இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 3:10PM by PIB Chennai
வங்க கடலில் உருவாகும் அர்னாப் புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன் தலைமையில் தேசிய அவசரகால மேலாண்மைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விளக்கம் அளித்த இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர், கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு திசை நோக்கி நகர்ந்து அர்னாப் புயலாக வலுவடைந்துள்ளதாகக் கூறினார். இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இப்புயல் கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. இது ஸ்ரீ விஜயபுரம் (அந்தமான் தீவுகள்) நகரிலிருந்து வடமேற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப்பிரதேசம்) கிழக்கு தென்கிழக்கே 650 கிலோ மீட்டர் தொலைவிலும் காக்கிநாடாவிலிருந்து (ஆந்திரப்பிரதேசம்) கிழக்கு தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும் மசூலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப்பிரதேசம்) கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவிலும் பாபட்லாவிலிருந்து (ஆந்திரப்பிரதேசம்) கிழக்கே 910 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.
இப்புயல் அக்டோபர் 27-ம் தேதி வரை மேற்கு-வடமேற்கு திசையிலும் அதன்பிறகு வடமேற்கு திசையிலும் நகர்ந்து ஆந்திரப்பிரதேச கடற்கரை நோக்கி செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2026 அக்டோபர் 28 அன்று முற்பகலில் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே ஆந்திரப்பிரதேசம், ஏனம் கடற்கரைப்பகுதிகளில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது இது மிக அதிதீவிரப் புயலாக இருக்கும் என்றும் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அது 140 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கத்தால் தெலங்கானா, தெற்கு ஒடிசா, தெற்கு,மத்திய சட்டீஸ்கர், கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் மாவட்டங்கள் பாதிக்கப்படலாம்.
இதையடுத்து போதிய முகாம்களும், மீட்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அவை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
வங்கக் கடலில் தென்மேற்குப் பகுதி அதையொட்டி மத்தியப்பகுதி ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, ஏனம் (புதுச்சேரி), கடலோரப்பகுதிகளுக்கு 2026 அக்டோபர் 26 முதல் 29-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலுக்குச் சென்றவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
ராணுவம், விமானப்படையின் மீட்பு, நிவாரண குழுக்களும் இந்திய கடலோர காவல்படை தங்களுடைய கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றுடன் தயார் நிலையில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328434®=3&lang=1
***
SS/IR/SM/SH