சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள இந்தியா, யானைகள் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்துகிறது: மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்
Posted On:
12 AUG 2023 3:03PM by PIB Chennai
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல்லுயிர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார். உலக யானைகள் தினத்தை முன்னிட்டு புவனேஸ்வரில் இன்று (12-08-2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்று தெரிவித்தார். யானை இனத்தின் நீண்டகால பாதுகாப்பிற்கான முக்கிய இடமாக இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார். யானைகள் பாதுகாப்பை வலுப்படுத்த சம்பந்தப்பட்ட உள்ளூர் மக்களின் பங்கேற்பு முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். மனித நலன் மற்றும் யானைகள் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்று திரு பூபேந்தர் யாதவ் கூறினார்.
யானைகள் மீது ரயில்கள் மோதும் முக்கியமான பிரச்சினையைத் தீர்க்க சுற்றுச்சூழல் அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மாநில வனத் துறைகள் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் போன்றவை மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகளை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, யானைகளின் வாழ்விடங்கள் வழியாக செல்லும் நாட்டின் ரயில்வே கட்டமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிடடார். இந்த முக்கியமான பகுதிகளில், யானைகள் மீதான ரயில் மோதல்களைத் தடுக்க பன்முக உத்திகள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, மனித - யானை மோதலைத் தடுப்பது தொடர்பாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். உலக யானைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் யானைகள் வழித்தடங்கள் குறித்த அறிக்கையையும் அமைச்சர் வெளியிட்டார்.
யானைகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு கஜ் கவுரவ் விருதுகளையும் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திரு. மத்திய சுற்றுச் சூழல் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் செளபே மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
**************
ANU/AP/PLM/DL
(Release ID: 1948108)
Visitor Counter : 171