பிரதமர் அலுவலகம்

கங்கை இயக்கம் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 04 OCT 2018 12:41PM by PIB Chennai

கங்கை நதி தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த படகுப் பயணம் மேற்கொண்டுள்ள மலையேற்றத்திலும் அனுபவம் மிக்க நாற்பது ஆர்வலர்களின் குழு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (04.10.2018) சந்தித்தது.  எவரெஸ்ட் மலைச் சிகரத்தைத் தொட்ட இந்தியாவின் முதல் பெண்மணியான திருமதி. பச்சேந்திரி பால் தலைமையிலான இந்தக் குழுவில் எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறிய 8 மலையேற்ற வீர்ர்களும் இடம்பெற்றுள்ளனர்.

     மத்திய அரசின் “நமாமி கங்கா” பிரச்சாரத்தால் கவரப்பட்ட இந்தக் குழுவினர் தங்கள் பயணத்திற்கு “கங்கா இயக்கம்” எனப் பெயர் சூட்டியுள்ளனர்.  ஒருமாத காலம் நடைபெறவுள்ள இந்தப் படகுப் பயணக் குழுவினர் ஹரித்வாரிலிருந்து பாட்னா வரை நதியில் பயணம் செய்யவுள்ளனர்.  இந்தப் பயணத்தின் போது, பிஜ்னோர், நரோரா, ஃபாரூகாபாத், கான்பூர், அலகாபாத், வாரணாசி, பக்சார் ஆகிய இடங்களில் தங்கிச் செல்வார்கள்.  இந்த ஒன்பது நகரங்களில் தங்கும் போது இந்தக் குழுவினர் கங்கை தூய்மையைப் பராமரிப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தூய்மைப் பணிகளையும் மேற்கொள்வார்கள்.

     இந்தக் குழுவினருடன் கலந்துரையாடிய பிரதமர், இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ள குழு உறுப்பினர்களைப் பாராட்டினார்.  தூய்மையான, தடையில்லா வேகம் கொண்ட கங்கை நதி என்பது முக்கியமானது என சுட்டிக்காட்டினார்.  இவர்களின் விழிப்புணர்வு செயல்பாடுகளின் ஒருபகுதியாக இந்த நகரங்களைக் கடந்து செல்லும் போது, பள்ளிச் சிறார்களை சந்திப்பது அவசியம் என குறிப்பாக அவர் வலியுறுத்தினார்.    

    *****



(Release ID: 1548565) Visitor Counter : 166