குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கல்வி நாட்டிற்கும், சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் – குடியரசுத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 4:39PM by PIB Chennai

குஜராத்தின் வதோதராவில் உள்ள பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைகழகத்தின் 75-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், கடந்த 75 ஆண்டுகளாகப் பல்வேறு அறிவுசார் துறைகளை ஒருங்கிணைத்து இப்பல்கலைக்கழகம் முன்னேறுவதாகக் குறிப்பிட்டார்.

முக்கியமான சவால்களை எதிர்கொள்ளப் பல்துறை சார்ந்த அணுகுமுறை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இத்திசையில் தொடர்ந்து விழிப்புடனும் துடிப்புடனும் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

பட்டம்பெறும் மாணவர்கள் தங்கள் கல்வி, அறிவு ஆகியவற்றின்  நோக்கத்தைப் பற்றிச் சிந்திக்குமாறு குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டார். நாடு, சமூகத்தின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துத் தங்கள் தொழில் துறையில் முன்னேறும்போது, ​​அவர்களும் முன்னேற்றம் காண்பார்கள் என்றும், அந்த முன்னேற்றம் அவர்களுக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

நாடு, சமூகம் ஆகியவற்றிக்குப் பயனளிக்கும் வகையில் அமையும் கல்வியே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். பொறியாளர்களாக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும், மருத்துவர்களாக, மருத்துவத் துறையை வெறும் தொழிலாக மட்டும் பார்க்காமல் ஒரு சேவையாகக் கருத வேண்டும், விஞ்ஞானிகளாக, மனித சமூக  நலன் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும், கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்களாக, சமூகத்தின் உணர்திறனை வளப்படுத்த வேண்டும், தொழில்முனைவோராக, வெறும் செல்வத்தை மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும், ஆசிரியர்களாக பாரம்பரியம், முன்னேற்றம் ஆகிய இரண்டையும் பின்பற்றும் இளம் தலைமுறையை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்,  பொது வாழ்வில், தங்கள் பதவியை அதிகாரத்தின் அடையாளமாகப் பார்க்காமல் ஒரு பொறுப்பாகக் கருத வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313938&reg=3&lang=1

***

TV/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316651) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Malayalam