குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புதுதில்லியில் நடைபெறும் 5-வது கௌடில்யா பொருளாதார மாநாடு - குடியரசுத் துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 OCT 2026 11:56AM by PIB Chennai
‘மாற்றங்கள் நிறைந்த காலத்தில் மீள்திறன்’ என்ற கருப்பொருளில் புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 5-வது கௌடில்யா பொருளாதார மாநாட்டில், குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (03.10.2026) தொடக்கவுரை ஆற்றினார். கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள், வணிகத் தலைவர்கள், பிற முக்கியப் பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், விரைவான உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில், மீள்திறன் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
சிறந்த கொள்கை வகுப்பானது கள யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், கொள்கைகள் நெகிழ்வானதாகவும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாற்றங்கள் நிறைந்த காலங்களில், முடிவெடுக்கும் திறன் என்பது ஒருமித்த கருத்தில் பொதிந்திருக்க வேண்டும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார். விவாதமும் கலந்துரையாடலும் ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கம் என்றாலும், அவை இறுதியில் பரவலான ஏற்பைப் பெறும் முடிவுகளுக்கே வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாநிலங்களவையின் தலைவர் என்ற முறையில், சுதந்திரமான, வெளிப்படையான விவாதம் ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது என்றும், அதே சமயம் உரிமைகளும் கடமைகளும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயகமும் வளர்ச்சியும் ஒருங்கே இணைந்து செல்ல முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றமும் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஒருமித்த கருத்தை உருவாக்குவது பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அதிக நிலைத்தன்மையை அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த அனுபவம், 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு முக்கிய அடித்தளத்தை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
ஆகஸ்ட் 2026 நிலவரப்படி 59 கோடிக்கும் அதிகமான ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி பதிவுகள் 2017-ல் சுமார் 66.5 லட்சத்திலிருந்து மே 2026-ல் 1.65 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
25 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதை ஒரு வரலாற்றுச் சாதனை என்று கூறிய அவர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒவ்வொரு மாநிலமும், மாவட்டமும், கிராமமும் சமமான பங்காளிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
5-வது கௌடில்யா பொருளாதார மாநாட்டில் நடைபெறும் கலந்துரையாடல்கள், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் தேசிய முயற்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318564®=48&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318626)
வருகையாளர் எண்ணிக்கை : 8