கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட ‘தி அன்சீன் ஹோலி ரிவர் - சரஸ்வதி’ (The Unseen Holy River – Saraswati) என்ற இந்தி ஆவணப்படத்தின் இயக்குநர் திரு பாஸ்கர் விஸ்வநாதன், தயாரிப்பாளர் திரு அபினவ் எம். ஜெயின் ஆகியோர் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். பண்டைய மரபுகளையும் நவீன அறிவியல் ஆய்வுகளையும் இணைக்கும் வகையில், டாக்டர் சுபாஷ் சி. சிங்கின் அறிவியல் ஆய்வுகள், புவியியல் தரவுகள், வேத காலக் குறிப்புகளின் அடிப்படையில் சரஸ்வதி நதி குறித்த வரலாற்றை இப்படம் ஆராய்கிறது. விரிவான ஆய்வுத் தரவுகளை அதன் அடிப்படைத் தன்மை மாறாமல், சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் காட்சிப்படுத்துவது முக்கிய சவாலாக இருந்ததாக இயக்குநர் திரு பாஸ்கர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை நதிகளைக் கண்டதன் மூலம், மூன்றாவது நதியான சரஸ்வதி குறித்து ஆராயும் ஆர்வம் ஏற்பட்டதாகத் தயாரிப்பாளர் திரு அபினவ் எம். ஜெயின் குறிப்பிட்டார். நிலத்தடி நீர் கட்டமைப்பு குறித்து ரூர்க்கியில் உள்ள தேசிய நீரியல் நிறுவனம் மேற்கொண்ட ஐசோடோப்பு ஆய்வுகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. புவியியல் ஆய்வுகள், பண்டைய பாரம்பரியம், நவீன திரைப்பட உருவாக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தின் முக்கியப் பகுதியை அறிவியல் பார்வையில் இப்படம் எடுத்துரைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341895®=3&lang=1
****
SK/SE/SH