உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 12:54PM by PIB Chennai

அன்பான நாட்டு மக்களே,

இந்தி தின நன்னாளில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

நமது நாடு, மொழிப் பன்மையும் வளமான பண்பாட்டு மரபும் கொண்ட ஒரு தனித்துவமான பூமி. நம்மிடம் வெவ்வேறு மொழிகள் இருப்பது ஒரு பலவீனம் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் இத்தனை மொழிகள் இருப்பதே நமது மிகப்பெரிய பலம் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு மொழியும் தனக்கென ஒரு வரலாற்றையும், நாட்டுப்புற மரபுகளையும், ஒரு தனித்துவமான உலகப் பார்வையையும் கொண்டுள்ளது. இவை நமது இளைய தலைமுறையினரின் விழுமியங்களையும் பண்பாட்டு நெறிமுறைகளையும் முன்னோக்கி எடுத்துச் செல்லவும் உதவுகின்றன. இந்த மொழிப் பன்மைத்தன்மை, இந்தியாவை வரையறுக்கும் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற உணர்வை வலுப்படுத்துகிறது. மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் சுய உணர்வாகும்.

இந்தப் பன்முகத்தன்மைக்கு மத்தியில், இந்தி ஒரு உரையாடல், தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு மொழியாக முக்கியப் பங்காற்றியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரிவுகள், சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்துள்ளது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் மரியாதை அளித்து, அவற்றைப் பாதுகாத்து, மேம்படுத்தும் அதே வேளையில் இந்தியின் வளர்ச்சி முன்னேறும்போதுதான், அது உண்மையாகவே அர்த்தமுள்ளதாக அமையும். இந்தி எந்த மொழிக்கும் போட்டியாளர் அல்ல. மாறாக, அது இந்திய மொழிகளிடையே ஒரு நெருக்கத்தையும் உரையாடல் உணர்வையும் வளர்ப்பதற்கும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய இணைப்பாகும். இந்த உண்மைக்கான மிக அழகான சான்று நமது சொந்த வரலாற்றிலேயே உள்ளது. சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், அவர் 'சத்யார்த்த பிரகாஷ்' நூலை இந்தியில் எழுதினார். மகாத்மா காந்தி 1918-ல் சென்னையில் தட்சிண பாரத இந்தி பிரச்சார சபையை நிறுவினார் . நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வங்காளம் பேசுபவராக இருந்தபோதிலும், அவர் இந்தியை ஆசாத் ஹிந்த் ஃபௌஜின் தகவல் தொடர்பு மொழியாக ஏற்றுக்கொண்டு , தேசத்திற்கு 'ஜெய் ஹிந்த்' என்ற எழுச்சியூட்டும் முழக்கத்தை வழங்கினார் . இவ்வாறு, பல்வேறு மொழிப் பின்னணியைச் சேர்ந்த மக்கள், இந்தியை மக்களிடையே ஒரு தகவல் தொடர்பு மொழியாக மாற்றுவதில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத இந்த மாபெரும் ஆளுமைகளின் அளப்பரிய பங்களிப்பு, நம் அனைவருக்கும் உத்வேகத்தின் ஊற்றாகத் திகழ்கிறது.

என் தாய்மொழியும் குஜராத்திதான். ஆனால் நான் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அங்குள்ள சாமானிய மக்களுடன் என்னை நேரடியாக இணைக்கும் மொழி இந்திதான். இந்தியின் பயணத்தை நாம் உற்று நோக்கினால், அதில் ஒட்டுமொத்த தேசத்தின் பயணமும் பிரதிபலிப்பதைக் காணலாம்.

மற்ற அனைத்து இந்திய மொழிகளுடன் சேர்ந்து இந்தி மொழியும், சமூக விழிப்புணர்வு, தேசிய ஒற்றுமை, சுதந்திரம் ஆகிய கருத்துக்களை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது. இந்த வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 1949 செப்டம்பர் 14 அன்று அரசியலமைப்புச் சபை இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்டது. இருப்பினும், சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு முரண்பாடும் உருவானது. நாம் அரசியல் சுதந்திரம் அடைந்த அதே வேளையில், நமது சொந்த மொழி, நமது சொந்த கலாச்சாரம், நமது சுயமரியாதை ஆகியவற்றின் விழுமியங்கள் ஓரங்கட்டப்பட்டன.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், செங்கோட்டையிலிருந்து, காலனித்துவ மனப்பான்மையிலிருந்து தேசம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும், இதில் மொழிக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு என்றும் அழைப்பு விடுத்தார்.

இப்போது, தேசிய கல்விக் கொள்கையானது தாய்மொழியை கல்வியின் மையமாக வைத்துள்ளது. பொறியியல், மருத்துவக் கல்வி இந்திய மொழிகளில் கற்பிக்கப்படுவதோடு, போட்டித் தேர்வுகளும் பல இந்திய மொழிகளில் நடத்தப்படுகின்றன.

இளைஞர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உங்களால் முடிந்தவரை உலகின் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் சொந்த மொழியை ஒருபோதும் கைவிடாதீர்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பெற்றோர்களையும், தங்கள் பிள்ளைகளுடன் அவர்களின் தாய்மொழியில் உரையாடுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மொழிதான் நம்மை நம் தாயுடனும், நம் மண்ணுடனும், நம் வரலாற்றோடும், நம் கலாச்சாரத்தோடும் இணைக்கிறது. இந்தியையும் அனைத்து இந்திய மொழிகளையும் ஆற்றல்மிக்க கருவிகளாக ஆக்குவோம் என இந்தத் தருணத்தில் நாம் உறுதியெடுப்போம் .

அலுவல் மொழி தினமான இன்று, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள். வந்தே மாதரம்!

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309991&reg=3&lang=1

(Release ID: 2309991)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310046) வருகையாளர் எண்ணிக்கை : 14