கோவாவில் 2026 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் வடகிழக்கு இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் மற்றும் தனித்துவமான வாழ்வியலைப் பிரதிபலிக்கும் நான்கு திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு முழுநீளத் திரைப்படங்களும், ஆவணப்படம் மற்றும் குறும்படம் உள்ளிட்ட பிற திரைப்படங்கள் பிரிவில் இரண்டு படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
முழுநீளத் திரைப்படப் பிரிவில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இயக்குநர் துயு தபியோ இயக்கிய ‘உரும்’ என்ற உளவியல் சார்ந்த திகில் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்தியன் பனோரமா பிரிவில் இடம்பெறும் முதல் நிஷி மொழித் திரைப்படம் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் திரையிடப்படுகிறது. இத்துடன், அந்தரா ஜி ஜி சௌத்ரி இயக்கிய ‘சூர்ஜ்யமுகி’ என்ற அசாமிய முழுநீளத் திரைப்படமும் உலக அளவிலான முதல் திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளது.
ஆவணப்படம் மற்றும் குறும்படம் உள்ளிட்ட பிற திரைப்படங்கள் பிரிவில், விருது பெற்ற இயக்குநர் ஐமி பருவா இயக்கிய 30 நிமிட அசாமிய ஆவணப்படமான ‘ரெட் கார்பெட்’, அசாமின் கார்பி அங்லாங் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைத்தறி நெசவாளர் ஒருவர் கேன் சர்வதேச திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளம் வரை சென்ற பயணத்தை விவரிக்கிறது. மற்றொரு படைப்பான, ராஜ்தீப் சௌத்ரி இயக்கிய ‘சலோ இந்தியா வித் எரிக் ஜி - மிசோரம்’ என்ற 48 நிமிட ஆங்கில ஆவணப்படம், முன்னாள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் ஒல்லரன்ஷா மிசோரமில் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக அம்மாநிலத்தின் மேம்பட்ட எழுத்தறிவு விகிதம், கால்பந்து கலாச்சாரம் மற்றும் வணிகம், கல்வி, சமூகத் தலைமைத்துவம் ஆகிய துறைகளில் மகளிர் ஆற்றி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துரைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337459®=3&lang=1
***
PD/SE/GS