சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருத்துவச் சீட்டு அடிப்படையிலான மருந்துகளின் விளம்பரங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் விரிவுபடுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 11:10AM by PIB Chennai

மருத்துவச் சீட்டு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் மருந்துகள் தொடர்பான விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், மருந்துகளுக்கான விதிகள், 1945-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்தத் திருத்த முன்மொழிவின்படி, ஹெச், ஹெச்1, எக்ஸ் ஆகிய பட்டியல் வகைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை விளம்பரப்படுத்துவதற்கு மத்திய அரசின் முன் அனுமதியைக் கட்டாயம்  பெற வேண்டும் என்ற தற்போதைய விதியை, மருந்துகளின் விற்பனை, விநியோகத்திற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கட்டமைப்பின் கீழ், மத்திய அரசின் முன் அனுமதியின்றி குறிப்பிட்ட பட்டியல் வகைகளில் இடம்பெற்றுள்ள மருந்துகளை உற்பத்தியாளர்கள் விளம்பரப்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றின் சில்லறை, மொத்த விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள மருந்து நிறுவனங்களுக்கான விதிகள், இதில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், மருந்துகளுக்கான விதிகள், 1945-ன் விதி 65-ன் கீழ் துணை விதி (22)-ஐச் சேர்க்க அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், மருந்துகளை விற்பனை செய்வதற்கும், இருப்பில் வைத்திருப்பதற்கும், காட்சிப்படுத்துவதற்கும், விநியோகிப்பதற்கும் உரிமம் பெற்றவர்களுக்கும், விளம்பரக் கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இதன்படி, ஹெச், ஹெச்1, எக்ஸ் ஆகிய பட்டியல் வகைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் விளம்பரப்படுத்தக் கூடாது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய சில நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள், மனநலத்தைப் பாதிக்ககக்கூடிய மருந்துகள், மருத்துவச் சீட்டு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் மருந்துகள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321172&reg=48&lang=2

***

SS/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2321297) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Malayalam