பிரதமர் அலுவலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி வழங்கினார்

Posted On: 28 FEB 2019 6:41PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2016, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி வழங்கினார்.

விருதுகளை பெற்றவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். சமூகத்தின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். நமது அறிவியல் கல்வி நிறுவனங்கள், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும், உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

பிக் டேட்டா, மெசின் லேர்னிங், பிளாக் செயின் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய மற்றும் வளர்ந்துவரும் துறைகளிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை கணினி அமைப்பு முறையின் ஒழுங்கு நடவடிக்கைக்கான தேசிய இயக்கம் மேம்படுத்தும் என்று அவர் கூறினார். நான்காவது தொழில் புரட்சியின் பலன்களை பயன்படுத்திக் கொண்டு, உற்பத்தியிலும், புலமை மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் துறையிலும் உலகின் மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும்  என்று விஞ்ஞானிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

குறைந்த அளவிலான வளங்களை வைத்துக் கொண்டு, உலகத்தரமான சாதனைகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருவதாக பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். இந்த சூழலில், இஸ்ரோ-வின் வெற்றிகரமான மிகப்பெரும் விண்வெளித் திட்டங்கள், பல்வேறு சிஎஸ்ஐஆர் முயற்சிகள் மற்றும் இந்திய மருந்துப் பொருட்கள் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபரிமிதமான வளர்ச்சி ஆகியவற்றை பிரதமர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட அளவிலான சிந்தனையைத் தாண்டி, பல்வேறு துறைகளுக்கு இடையேயான நிலைப்பாட்டை மேற்கொள்வது குறித்து விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் சிந்திக்க  வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இதுபோன்ற நடவடிக்கைகள், பல்வேறு அறிவியல்பூர்வமான கேள்விகளுக்கும் வேகமான மற்றும் சிறந்த தீர்வுகளை கிடைக்கச் செய்யும் என்று பிரதமர் கூறினார்.

நாட்டின் புவிஅமைப்பு, ஜனநாயகம் மற்றும் தேவை ஆகியவற்றின் பலன்களை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசின் கொள்கைகள் வகுக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தவும், புத்தாக்கத்தை மேம்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன இயக்குநரான டாக்டர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் நினைவாக, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படும் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

*****


(Release ID: 1567040) Visitor Counter : 173