தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2047-ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு இளைஞர்கள் தலைமையேற்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 4:06PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய பங்களிக்கும் வகையில் நாட்டின் இளைஞர்கள் தங்களுடைய திறன்கள், படைப்பாற்றல், புதுமையான சிந்தனை ஆகியவற்றை பயன்படுத்துமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் அழைப்பு விடுத்துள்ளார். நொய்டாவில் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர், வளர்ந்துவரும் வாய்ப்புகளுக்காக நாட்டின் இளைஞர்களைத் தயார்படுத்துவதில் தரமான கல்வி, வாழ்நாள் கற்றல், திறன் மேம்பாடு, தொழில்முனைவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நாட்டைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் முக்கிய பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டிய டாக்டர் எல் முருகன், வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வையையொட்டியப் பயணத்தில் இளைஞர்களின் சக்தி குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்பது தொலைநோக்குப் பார்வையாக மட்டுமின்றி, இளைஞர்கள் வடிவமைக்கும் ஒரு எதிர்காலம் என்று அவர் குறிப்பிட்டார். கல்வி, திறன், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, தொழில்முனைவு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சூழலின் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்வியை மேலும் நெகிழ்வுத் தன்மையுடையதாகவும், பல்துறை சார்ந்ததாகவும், திறன் சார்ந்ததாகவும் மாற்றுவதில் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார். விரைவாக மாறிவரும் உலகில், கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்றும் தனிநபர்கள் தங்களுடைய பணிக்காலத்தில் பல்வேறு சூழல்களில் புதிய திறன்களையும், தகுதிகளையும் பெற இது உதவும் என்றும் அவர் கூறினார்.

வேலைவாய்ப்புகள் குறித்து பேசிய அமைச்சர், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தி, சேவைகள், தொழில்முனைவு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டினார். ஆர்பிஐ – கேஎல்இஎம்எஸ் தரவின்படி, நாட்டில் 2014-15-ம் ஆண்டு முதல் 2023-24-ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலக்கட்டத்தில் சுமார் 17.1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320751&reg=3&lang=1

***

TV/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2320845) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati