பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் தலைமையில் நீராதாரம் தொடர்பான தேசியத் துறைசார் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2026 8:56PM by PIB Chennai

ஜல் சக்தி அமைச்சகம் சார்பாக நடைபெற்ற, நீராதாரம் தொடர்பான இரண்டு நாள் தேசிய அளவிலான துறைசார் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். 'பாரத குழு' (டீம் இந்தியா) என்ற உணர்வை வலுப்படுத்துதல், கூட்டுறவு கூட்டாட்சி முறையை மேம்படுத்துதல், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் தேசிய முன்னுரிமைகளில் கூட்டுப் பொறுப்புணர்வை வளர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் பிரதமர் முன்னெடுத்த துறைசார் உச்சிமாநாடுகளின் வரிசையில் இது முதலாவதாகும். இந்தியாவின் நீராதாரம் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆழமாக விவாதிப்பதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதங்களைப் பாராட்டிய பிரதமர், இந்த மாநாட்டில் எழுந்த செயல்முறைக்கு உகந்த மற்றும் காலக்கெடுவுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை, தொடர்ச்சியான மறுஆய்வு, கற்றல் செயல்முறையின் மூலம் செயல்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் எதிர்கால நீர் தேவைகள் உள்ளிட்ட நகரமயமாக்கலால் ஏற்படும் சவால்கள் குறித்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காகவும் சிந்தனை முகாம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு அவர் பரிந்துரைத்தார். நீர் சேமிப்புத் தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன், இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் திறமையான தீர்வுகளை உருவாக்கி அவற்றை விரிவுபடுத்தும் வகையில், உலகளாவிய சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட சிறப்பு கண்காட்சிகள், பயிலரங்குகளை நடத்துவது பற்றியும் அவர் யோசனை தெரிவித்தார்.

மக்களின் பங்கேற்பை வலியுறுத்திய பிரதமர், அவர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த 'நீர் பெருவிழா’ திட்டத்தை முன்னெடுக்கப் பரிந்துரைத்தார். தூர்வாரும் பணியை ஒரு வழக்கமான திட்டமாக மாற்றுவதற்கும், அதற்கான தெளிவான அளவுகோல்களையும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார். அணைப் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் தீவிரமான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது, பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது, கல்விப் பாடத்திட்டங்களில் பொருத்தமான முறையில் அவற்றை இணைப்பதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நீர் துறை சார்ந்த தரவுகளை ஒருங்கிணைத்து, முறையாக நிர்வகித்து, பகுப்பாய்வு செய்து, திறம்படப் பயன்படுத்துவதன் மூலம் வலுவான நீர் தரவு நிர்வாகத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் அறிவுறுத்தினார். தரவுகளைச் சேகரிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் ஒரு சீரான வடிவத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அவர் பரிந்துரைத்தார். மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயம் தொழில்துறை தேவைகளுக்குப் பொருத்தமான முறையில் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க, முன்கூட்டிய மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடலை அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2306122&reg=3&lang=1

***

SS/BR/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2319527) வருகையாளர் எண்ணிக்கை : 25