்தார்கள். ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டினார்கள். எமது நாட்டு வாக்காளர்களின் வலிமை இதுதான். மீண்டும் ஒரு முறை சாதி, இனம், மொழி ஆகிய வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் மகத்தான எதிர்காலத்திற்காக அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
குடியரசுத் தலைவர் அவர்கள் தனது உரையில் இரண்டு முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். காந்தியின் 150வது பிறந்ததினம் மற்றும் நாட்டு விடுதலையின் 75வது ஆண்டு ஆகியவைதான் அவை. தனிநபரின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, ஒரு குடும்பத்தின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, ஒரு குழுவின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, ஒரு சில நாட்கள் மிகுந்த உற்சாகத்தை தருபவையாக அமைகின்றன. அது வாழ்க்கையை உற்சாகப்படுத்துவதோடு நமது தீர்மானங்களை நிறைவேற்றிய உணர்வையும் எழுப்புகின்றது. நமது புனிதமான பாபுவை விட இந்தியாவிற்கு உற்சாகம் தரக்கூடிய வேறு விஷயம் எதுவும் இருக்க முடியாது. நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தீரர்களைப் பற்றிய நினைவுகள் தான் நம்மிடம் இருக்கின்றன. இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டுவிடக் கூடாது.
நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள், தாய்நாட்டிற்காக தங்கள் இளமையை செலவழித்தவர்கள் ஆகியோரைப் போற்றுவது, விடுதலை இயக்கத்திற்கு வெற்றிகரமாக தலைமை தாங்கிய புனித பாபுவை போற்றுவது ஆகிய இந்தத் தேதிகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாட்டிற்குள் புதியதொரு உணர்வை நம்மால் உருவாக்க முடியும். இது எந்தவொரு அரசின், அரசியல் கட்சியின் நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது. நமது நாடு முழுவதன் நிகழ்ச்சி நிரலே ஆகும். இங்கு கட்சிகள் என்பது இல்லை; நாடு மட்டுமே இருக்கிறது. இதைத்தான் குடியரசுத் தலைவரும் இங்கு வலியுறுத்தினார். நமது தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான நேரம் இதுவே. தேர்தல் களத்தில் ஒருவருக்கொருவர் நீங்கள் வாதிடலாம். ஆனால் இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வோம். நாட்டின் விடுதலைக்கு முன்பு, நாட்டிற்காக மக்கள் தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், நாடு விடுதலை பெற்ற 75வது ஆண்டு தருணத்தில் நாட்டிற்காக நாம் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.
இந்த அவையில் உள்ள அனைத்து பிரதிநிதிகளையும் நான் கேட்டுக் கொள்வது இதுதான். புதியதொரு இந்தியாவை உருவாக்க நமது குடியரசுத் தலைவரின் உத்தரவை, எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை பின்பற்றி நடக்க முற்படுவோம். இந்த இரண்டு முக்கியமான வாய்ப்புகளையும், சாதாரண மக்களுடன் இணைக்க நாம் முற்படுவோம்.
இந்தியா அடிமைப்பட்டிருந்த காலம் மிக நீண்டதுதான். இருந்தாலும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்த மக்கள், விடுதலைக்காக கிளர்ந்தெழுந்து தங்கள் இன்னுயிரை ஈந்து கொண்டேதான் இருந்தார்கள். 1857-ம் ஆண்டில் அணிதிரட்டப்பட்ட ஒரு குழுவும் உருவானது. இருந்தாலும் மகாத்மா காந்தி மகத்தான பங்களிப்பை செய்தார். சாதாரண மனிதனை அவர் விடுதலைப் போராட்ட வீரனாக மாற்றினார். அவர் துடைப்பத்தை எடுத்து பெருக்கிய போதும், மாணவர்களுக்கு போதித்த போதும், காதியை உடுத்திய போதும் அவை அனைத்துமே நாட்டின் விடுதலைக்காகத்தான்.
நமது பெருமரியாதைக்குரிய பாபு இத்தகையதொரு சூழலை நாடு முழுவதிலுமே உருவாக்கியிருந்தார். 1942-ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் நாடு முழுவதுமே பங்கேற்றது. 1942 முதல் 1947 வரையிலான காலப்பகுதி விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாக இருந்தது. பிரச்சனைகளில் இருந்து நாட்டை விடுவித்து, நமது பொறுப்புகளை மீண்டும் வலியுறுத்தி, நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு, நாடு முழுவதையும் உத்வேகப்படுத்துவதற்கு காந்தியின் 150வது பிறந்தநாளையும் நாட்டு விடுதலையின் 75வது ஆண்டையும் பயன்படுத்திக் கொள்ள நம்மால் முன்வர முடியுமல்லவா?
நமது குடியரசுத் தலைவர் அவர்கள் நமக்கு முன்னால் இதை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் எடுத்து வைத்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். நாடு விடுதலை பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது மக்கள் அந்தக் கேள்வியைக் கேட்டு வியப்படைந்ததோடு நம்மால் எப்படி நாட்டை நடத்திச் செல்ல முடியும் என்றும் யோசித்தார்கள். இந்த கோரிக்கையைப் பார்த்து அவர்கள் கேலியும் கூடச் செய்தார்கள். ஆனால் நமது விடுதலைப் போராட்ட வீரர்களோ தங்களது கோரிக்கையில் மிகவும் உறுதியோடு இருந்தார்கள். நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்தவர்கள் அந்த விடுதலைக்காக வாழ்ந்து கொண்டிருந்தவர்களிடையே முற்றிலும் புதியதொரு உத்வேகத்தை ஊட்டினார்கள். அந்தத் தலைமையிடம் அத்தகையதொரு திறமையும் இருந்தது.
இதை நான் எல்லோருக்குமாகத் தான் சொல்கிறேன். எனக்கு மட்டுமோ அல்லது எனது கட்சிக்காக மட்டுமோ சொல்லவில்லை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதை வென்றடைய முடியும். இது எதுவும் எனது தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல. இத்தகைய குறுகிய புத்தி எனக்குக் கிடையாது. நான் எப்போதுமே அப்படி நினைத்தது கிடையாது. 125 கோடி இந்தியர்களின் கனவுகளுக்காக வாழ வேண்டும் என்று நான் நினைக்கும்போது இவ்வாறு குறுகிய வகையில் சிந்திக்கும் உரிமை கூட எனக்குக் கிடையாது.
உயர உயரப் பறக்கும் ஒரு பறவை
திரும்பிப் பார்க்கும்போது
அதைச் சுற்றி விரிந்து பரந்த வானம் தான் தென்படும்
இந்த உணர்வோடும் புதியதொரு உறுதியோடும் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று வாரங்கள்தான் ஆகின்றன. இருந்தாலும் ஒரு பழமொழி உண்டு: புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனக்கென ஓர் அடையாளத்துடன் தான் பிறக்கிறது.
எங்களது வெற்றியையும் கூட நாங்கள் கொண்டாடி இருக்கலாம். ஆனால், நாங்கள் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. தேர்தலுக்கான தயாரிப்புகளை ஆறுமாத காலமாக செய்தபிறகு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றும் கூட நாங்கள் நினைக்கவில்லை. அதை நாங்கள் விரும்பவும் இல்லை.
நாங்கள் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாட்டுக்காக வாழவே நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். இந்த மூன்று வார காலத்திற்குள்ளேயே முக்கியமான பல முடிவுகளை இந்த அரசு எடுத்திருக்கிறது. ஒவ்வொரு நொடியும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. சிறு கடைக்காரர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கான ஓய்வூதியம் குறித்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அனைவரும், “பிரதமர் விவசாயிகள் நல்வாழ்வுத் திட்டத்தின்” கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று நாங்கள் உறுதியளித்திருந்தோம். அது இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பிற்கான நிதியுதவித் தொகையை மட்டும் நாங்கள் அதிகரிக்கவில்லை; சமூகத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக உள்ள காவல் துறையினரின் குழந்தைகளுக்கும் அதை விரிவுபடுத்தியுள்ளோம். மனித உரிமைகள் தொடர்பான முக்கியமான சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கான தயாரிப்புகளையும் நாங்கள் செய்து முடித்துள்ளோம். இந்த மூன்று வாரங்களுக்கு உள்ளாகவே 2022-ம் ஆண்டிற்கான கனவுகளை நிறைவேற்றும் வகையில் மாநில முதல்வர்களுக்கான கூட்டத்தைக் கூட்டுவது; அனைத்துக் கட்சிகளுக்கான கூட்டத்தைக் கூட்டுவது; அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தைக் கூட்டுவது போன்ற செய்து முடிக்கக் கூடிய அனைத்து வேலைகளையும் நாங்கள் மேற்கொண்டோம். இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்கும்போது ஒரு நாளுக்கு சராசரியாக மூன்று கடமைகள் என்பதாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன். எனவே, மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே, இதைத்தான் குடியரசுத் தலைவர் அவர்களும் தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்கள். இதற்கு முன்பிருந்த அரசுகள் எதையும் செய்யவில்லை என்று நான் எப்போதுமே சொன்னதில்லை.
பல்வேறு அணைகளைக் கட்டுவதற்கான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் பாபா சாஹேப் அம்பேத்கரின் பெயரையும் சுட்டிக்காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்தியாவிற்குள் மேற்கொள்ளப்பட்ட தண்ணீர் தொடர்பான அனைத்து முன்முயற்சிகளுமே பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களின் தலைமையில்தான் எடுக்கப்பட்டன. எனினும் ஒரு உயரத்திற்கு மேல் போகும் போது மக்களால் தரையைப் பார்க்க முடியாது. மைய நீர்வழிப் போக்குவரத்து, பாசனம், போக்குவரத்து வழிமுறைகள் ஆகியவை பற்றியெல்லாம் பாபா சாஹேப் பேசுவது வழக்கம். பாபா சாஹேப் அவர்களின் வழிகாட்டுதல்கள் இன்றைக்கும் பொருத்தமானவை; நமக்குப் பயனுள்ளவை என்றே நான் கருதுகிறேன். ‘தண்ணீரை அணுகுவது என்பதை விட தண்ணீர் இல்லாத நிலையில் தான் மனிதன் அதிகம் துயரப்படுகிறான்’ என்று அவர் கூறுவதுண்டு. இந்தக் கவலையை பாபா சாஹேப் வெளிப்படுத்தினார் என்றே நான் கருதுகிறேன். இந்த வகையிலும் நாம் சற்று சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அணைகள் தொடர்பான விவாதங்களின்போது சர்தார் சரோவர் அணை பற்றியும் கூட விவாதிக்கப்பட்டது. மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, நான் சற்று கூடவே நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். சில நேரங்களில் வதந்திகள் பரவிக் கொண்டே இருக்கின்றன. அவர்களின் இயல்புக்கு ஏற்ப அதைச் செய்வதில் அவர்கள் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். உண்மை வெளிவருவதை அவர்கள் எப்போதுமே அனுமதிப்பதில்லை. இன்று நான் விளக்கம் அளித்த பிறகும் கூட உண்மை வெளிவரும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. நிலைமை அப்படியேதான் நீடிக்கும். என்றாலும் கூட எனது கடமையை நிறைவேற்றுவதில் நான் திருப்தி அடைகிறேன். பண்டிட் நேரு அவர்கள் சர்தார் சரோவர் அணைக்கான அடிக்கல்லை 1961-ம் ஆண்டில் நாட்டினார். சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் கனவாக அது இருந்தது. என்றாலும் கூட 1961-ம் ஆண்டில்தான் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இருந்தபோதிலும் பல பத்தாண்டுகளுக்கு அத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முறையான அனுமதி இல்லாமலேயேதான் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அந்த நேரத்தில் இத்திட்டத்திற்கான செலவு ரூ. 6,000 கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் திட்டம் நிறைவடையும்போது அதற்கான செலவு ரூ. 60,000- முதல் 70,000 கோடியாக உயர்ந்தது.
அதனால் நாட்டிற்கு என்ன பலன் கிடைத்தது? மேலும் ஐ.மு.கூ. அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளும் நடந்தன. ரூ. 6,000 கோடியான இந்தத் திட்டத்தின் மதிப்பீடு 1986-87க்கு இடையே ரூ. 62,000 கோடியாக உயர்ந்தது. நாங்கள் வந்துதான் அந்தத் திட்டத்தை நிறைவேற்றினோம். நான் (குஜராத்) முதல்வராக இருந்தபோது இதற்காக உண்ணாவிரதப் போராட்டம் கூட நடத்தியிருக்கிறேன். எல்லாமே நிறுத்தப்பட்டது. இப்போது அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் பிரதமரான பிறகு இதற்கான தடைகள் அனைத்தையும் பதினைந்தே நாட்களில் அகற்றி விட்டேன்.
இன்று கிட்டத்தட்ட நான்கு கோடி மக்களுக்கு தண்ணீர் வசதி கிடைத்துள்ளது. 7 பெருநகரங்கள், 107 நகராட்சிகள், 9,000 கிராமங்கள் இப்போது தூய்மையான குடிநீர் பெறுகின்றன. ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டுக்குப் பெயர் போன மாநிலங்களாக இருந்தன. எனவே, இதற்கென தனியாக, ஜல சக்தி அமைச்சகத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். தண்ணீர் தொடர்பான பிரச்சனையை நாம் மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பருவ காலத்தில் முடிந்தவரையில் நாம் தண்ணீரை சேமிக்க வேண்டும்.
அரசின் வரம்புகளுக்குள் செயல்பட்டு நாட்டில் தண்ணீருக்கான வசதியை அதிகரிப்பதில் உதவி செய்ய வேண்டுமென மதிப்பிற்குரிய உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகளை நான் கேட்டுக் கொள்கிறேன். தண்ணீரை முறையாக சேமிப்பதன் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கையை நம்மால் பாதுகாக்க முடியும். தண்ணீர் தொடர்பான பிரச்சனைகள், இரண்டு வகையானவர்களை பெரிதும் பாதிக்கின்றன: ஏழைகள், குறிப்பாக நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்.
நமது சோஷலிஸ்ட் நண்பர்களுக்கு என்ன ஆயிற்று என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. என்றாலும் நாட்டிலுள்ள பெண்கள் தண்ணீர்- கழிப்பறை என்ற இரண்டு வகையான பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர் என்று தொடர்ந்து லோஹியாஜி வலியுறுத்தி வந்தார். இந்தப் பிரச்சனைகளில் இருந்து நமது தாய்மார்களையும் சகோதரிகளையும் விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அவர் வலியுறுத்தி வந்தார். லோஹியாஜியின் கனவை நனவாக்கும் வகையில் நாங்கள் தீவிரமாகச் செயல்பட்டோம். நாடெங்கும் கழிப்பறைகளைக் கட்டியதன் மூலம் அந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்து நமது தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோருக்கு நமது மரியாதையை செலுத்தினோம். இப்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் என்ற கோஷத்தை முன்வைத்து முன்னேறி வருகிறோம்.
இது மிகப்பெரிய, நீடித்த ஒரு பிரச்சனை என்று எனக்குத் தெரியும். யாராவது அதை மதிப்பீடு செய்து எனது முயற்சிகளுக்கு மதிப்பெண் கொடுக்கட்டும். அவர்கள் ஒருவேளை மோடிக்கு நூற்றுக்கு 70 மதிப்பெண்களுக்குப் பதிலாக 50 மதிப்பெண்களைத் தரலாம். யாராவது ஒருவர் இதற்கான தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். ஜல சக்தி அமைச்சகத்தைப் பற்றித்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். தண்ணீரை சேமித்த பிறகு பாசனம் என்பது அடுத்த கடமையாக அமைகிறது. கரும்பு விவசாயத்திற்கு குறு பாசனம்தான் பயனுள்ளது என்பது உலகம் முழுவதிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை இதைப் புரிந்து கொள்ளச் செய்ய யார் முன் வருவார்கள்? குறு பாசனத்தின் நற்பயன்கள் பற்றி யார் அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்? அரசின் திட்டத்தின் மூலம் இதற்கான நிதி கிடைக்கும்; தண்ணீரும் சேமிக்கப்படும். இதுபோன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிப்பதன் மூலம் நமது நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயமே முதுகெலும்பாக இருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயமே இருக்கிறது. என்றாலும் கூட, வழக்கொழிந்து போன செயல்முறைகள், வழிமுறைகள் ஆகியவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும். இடுபொருட்களுக்கான செலவைக் குறைப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். ஜீரோ பட்ஜெட் குறித்த நமது பரிசோதனைகளும் வெற்றி பெற்று வருகின்றன. விளைச்சலில் இப்போது எந்தவிதக் குறைவும் இல்லை. முழுமையான சுகாதாரத்திற்கான காலத்தில் தரமும் அதிகரித்து வருகிறது.
எந்தவொரு நிகழ்வையும் அரசு நிகழ்வாக கருதாமல், எதையும் அரசியல் ஆக்காமல் தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நாட்டின் விவசாயிகளின் நலனுக்காக நாம் இணைந்து செயல்பட்டாக வேண்டும். அவர்களோடு நாம் கைகோர்க்க வேண்டும். விவசாயத்தில் பெருநிறுவனங்கள் எதுவும் முதலீடு செய்வதில்லை. அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கென சில சட்டங்களையும் விதிகளையும் உருவாக்க வேண்டும். இல்லையெனில், ஒரு ட்ராக்டரை கொடுப்பதே முதலீடு தான் என்று யாராவது ஒருவர் நம்பிவிடக் கூடும். உணவுப் பதனிடுதல், சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன வசதியுள்ள சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றில் பெரு நிறுவனங்களின் முதலீடு நமக்குத் தேவைப்படுகிறது. இதுதான் இன்றைய தேவை. அதை மேலும் அதிகரிப்பதை நோக்கி நாம் செயல்பட வேண்டும்.
விவசாய உற்பத்திக்கான அமைப்புகளின் உதவியுடன் விவசாயிகளுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் விதையில் இருந்து சந்தை வரையிலான ஒரு ஏற்பாட்டை நாம் உருவாக்க வேண்டும். இது விவசாயத் துறையில் ஏற்றுமதிக்கான ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும். இந்தத் துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கடந்த முறை 2014-ம் ஆண்டில் தானியங்களின் விலை பெரும் பிரச்சனையாக மாறியது. என்றாலும் விவசாயிகளின் உணர்வைப் பாருங்கள். தானியங்களை பயிரிட முன்வருமாறு நான் ஒரே ஒரு வேண்டுகோளைத்தான் முன்வைத்தேன். நமது விவசாயிகள் நாட்டின் தானியங்களுக்கான தேவையை நிறைவேற்றினார்கள். தானியங்களுக்குப் பிறகு நாம் எண்ணெய் வித்துக்களுக்காக விவசாயிகளை உற்சாகப்படுத்த வேண்டியிருக்கிறது. சமையலுக்கான எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை, நமது நாட்டிற்கு எக்காரணத்தைக் கொண்டும் வரக் கூடாது.
நமது நாட்டு விவசாயகளை உற்சாகப்படுத்த முடியும் என்றே நான் நம்புகிறேன். எதிர்காலம் குறித்த ஒரு தொலைநோக்குடன் விவசாயிகளின் வலிமையோடும், நாட்டின் தேவைகளோடும் கிராமப்புறப் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றி அமைக்க நாம் செயல்பட வேண்டும்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,
விமர்சிப்பதற்காக புள்ளிவிவரங்களை எந்தவகையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது உண்மைதான். ஒரு காலத்தில் நாட்டின் கனவுகளை நிறைவேற்றுவது என்பது பாராட்டத்தக்க விஷயமாக இருக்கக் கூடும். ஆனால், வேறு ஒரு காலத்தில் அதே விஷயம் ஏற்கத்தகாத ஒன்றாக மாறிவிடுகிறது. இதே அவையில் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் உலக அளவில் 13வது இடத்திலிருந்து 11வது இடத்திற்கு இந்தியா உயர்ந்தபோது மிகப்பெரும் உற்சாகம் எழுந்தது. உறுப்பினர்கள் மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால், இப்போது இந்தியா 6வது இடத்தை எட்டியிருக்கிறது. ஆனால், அன்றிருந்த உற்சாகம் இன்றில்லை. அதே நாடுதான்; அதே நாட்டின் மக்கள்தான் நாம் அனைவரும். 11வது இடத்தை எட்டிப் பிடித்தது நமக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்றால், 6வது இடத்தை அடைந்தது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
நிலப்பகுதியை நம்மால் பார்க்க முடியாத அளவுக்கு, நாம் உயரத்தில் எவ்வளவு காலத்துக்கு இருப்பது? இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பது நம் அனைவரின் கனவாக ஏன் இருக்கக் கூடாது? நாம் அனைவரும் இணைந்து 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை கொண்டுசென்றால், யாருக்கு இழப்பு ஏற்படும்? அனைவருமே பயன்பெறுவார்கள். இதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த கனவுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் குறித்து கிண்டலாகப் பேசினார்கள். ஆனால், நாட்டிற்குள் இந்தத் திட்டத்தின் பங்களிப்பை யாராவது மறுக்க முடியுமா?
மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,
நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. இதற்காக எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. செய்வதற்கு என்னிடம் நிறைய பணிகள் உள்ளன. அதில் குறிப்பிட்ட விஷயங்களை நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டியது முக்கியம். உலோகங்களை உற்பத்தி செய்வதில், நமது நாட்டுக்கு 200-225 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு, உலோகங்களை உற்பத்தி செய்வதற்கு நம்மிடம் 18 ஆலைகள் இருந்தன. அதேநேரம், சீனாவில் ஒன்றும் இல்லை. சீனாவுக்கு எந்தவொரு அனுபவமும் கிடையாது. இன்று, பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்களை உலகம் முழுமைக்கும் சீனா ஏற்றுமதி செய்கிறது. ஆனால், நாம் இறக்குமதியில் முதலாவதாக உள்ளோம். இந்த உண்மை நிலையிலிருந்து நாட்டை முன்னேற்ற வேண்டியது அவசியம். “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தை விமர்சிப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? இரவு நேரத்தில் உங்களுக்கு நல்ல தூக்கம் வரலாம். ஆனால், இதனால் நாட்டுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.
மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,
பேசுவதற்கு இந்த வாய்ப்பை அளித்த உங்களுக்கும், இந்த அவைக்கும் உண்மையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் முதல் 5 மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உயர்த்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டியது அவசியம். ஏற்றுமதி அதிகரித்துள்ளது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை மேலும் ஊக்குவித்துள்ளோம். இந்தியாவில் தொடங்குவோம் திட்டத்தைப் பயன்படுத்த இளைஞர்களை ஊக்குவித்து வருகிறோம். இளைஞர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். நமது நாட்டில் சுற்றுலாத் துறையில் அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், நமது நாட்டுக்கு உலக மக்களை ஈர்க்கத் தவறிவிட்டோம் என்ற எண்ணத்தையே நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
சுற்றுப்புறத் தூய்மை குறித்த பிரசாரம், நமக்கு பலத்தை அளித்துள்ளது. சுற்றுலாத் துறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம், நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சுற்றுலா அடிப்படையில், உலகத்தின் முன்பு, நாட்டுக்கு புதிய அடையாளத்தை நம்மால் உருவாக்க முடியும். இந்த நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். வரும் நாட்களில், கட்டமைப்பு அடிப்படையில் நாட்டை முன்னேற்றி கொண்டு செல்ல வேண்டும். நாட்டின் தேவையுடன் இணைத்துப் பார்க்கும்போது, ரூ.100 லட்சம் கோடியும் கூட சிறிய தொகையாக இருக்கும்.
இந்த மிகப்பெரும் கனவை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். உலகம் வழங்கும் உதவிகள் மற்றும் வசதிகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய இந்தியா, நவீன இந்தியா மற்றும் எளிதாக வாழ்வது ஆகிய நமது கனவுகள், நம் முன்பு உள்ளன. சாதாரண மனிதனுக்கு உரிய வாழ்க்கை கிடைப்பதையும், அவனது கனவுகள் நிறைவேறுவதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றபடி, கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். கிராமமாக இருந்தாலும் சரி, அல்லது நகரமாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவருக்கும் நாம் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
உழைக்கும் வயதைக் கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து இன்று நாம் பேசி வருகிறோம். நாட்டில் இளைஞர் சக்தி உள்ளது. உலகின் தேவைகளுக்கு ஏற்ப நமது இளைஞர்களை நாம் தயார்படுத்தியுள்ளோமா? இதற்கு நாம் நிறைய செய்ய வேண்டியுள்ளது. திறன் வளர்ப்பின் அளவை நாம் அதிகரிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நவீனத்தை நோக்கி நம்மால் எவ்வாறு மாற முடியும் என்று மேதகு குடியரசுத் தலைவர் நம்மிடம் கூறினார்.
பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக மக்கள் நிதி-ஆதார்-மொபைல் (JAM) கட்டமைப்பை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அனைத்து மாநில அரசுகளும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், JAM வலைதளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதன்மூலம், பெருமளவில் பணத்தை சேமிக்க முடியும். இது பலருக்கும் பயனளிக்கும். எந்தவொரு நபரும், தனது பொருளை அரசுக்கு விற்க முடியும். இதனை நோக்கி அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஊழலுக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். சில நபர்களை சிறையில் அடைக்காததால் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளோம். யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைப்பதற்கு இது அவசரநிலை காலமில்லை. இது ஜனநாயகம். இந்தப் பணியை செய்வதற்கு நீதித்துறை உள்ளது. சட்டரீதியாக நாம் பணியாற்ற வேண்டும். ஜாமீன் கிடைத்துவிட்டால், அந்த நபர் மகிழ்ச்சியடையலாம். பழிவாங்கும் எண்ணத்தோடு யாரும் பணியாற்றக் கூடாது. எனினும், ஊழலுக்கு எதிரான நமது போராட்டத்தை நாம் தொடர்ந்து செய்வோம். நாம் எதைச் செய்தாலும், அதனை நேர்மையுடன் செய்வோம். எந்தவொரு நபருக்கும் எதிராக கசப்பான உணர்வுடன் எதையும் செய்ய மாட்டோம். நமக்கு இந்த தேசம் அதிக அளவில் வழங்கியுள்ளது. எனவே, தவறான பாதையில் நாம் நடக்கக் கூடாது. தொழில்நுட்பத்தை மிகப்பெரும் அளவில் பயன்படுத்த வேண்டும்.
மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,
தீவிரவாத விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவது ஏன்? இது மனிதசமூகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். இது மனிதசமூகத்துக்கு சவாலாக உள்ளது. மனிதநேயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், ஒன்று திரண்டு, இதற்கு எதிராக போராட வேண்டும்.
பெண்களின் மேம்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு வாய்ப்புகள் இருந்தன. ஆனால், மிக உயரத்தில் இருந்த அவர்களால், சில விஷயங்களைப் பார்க்க முடியவில்லை. 1950-களிலேயே பொது சிவில் சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சி தவற விட்டுவிட்டது. அவர்கள் இந்துக்களுக்கான சட்டங்களிலிருந்து தொடங்கினர்.
35 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. ஷா பனோ வழக்கு மூலம், உச்சநீதிமன்றமும் முழுமையாக உதவியது. நாட்டில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த உயரத்திலிருந்து அவர்களால் அதனைப் பார்க்க முடியவில்லை. கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டனர். 35 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, காங்கிரஸுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான மசோதாவை கொண்டுவந்துள்ளோம். நாட்டில் உள்ள பெண்களின் பெருமையை எந்தவொரு மதம் அல்லது இனத்துடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை.
ஷா பனோ வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், சில அமைச்சர்கள், தொலைக்காட்சிகளுக்கு அளித்த நேர்காணல்களில் அதிர்ச்சியளிக்கும் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதனை உறுதிப்படுத்துவதற்கு என்னிடம் வழிகள் இல்லை. எனினும், நான் கேள்விப்பட்டதை நான் உங்களிடம் கூறுகிறேன். ஷா பனோ வழக்கின்போது, காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் அளித்த பேட்டியில், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது காங்கிரஸின் பொறுப்பு இல்லை என்று கூறினார். இது மிகவும் தீவிரமானது. “சாக்கடையில் இருக்க அவர்கள் விரும்பினால், விட்டுவிடுங்கள்.” இதனை யூடியூப்பில் உங்களால் காண முடியும். அதற்கான இணைப்பை உங்களுக்கு நான் அனுப்புகிறேன்.
மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,
நான் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன். காந்தி-150, சுதந்திர தினம்-75 குறித்து மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் மதிப்புடன் குறிப்பிட்டார். இவை அனைத்தும் உரிமைகளை மையமாகக் கொண்டே இருந்தது என்று நான் கூறுகிறேன். ஒவ்வொருவருமே உரிமைகள் குறித்து கவலைப்பட்டனர். உரிமைகள் என்ற அளவிலிருந்து பொறுப்புகள் என்ற அளவுக்கு மாற்றி, நாட்டிற்குள் மாற்றத்தை உறுதிப்படுத்த இது வாய்ப்பாக உள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு என்பது, மக்களின் அறிவைத் தட்டி எழுப்புவதுடன், வழிநடத்துவதாகவும் உள்ளது. பணிகளின் சக்தி குறித்து நம்மில் பெரும்பாலோர் கேள்விப்பட்டிருக்கிறோம்.
மகாத்மா காந்தி கூறும்போது – ஒவ்வொரு உரிமையும், தன்னுடன் பொறுப்பையும் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். லோகியா அவர்கள் கூறும்போது – தனது பணியைச் செய்யும்போது, அதனால் ஏற்படும் இழப்பு குறித்து யாரும் பார்ப்பதில்லை என்று தெரிவித்தார். இந்த மேற்கோள்கள் குறித்து சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். இது மிகவும் பழமையான கருத்து. “பணிகள் என்பது முதலில் இருக்க வேண்டும் என்று உலகுக்கு இந்தியா கற்றுக் கொடுத்தது. இந்தப் பொறுப்புகளில் இருந்தே உரிமைகள் உருவானது. இன்றைய நவீனகால உலகில், ஒவ்வொரு பகுதியிலும் முரண்பாடுகள் உள்ளன, ஒவ்வொருவரும் தங்களது உரிமைகள் குறித்தும், வசதிகள் குறித்தும் பேசுகின்றனர்; அரிதாகவே பணிகள் குறித்து பேசுகின்றனர். இதுவே முரண்பாடுகளுக்குக் காரணம். இதுவே உண்மை. நாம் உரிமைகள் மற்றும் வசதிகளுக்காக மட்டுமே போராடுகிறோம். ஆனால், இதனை செய்வதில் பொறுப்புகளை நாம் மறந்துவிட்டால், இந்த உரிமைகளும், வசதிகளும் நமக்கு எதனையும் விட்டுத் தராது.”
இந்தக் கருத்துக்களைத் தெரிவித்த மற்றும் நாம் மறந்துவிட்ட மிகப்பெரும் தலைவர்களை நினைவுகூர வேண்டியது நமது பொறுப்பு. இந்த சிந்தனைகளை நாம் முன்னோக்கி கொண்டு செல்வோமா? தேர்தலுக்கு முன்னதாக 1951-ம் ஆண்டு ஜூலை 14-ல் இந்தக் கருத்துக்களை மாபெரும் தலைவர் தெரிவித்தார். அந்த நேரத்தில் மாபெரும் தலைவர் பண்டித நேருதான், தனது அறிவிப்பின்போது, இதனைப் படித்தார்.
1951-ல் பண்டித நேரு கண்ட கனவை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து, கனவை நிறைவேற்றுவோமா? நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முடிவுசெய்து, அதனை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வோம்.
நமது நாட்டின் வரலாற்றில், இளைஞர்களைப் பார்த்து, புத்தகங்களை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மகாத்மா காந்தி அழைப்பு விடுத்தார். இதனை மக்கள் ஏற்று செயல்பட்டனர்; வெளிநாட்டுப் பொருட்களை கைவிட்டுவிட்டு, இந்தியப் பொருட்களையே பயன்படுத்துமாறு காந்தி கேட்டுக் கொண்டதை மக்கள் மதித்து செயல்பட்டனர். நாள்தோறும் ஒரு வேளை உணவை விட்டுவிட்டு, நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க உதவுமாறு லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் கேட்டுக் கொண்டார். அதனை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதேபோல, சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு என்னைப் போல சிறு மனிதன் வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, எரிவாயு மானியத்தை மக்கள் விட்டுக் கொடுத்தனர். இதற்கு நாடு தயாராக உள்ளது.
அரசியல் எல்லைகளைக் கடந்து, புதிய இந்தியா மற்றும் நவீன இந்தியாவை உருவாக்க நாம் முன்னோக்கிச் செல்ல வாருங்கள். அரசியலைவிட நாடு பெரியது. எந்தவொரு அரசியல் கட்சியையும் விட நாடு பெரியது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு எதிர்பார்ப்பும், விருப்பமும் உள்ளது. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களையும், பாதையையும் வகுத்துக் கொடுத்த மேதகு குடியரசுத் தலைவருக்கு நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உரைக்கு நன்றி தெரிவிப்பதோடு மட்டுமன்றி, அந்த உரையின் உணர்வு அடிப்படையில், நாட்டின் நலனுக்கான செயல்களை நாம் செய்வோம் என்று நம்புகிறேன்.
இந்த எதிர்பார்ப்புகளுடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன். அனைத்து விவாதங்களிலும் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு மதிப்பளிக்கிறேன்.
அவைத் தலைவர் அவர்களே, உங்களுக்கும் நன்றி!
***
(Release ID: 1580418)
Visitor Counter : 694