புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

புள்ளியியல் சீர்திருத்தங்கள் மற்றும் அமலில் உள்ள ஜிடிபி நடைமுறை குறித்தும் விளக்கம்

Posted On: 10 JUN 2019 5:19PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் (MOSPI) மேற்கொள்ளப்பட்டு வரும் புள்ளியியல் சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள ஒட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) கணக்கீட்டு முறை குறித்து சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

2. புள்ளியியல் சீர்திருத்தங்களைப் பொருத்தவரை, அது தொடர்ந்து நடைபெறும்  விஷயம் என்பதையும், சமூகத்தில் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப செயல்பாடுகள் அமைவதை உறுதி செய்வதற்கு அது தேவைப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். பொருத்தமான மற்றும் தரமான புள்ளியியல் விவரங்களை தயாரிப்பதற்கு புள்ளியியல் நடைமுறைகளின் தேவை கடந்த காலத்தில் அதிகரித்து வந்திருக்கிறது. கைவசம் உள்ள ஆதாரவளங்களையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு, முடிந்த வரையில் இந்தத் தேவைகளை இந்த அமைச்சகம் பூர்த்தி செய்து வருகிறது. மற்ற துறைகளைப் போல, புள்ளியியல் துறையும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவதற்காக, தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படும் சூழ்நிலையில் தற்போது உள்ள ஆதார வளங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. CSO மற்றும் NSSO அமைப்புகளின் பலங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக, சமீபத்தில் இந்த அமைப்புகள் ஒன்றாக சேர்க்கப்பட்டன.

3. 2018 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவை பல புதிய செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்தது. சேவைத் துறைகள் குறித்த வருடாந்திர கணக்கெடுப்பு (சேவைத் துறைகளை அதிக அளவில் உள்ளடக்கி திட்டமிடுதலுக்காக), சட்டபூர்வ அந்தஸ்து இல்லாத நிறுவனங்கள் குறித்த வருடாந்திர கணக்கெடுப்பு (இந்த நிறுவனங்கள் குறித்து, முதன்மையாக அமைப்பு சாரா துறைகள் பற்றிய நல்ல புரிதலுக்காக), நேர பயன்பாடு கணக்கெடுப்பு (வீட்டு உறுப்பினர்கள் நேரத்தை செலவிடும் முறையை மதிப்பீடு செய்தல்) மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்கள் பற்றிய பொருளாதார கணக்கெடுப்பு ஆகியவை இதில் அடங்கும். இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் கணிசமான நிதி மற்றும் மனிதவள ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவை கிடைப்பதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும். தற்போதுள்ள அலுவலர்களை தேவைக்கு ஏற்ப மற்ற துறைகளுக்கு மாற்றி நியமித்தல் மூலமாகவும், தொழில்முறை மனிதவள முகமைகளுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு செய்வதன் மூலமாகவும் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். வெளிப்பணி ஒப்படைப்பு பிரிவில் வரும் களப் பணியாளர்களுக்கும் நியமனத்துக்கு முன்னதாக தீவிர பயிற்சி அளிக்கப்படுவதுடன், அதன் பிறகு செம்மையாக கண்காணிக்கப்படவும் வேண்டும். பொருளாதாக கணக்கெடுப்பு மற்றும் பிற என்.எஸ்.எஸ். கணக்கெடுப்புகளில் இந்த நடைமுறை பின்பற்றப் படுகிறது. 2013ல் நடத்தப்பட்ட முந்தைய பொருளாதார கணக்கெடுப்பில், களப் பணிக்கான அலுவலர்களை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அதனால் கணக்கெடுப்பு இறுதி செய்து முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நடைபெற்று வரும் 2019 பொருளாதாரக் கணக்கெடுப்பில், களப்பணிக்கு பொது சேவை மையங்கள் (CSC) எஸ்.பி.வி.யுடன் இந்த அமைச்சகம் கை கோர்த்துள்ளது. தகவல் சேகரிப்பு தரமாக இருப்பதையும், நல்ல முறையில் கணக்கெடுப்பு நடப்பதையும் உறுதி செய்வதற்காக களப் பணியை கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்வதில் தேசிய மாதிரி கணக்கெடுப்பு (NSS), மாநில அரசுகள் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களின் அதிகாரிகளும் ஈடுபடுத்தப் படுவார்கள். என்.எஸ்.எஸ்.-ல் களப்பணியை தீவிரமாக கண்காணித்தல் மற்றும் மேற்பார்வையிடல் செயல்பாடு மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் முதல் முறையாக பொருளாதார கணக்கெடுப்புக்கு வலு சேர்ப்பதாக இருக்கும். இதன் மூலம் தேசிய புள்ளியியல் செயல்பாட்டு பதிவேடு உருவாக்குவதில் தரமான தகவல்கள் இடம் பெறுவது உறுதி செய்யப்படும். ஒன்றுபட்ட தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) உருவாக்கப்பட்டதன் மூலம் இந்த நடைமுறை உத்வேகம் பெற்றுள்ளது.

4. தரமான தகவலுக்கு அமைச்சகம் அதிக முக்கியத்துவம் தருவது பற்றியும், தற்போதுள்ள தகவல் ஆய்வு அலுவலர்களை மாற்றி மறுநியமனம் செய்வதன் மூலம் அதற்கு உத்தரவாதம் அளிப்பதும், பல்வேறு ஊடகச் செய்திகளில் விடுபட்டிருக்கின்றன. வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வரும் தகவல் சேகரிப்பு நடைமுறைகளை மாற்றி, என்.எஸ்.எஸ்.-ல் கம்ப்யூட்டர் உதவியுடன் அலுவலர் நேர்காணல் நடத்துவது (CAPI) மற்றும் மின்னணு அட்டவணை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது. மின்னணு அட்டவணை தொழில்நுட்ப பயன்பாடு மூலம், அதிக நம்பகத்தன்மை உள்ள தகவல்கள் சேகரிப்பது உறுதி செய்யப்படும். அவற்றின் உண்மைத்தன்மையை இயல்பாகவே கண்டறியும் அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தரமான தகவல் சேகரிப்பை உறுதி செய்வதற்கு, தற்போதுள்ள தகவல் ஆய்வு அலுவலர்களுக்கு இதற்காக மறு தொழில் திறன் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. நிர்வாக தகவல் தொகுப்புகள் வரும்போது, அவற்றின் தரம் மற்றும் புள்ளியியல் நடைமுறையில் பயன்படுத்தும் தன்மை ஆகியவற்றை உறுதி செய்த பிறகு, அவற்றை அதிக அளவில் பயன்படுத்துவதற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

5. தகவலின் நம்பகத்தன்மையைப் பொருத்தவரை, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ புள்ளியியல் தகவல்களுக்கான அடிப்படைக் கோட்பாடுகளை இந்திய அரசு மே 2016ல் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. எனவே சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்முறையிலான மற்றும் அறிவியல் தரங்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு, பொருத்தமான மற்றும் நம்பகமான தகவல் தொகுப்பை உருவாக்குவதற்கு, தன்னிச்சையான சுய அதிகாரம் கொண்ட புள்ளியியல் அமைப்பு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமையாக இருக்கிறது. இந்திய சூழ்நிலையில் கடந்த காலத்தில் பல நிபுணர் குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளன. தேசிய புள்ளியியல் முறைமையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு அந்தக் குழுக்கள் பல பரிந்துரைகளை அளித்துள்ளன. இந்தக் கோட்பாடுகளின்படியும், தேசிய புள்ளியியல் கமிஷனின் (NSC) பல்வேறு பரிந்துரைகளின் படியும் இந்த அமைச்சகம் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உண்மையில் இந்த அமைச்சகம் அதிகாரப்பூர்வ புள்ளியியல் விவரங்கள் குறித்த தேசியக் கொள்கை வரைவை (NPOS) உருவாக்கி, மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. அதன் மீது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், இந்தக் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

6. பெரும்பாலான பிற நாடுகளில் உள்ளதைப் போல, ஒன்றுபட்ட NSO உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு 2019 மே 23ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இந்த அமைச்சகத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி தரமான, நம்பகமான புள்ளியியல் தகவல்களை சேகரிக்க வேண்டும். இந்திய முதன்மை புள்ளியியல் அதிகாரி (CSI) மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் செயலாளர் பதவிகளை ஒன்றாக்கி NSO-வுக்கு தலைமை ஏற்கும்படி அரசு செய்திருக்கிறது. மாற்றம் குறித்து 2019 மே 23 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் மூலம் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

7 NSC-யின் தலைவரும் உறுப்பினர்களும் மூத்த நிபுணர்கள். தேசிய புள்ளியியல் முறைமையை மேம்படுத்தும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்களுடைய கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அமைச்சகம், முறைப்படி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது. NSC-யின் அந்தஸ்து, பங்கு மற்றும் செயல்பாடுகள் முன்பிருந்த நிலையிலேயே தொடர்கின்றன. (2019 மே 31 வெளியான செய்தி வெளியீடு இதைக் குறிப்பிடுகிறது.) NSC அமைப்பு சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்யவும், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளை உள்ளடக்கிய தேசிய புள்ளியியல் முறைமையை மேம்படுத்துவதற்கு ஒட்டுமொத்த அளவில் வழிகாட்டுதல் வழங்குவதை உறுதி செய்யவும், சட்டபூர்வ வரையறைகளை உருவாக்குவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

8. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) நடைமுறையைப் பொருத்தவரை, அமைச்சகம் பல விளக்கங்களை வெளியிட்டிருக்கிறது. விவரமறிந்த மற்றும் சமநிலையான கருத்துகளை வெளியிடுவதற்கு, இந்த விளக்கங்களை முறையாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உண்மையில், புதிய ஜி.டி.பி. நடைமுறைகளுக்கான விரிவான ஆய்வு நெறிமுறைகள் மற்றும் அணுகுமுறைகள் (புதிய நடைமுறைகள் மற்றும் முந்தைய நடைமுறைகள்), பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. 2019 மே 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட விரிவான செய்திக் குறிப்பு, ஜி.டி.பி. கணக்கிடுதலில் MCA கார்ப்பரேட் தகவல்கள் மற்றும் சேவைத் துறைகள் குறித்த NSS (74வது சுற்று) தொழில்நுணுக்க அறிக்கை குறித்து விவரிக்கிறது. MCA தகவல்களைப் பயன்படுத்துவது தொடர்பாக ஊடகங்களில் எழுப்பப்பட்ட விஷயங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்தச் செய்தி வெளியீடு அமைந்துள்ளது. சேவைகள் துறை குறித்த வருடாந்திர கணக்கெடுப்பு நடத்தும் போது எழக் கூடிய சவால்களைப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக என்.எஸ்.எஸ். கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அதில் விளக்கப்பட்டுள்ளது. பெரிய அமைப்பு ரீதியில் அதன் முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. பெரும்பாலான நிறுவனங்கள் MCA-விடம் ஆன்லைன் மூலம் சட்டபூர்வ கணக்குகளைத் தாக்கல் செய்திருப்பதாகவும், ஜி.டி.பி. கணக்கிடுதலில் அவை விடுபட்டுவிடவில்லை என்பதும் அதன் மூலம் கவனத்தில் கொள்ளப்பட்டது.  தவறான வகைப்படுத்தல் என்ற சர்ச்சைக்கும் அதில் விளக்கம் தரப்பட்டுள்ளது. கார்ப்பரேட் அடையாள எண் (CIN) என்பது தேசிய தொழிற்சாலை வகைப்படுத்தல் குறிமுறையில் உள்ளடக்கியதாக உள்ளது. பதிவு செய்யும் போது தெரிவித்த செயல்பாட்டில் இருந்து ஒரு கம்பெனி தனது செயல்பாடுகளை மாற்றிக் கொண்டாலும் வழக்கமாக அது அப்டேட் செய்யப்படுவது இல்லை. சேவைகள் துறைக்கான வருடாந்திர கணக்கெடுப்பை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மேற்கொள்வதற்கு முன்பு, இந்த விஷயங்கள் கவனித்து ஆராயப்பட்டு, கணக்கெடுப்பு நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டன. புதிய அடிப்படையை உருவாக்க ஜி.டி.பி. நடைமுறை உருவாக்கப்படும் போது இந்தத் தகவல்களும் பயன்படுத்தப்படும்.

9. ஜி.டி.பி. மதிப்பீடு செய்வது என்பது சிக்கல் நிறைந்த நடைமுறை என்பதும், முழுமையற்ற தகவல்கள் என்ற சூழ்நிலையில் இது செய்யப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். ஆய்வு நடைமுறை அணுகுமுறை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, இத் துறை நிபுணர்களை கலந்து ஆலோசித்து, சிக்கலான சாத்திய விஷயங்களையும், புள்ளியியல் அனுமானங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சொல்லப்போனால், இப்போதைய ஜி.டி.பி. நடைமுறையை விமர்சனம் செய்யும் பலரும், 2011-12 க்கான அடிப்படை நிலை திருத்தி அமைக்கப்பட்ட ஆய்வு நடைமுறைகளை விவாதித்து இறுதி செய்த பல்வேறு கமிட்டிகளில் இடம் பெற்றிருந்தார்கள். இந்தக் கமிட்டிகளின் முடிவுகள் கூட்டு முடிவாகவும், ஒரு மனதாகவும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பொருத்தமான அணுகுமுறை என்று பரிந்துரை செய்யப்படுவதற்கு முன்பு, கைவசம் இருந்த தகவல்கள் மற்றும் ஆய்வு நடைமுறை அம்சங்களை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான கலந்துரையாடல்களில், வழக்கமான நடைமுறைகளின்படி தொழில்முறை நிபுணர்களை இதில் பங்கெடுக்கும் வாய்ப்பை அமைச்சகம் உருவாக்கிக் கொடுத்தது. அவர்களின் பங்களிப்புகள் மூலமாக தேசிய புள்ளியியல் முறைமைக்கு அதிக பயன் கிடைத்தது. இதுமட்டுமின்றி, பன்னாட்டு நிதியம் அமைப்பின் (IMF) சிறப்பு தகவல் பகிர்தல் தரம் (SDDS) குறித்த விதிகளை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. மதிப்பீடுகளை வெளியிடுவதற்கு முன்னதாகவே தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜி.டி.பி. கணக்கிடுதலில் இரட்டை பணவீக்க நிலை பயன்பாடு குறித்து பன்னாட்டு நிதியம் விளக்கம் கேட்டிருந்தது. இப்போதைக்கு, கைவசம் உள்ள தகவல்கள் அவ்வாறு பயன்படுத்த உகந்தவையாக இல்லை என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது. இரட்டை பணவீக்க முறையை ஏற்பதால், ஜி.டி.பி. வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, வெவ்வேறு கட்டுரையாளர்கள் தங்களுடைய தனித்துவமான அனுமானங்களின் மூலம் வேறுபட்ட முடிவுகளை முன்வைத்திருக்கிறார்கள். இப்போதுள்ள நிலையில் இரட்டை பணவீக்கத்தை பயன்படுத்துவதை தேசிய கணக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் (ACNAS) குறித்த ஆலோசனைக் குழு ஏற்கவில்லை என்பதால் அவ்வாறு கூறியுள்ளனர். சொல்லப்போனால், முதலீட்டுச் செலவை குறைத்துக் காட்டுவதற்கு உற்பத்தியாளர் விலைக் குறியீட்டெண் (PPI) நடைமுறை வைத்துள்ள சில நாடுகள் மட்டுமே இரட்டை பணவீக்கத்தைப் பயன்படுத்துகின்றன. உற்பத்தியாளர் விலைக் குறியீட்டெண் இறுதி செய்வதற்கு ஆய்வு நடைமுறையை உருவாக்குவதற்கு தொழில், வணிகத் துறை அமைச்சகத்துடன் இணைந்து புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

10. மேலும், காலப்போக்கில் நிர்வாக மையங்கள் மூலமாக தகவல் சேகரிப்பு மேன்மை அடையும் போது,  ஜி.டி.பி. மதீப்பீடு மாற்றியமைக்கும் பணி நடைபெறும். இந்த மேம்பாடு நல்ல முறையில் ஆவணப்படுத்தப்படும். இதை மேம்படுத்துவதற்கு, துறை சார்ந்த தகவல்கள் பெறுவதிலும், தகவல் ஆதார முகமைகளில் தொடர்புடைய ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து தகவல்கள் பெறுவதிலும்  தொடர்ந்து மாற்றங்களை அமல்படுத்த வேண்டியது அவசியம். பெரிய அளவிலான முன்மாதிரி தொழில்நுணுக்கங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கு இது தேவைப்படுகிறது. அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் குறித்த தேசிய தகவல் கிடங்கு ஒன்றை உருவாக்கவும் அமைச்சகம் உத்தேசித்துள்ளது. பெரிய பொருளாதார விஷயங்கள் குறித்த தகவல்களின் தரத்தை இன்னும் மேம்படுத்துவதற்கு பெரிய தகவல் பகுப்பாய்வு அம்சங்களை உபயோகிக்க, தொழில்நுட்பத்தை இதன் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அனைத்து சீர்திருத்தங்களுமே தொடர்ந்து நடைபெறும் விஷயங்களாக இருப்பதால், மதிப்பீடுகளில் உள்ள சவால்கள் மற்றும் வரையறைகளை பயனாளர்களும், படிப்பாளர்களும் புரிந்து கொண்டு, உணர்ந்து கொள்ள வேண்டியது முக்கியம். இந்த சீர்திருத்தங்களைப் புரிந்து கொள்ளும் சமயத்தில், புதிய தகவல் தொகுப்புகள் மற்றும் கணக்கெடுப்பு முடிவுகள் இயல்பாகவே பயன்படுத்தப்படும் என்பதையும், புதியதைவிட பழைய நடைமுறை தான் சிறந்தது என்று கருத்து கூறுவது சரியானதாக இருக்காது என்பதையும் உணர வேண்டியது முக்கியம். புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள், நல்ல தகவல் தொகுப்புகளை உருவாக்கும். எதிர்காலத்தில் சிறந்த மதிப்பீடுகளைத் தயாரிக்கும். கணக்கீட்டுக்கான அடிப்படையாக இருக்கும் ஆண்டை மாற்றி அமைக்கும் போது இந்த விவரங்கள் ACNAS மூலம் விவாதத்திற்கு வைக்கப்படும்.

11. இப்போதைய ஜி.டி.பி. நடைமுறையில், தொழிற்சாலைகளுக்கான வருடாந்திர கணக்கெடுப்பில் (ASI) கணக்கிட்டபடி உற்பத்தித் துறையில் இருந்த அதே அளவுக்கு முறைசாரா உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்ற தவறான கருத்துக்கு விளக்கம் அளிப்பதாகவும் இது இருக்கிறது. முறை சாரா / அமைப்புசாரா உற்பத்தித் துறையில் அடிப்படை மதிப்பீடுகளை அறிவதற்கு, ASI-யில் பொருத்தமான வகையில் வரும் நிறுவனங்களின் (அதாவது உரிமையாளர், பங்குதாரர், இந்து ஒன்றுபட்ட குடும்பம்) வளர்ச்சி மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டனவே தவிர, ASI பிரிவில் வரும் அனைத்து நிறுவனங்களின் வளர்ச்சியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. மேலும், பங்குகள் மூலதன அடிப்படையில், மாதிரி முடிவுகளை உயர்த்துவதற்கு, இந்த அமைச்சகம் இப்போது இன்னும் பரந்த MCA தகவல் தொகுப்பை (செயல்பாட்டில் உள்ள சுமார் 7 லட்சம் கார்ப்பரேட்கள்) பயன்படுத்துகிறது. ஆனால் முந்தைய ஜி.டி.பி. நடைமுறையில் ரிசர்வ் வங்கியால் பகுப்பாய்வு செய்யப்பட்ட வெறும் 2,500 கார்ப்பரேட்களின் மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

12. தேசிய புள்ளியியல் முறைமை, தனது புள்ளியியல் செயல்பாடுகளில், சுதந்திரமான, தன்னிச்சையான  செயல்பாட்டு அந்தஸ்தைப் பெற்றுள்ளது. வெளியில் இருந்து நிர்பந்தங்கள் இருப்பதாகக் கூறப்படும் புகார்கள், ஒட்டுமொத்தமாக தேவையற்றவை. பல்வேறு புள்ளியியல் தகவல்கள் மற்றும் செயல்முறைகள் பற்றி தொடர்ந்து பயனாளர்களுக்கு தெரிவிப்பது இந்த அமைச்சகத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. இவை மக்களின் நன்மைக்கானவை. இந்த வகையில், சேகரிக்கப்பட்ட முதன்மையான தகவல்கள் அனைத்தும் இலவசமாக மக்கள் முன் வைக்கப் படுகின்றன. வெளிப்புற இரண்டாம் நிலை மற்றும் நிர்வாக ரீதியிலான தகவல் தொகுப்புகளைப் பொருத்தவரை, அவை பல்வேறு சட்ட விதிகளுக்கு உள்பட்டவையாக இருக்கின்றன. இன்னும் நுணுக்கமான விவரங்களைப் பெற விரும்பும் ஆராய்ச்சியாளர்கள், தொடர்புடைய தகவல் காப்பாளர்கள் முகமைகளை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


(Release ID: 1573887) Visitor Counter : 1283