பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த துடிப்புமிக்கக் கிராமத் திட்டம் 2026-ல் பங்கேற்றவர்களின் சிறப்பான பணியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUL 2026 10:27PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த துடிப்புமிக்க கிராமத்திட்டம் 2026-ல் பங்கேற்றவர்களுடன் இன்று காணொளிக் காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், லடாக் ஆகிய பகுதிகளின் எல்லைப்புறக் கிராமங்களைச் சேர்ந்த இளம் மை பாரத் தன்னார்வலர்கள் தங்கள் அனுபவங்களைக் பகிர்ந்துகொண்டனர். மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள், பொதுச்சேவைகள், மகளிர் தலைமையிலான வளர்ச்சி, சுற்றுலா, சமூக பங்கேற்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கலந்துரையாடல் எடுத்துக்காட்டியது. நாடு முழுவதும் உள்ள 245 மாவட்டங்களிலிருந்து 5000-க்கு மேற்பட்ட மை பாரத் தன்னார்வலர்கள் இந்நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி வாயிலாக இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியை அறிமுகம் செய்துவைத்து பேசிய தாதர், நாகர் ஹவேலி, டாமன், டையூ பகுதிகளைச் சேர்ந்த மை பாரத் தன்னார்வலர் திரு திவ்யான்ஷ் ஜோஷி, வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல், வளர்ச்சியடைந்த இந்தியா இளையோர் நாடாளுமன்றம், பட்ஜெட் திருப்புமுனை, வழிகாட்டுதல், தன்னார்வ திட்டங்கள் உள்ளிட்ட முன்முயற்சிகளை விவரித்தார். மை பாரத் முன்முயற்சிகளால் 2.30 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயன் அடைந்துள்ளதாகவும் தேசிய அளவில் நடைபெற்ற விநாடி வினா நிகழ்ச்சியில் 2.86 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றதன் மூலம் எல்லைப்புறக் கிராமங்களுக்குச் செல்ல 403 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இமாச்சலப்பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள லியோ கிராமத்திற்கு சென்றது குறித்து குறிப்பிட்ட அவர், அங்குள்ள மக்கள், மூத்த குடிமக்கள், பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடல்கள், உள்ளூர் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல், விளையாட்டு, கலாச்சார நடவடிக்கைகள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். தன்னார்வலர்கள் கார்கில் போர் நினைவிடத்தில் நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்தியதாகவும், வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்கு பார்வைக்கு உறுதியாக இருந்து தங்கள் அனுபவங்களைப் பிரதமரிடம் சமர்பிப்பார்கள் என்று கூறினார்.

தாத்ரா, நாகர் ஹவேலி, டையூ, டாமன் பகுதியைச் சேர்ந்த மை பாரத் தன்னார்வலர் செல்வி நிகிதா பிரவீன் சோலங்கி, மை பாரத் விநாடி வினா மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதால் கின்னார் மாவட்டத்தில் உள்ள தார் சாங்கோ நிச்லா கிராமத்திற்கு முதன்முறையாக சுதந்திரமாகப் பயணம் மேற்கொள்ள உதவியாக கூறினார். கிராமத்தினர் அளித்த அன்பான வரவேற்பு தமது நம்பிக்கையை வலுப்படுத்தியதுடன் மகளிர் மீது மாறி வரும் சமூக மனப்பான்மையையும் பிரதிபலித்ததாக தெரிவித்தார். பஞ்சாயத்து பிரதிநிதிகள், விவசாயிகள், மூத்த குடிமக்கள், குழந்தைகளுடனான தனது உரையாடல்கள் மூலம் கிராமப்புறப் பெண்களின் பல்வேறு தரப்பட்ட பொறுப்புகளைக் கண்டதாக அவர் கூறினார். அத்துடன் தமது எண்ணங்களுக்கு மாறாக தரமான சாலைகள், சீரான மின்சாரம், குடிநீர் இணைப்புகள், டிஜிட்டல் இணைப்புகள் ஆகிய வசதிகளையும் தான் கண்டதாக அவர் தெரிவித்தார்.

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289726&reg=48&lang=2

(Release ID: 2289726)

***

TV/IR/SM/SH    


(வெளியீட்டு அடையாள எண்: 2324479) வருகையாளர் எண்ணிக்கை : 17