பிரதமர் அலுவலகம்
பிரதமரின் முத்ரா திட்டப் பயனாளிகள், பிரதமருடனான கலந்துரையாடலின் போது தங்களது வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்
Posted On:
11 APR 2018 7:40PM by PIB Chennai
பிரதமரின் முத்ரா திட்டத்தின்கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயனடைந்த 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள், பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன், இன்று (11 04 2018) அவரது இல்லத்தில் கலந்துரையாடினர்.
திரு நரேந்திர மோடியுடனான இந்த அலுவல் சார்பற்ற கலந்துரையாடலின் போது, பெரும்பாலான பயனாளிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட முத்ரா கடனை பயன்படுத்தி தங்களது வாழ்க்கை எவ்வாறு மேம்பட்டது என்பது குறித்து எடுத்துரைத்தனர்.
2 லட்சம் ரூபாய் கடன் பெற்ற ஜார்கண்ட் மாநிலம் பொக்காரோவைச் சேர்ந்த பயனாளி திருமதி கிரண் குமாரி, தாம் சொந்தமாக பொம்மை மற்றும் அன்பளிப்பு பொருட்கள் கடை தொடங்கியது குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக, கிரண் குமாரியும், அவரது கணவரும், தங்களது வாழ்வாதாரத்திற்காக, தெருத்தெருவாக சென்று பொம்மை விற்பனை செய்து வந்தனர். முத்ரா கடனுதவியைப் பெற்ற பிறகு, தாம் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் என்பதை திருமதி கிரண் குமாரி நிரூபித்துள்ளார்.
சூரத்தைச் சேர்ந்த திருமதி முனிராபானு ஷபீர் ஹுசேன் மாலிக் முத்ரா திட்டத்தின்கீழ், ரூ. 1.77 லட்சம் கடன் பெற்றார். இவர், இலகு ரக வாகனப் பயிற்சி பெற்று, ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவதன் மூலம், தற்போது மாதந்தோறும் ரூ. 25,000 சம்பாதிப்பது குறித்து எடுத்துரைத்தார்.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த திரு. பி. சிஜேஷ், வெளிநாட்டில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்தியா திரும்பிய அவர், மருத்துவப் பிரிவு ஒன்றில் விற்பனை மேலாளராக பணியாற்றினார். பின்னர், முத்ரா திட்டத்தின்கீழ், ரூ. 8.55 லட்சம் கடனுதவி பெற்றதன் பயனாக, மூலிகை பல்பொடி நிறுவனம் தொடங்கியது குறித்து பிரதமரிடம் உற்சாகத்துடன் எடுத்துரைத்தார். தாம் தயாரித்த பல்பொடியையும் அவர் பிரதமரிடம் வழங்கினார்.
தெலங்கானாவை சேர்ந்த திரு. சாலேஹூண்டம் கிரிதர் ராவ் தனது தொழில் முனைவுத்திறன் கதையை பிரதமருடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு ரூ.9.10 லட்சம் கடன் கிடைத்ததாகவும் அதனை தனது டை காஸ்டிங் மற்றும் வார்ப்பட தொழிலை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தியதாகவும் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் காத்வா மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. வீணா தேவி ஒரு நெசவாளர். அவர் முத்ரா திட்டத்தில் ரூ.1 லட்சம் கடனாக பெற்றார். தனது பகுதியில் அவர் தற்போது பாஷ்மினா சால்வைகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளார். இன்று அவர் பிரதமருக்கு தனது கலந்துரையாடலின் போது ஒரு பாஷ்மினா சால்வையை வழங்கினார்.
டேராடூனில் இருந்து வந்திருந்த திரு.ராஜேந்திர சிங் ஒரு முன்னாள் படை வீர்ர். அவர் தனது துடைப்ப உற்பத்தி பற்றி எடுத்துரைத்தார். இந்த தொழிலை முத்ரா திட்டத்திலிருந்து பெற்ற ரூ. 5 லட்சம் கடன் தொகையிலிருந்து நிறுவியதாக அவர் கூறினார். இந்த தொழிலை வெற்றிகரமாக அமைத்து நடத்தி வருவதுடன் வேறு சிலருக்கும் வேலைவாய்ப்புக்களை அவரால் உருவாக்க முடிந்தது.
சென்னையை சேர்ந்த திரு. டி.ஆர்.சஜீவன் ரூ.10 லட்சம் முத்ரா கடனாக பெற்றார். வார்ப்பட தொழிற்சாலைகளுக்காக வேலைகளை அவர் தனது தொழிற்சாலை மூலம் செய்து வருவதாக விளக்கினார்.
ஜம்முவில் இருந்து வந்திருந்த திரு. சதீஷ்குமார் ரூ. 5 லட்சம் கடன் பெற்றார். முன்பு வேலை ஏதும் இல்லாமல் இருந்த அவர் தற்போது எஃகு பொருட்கள் உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். இன்று பிரதமருடன் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகரைச் சேர்ந்த திரு. விப்லவ் சிங், ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினார். முத்ரா கடன் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் கடன் பெற்று, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உர விற்பனை தொடர்பான சொந்தத் தொழிலை அவரால் தொடங்க முடிந்தது. தற்போது பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்க அவரால் முடிந்துள்ளது. அவர் தனது அனுபவத்தை பிரதமருடன் இன்று பகிர்ந்து கொண்டார்.
மேலும் பல்வேறு பயனாளிகளும் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
முத்ரா கடன் மூலம் பயனடைந்த தொழில்முனைவோரின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். பிரதமரின் முத்ரா திட்டத்தின் மூலம் இதுவரை 11 கோடி பேர் பயனடைந்து இருப்பதாக அவர் தெரிவித்தார். மக்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று பிரதமர் கூறினார். வேலைவாய்ப்பை பொதுத்துறையோ அல்லது தனியார் துறையோதான் உருவாக்க முடியும் என்ற பழமையான எண்ணம் இதுவரை இருந்து வந்தது என்று அவர் கூறினார். தனிநபருக்கு வாழ்வாதாரத்தையும், சுய வேலைவாய்ப்பையும் அளித்துள்ள இந்தத் திட்டம், தனிநபர் துறையை மேம்படுத்த உதவியுள்ளது.
பிரதமருக்கும் முத்ரா பயனாளிகளுக்கும் இடையே சாதாரண முறையில் நடந்த இந்தக் கலந்துரையாடல் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை இணையமைச்சர்கள் திரு.பொன்.ராதாகிருஷ்ணன், திரு.ஷிவ் பிரதாப் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
(Release ID: 1528745)
Visitor Counter : 209