நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நுகர்வோர்களின் நலன் கருதி முக்கிய சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
24 SEP 2026 12:43PM by PIB Chennai
சர்வதேச சமையல் எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட கடும் உயர்வினால் உருவாகக்கூடிய பணவீக்க அழுத்தங்களைக் குறைக்கவும், உள்நாட்டு சமையல் எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கவும், இறக்குமதி செய்யப்படும் முக்கிய சமையல் எண்ணெய்கள் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
அதன்படி, கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகவும், கச்சா சோயாபீன் எண்ணெய், கச்சா பாமாயில் மீதான அடிப்படை சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களுக்கு இடையேயான 19.25 சதவீத இறக்குமதி வரி வேறுபாட்டைப் பராமரிக்கும் அதே சூழலில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களுக்கான அடிப்படை சுங்க வரியையும் மத்திய அரசு ஒரே நேரத்தில் குறைத்துள்ளது.
சர்வதேச சமையல் எண்ணெய் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அதன் காரணமாக உள்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் சில்லரை விலைகளில் ஏற்படும் உயர்வைக் கருத்தில் கொண்டு, வரி சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் செலவில் இறக்குமதி வரிகள் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதால் அவை உள்நாட்டு சந்தை விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
கச்சா சமையல் எண்ணெய்கள் மீதான அடிப்படை இறக்குமதி வரிக் குறைப்பு, அவற்றின் இறக்குமதி விலையைக் குறைத்து உள்நாட்டு விநியோக முறை மூலம் அந்தப் பயனை நுகர்வோருக்குக் கொண்டு சேர்ப்பதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நடவடிக்கை, உணவுப் பொருட்களின் விலை, பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்கு ஏற்ப நுகர்வோருக்கு நிவாரணம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இறக்குமதி வரியைக் குறைத்ததன் மூலம் அதன் பயன்கள் நுகர்வோர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று சமையல் எண்ணெய் சங்கங்களுக்கும், தொழில்துறையினருக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314297®=3&lang=1
***
SS/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314515)
வருகையாளர் எண்ணிக்கை : 24