பாதுகாப்பு அமைச்சகம்
இலங்கைக்கு இந்தியாவின் உதவிக்கரம் என்றென்றும் தொடரும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2026 2:39PM by PIB Chennai
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அரசுமுறை பயணமாக 2026 செப்டம்பர் 9 அன்று கொழும்பு சென்றார். அங்கு இலங்கை அதிபர் திரு அனுரா குமார திசநாயகேவை சந்தித்து இந்தியா- இலங்கை இடையேயான நட்புறவு, பாரம்பரிய உறவு, பரஸ்பர நம்பிக்கை உள்ளிட்டவை குறித்து உரையாடினார்.
இருநாட்டு மக்களின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுவது, அமைதி, வளம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இருவரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருநாடுகள் இடையேயான வரலாற்று பிணைப்பை நினைவுகூர்ந்த பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை அதிபருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துகொண்டார். வருங்காலங்களிலும் இலங்கைக்கு இந்தியா உதவிகளைத் தொடர்ந்து செய்யும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது பேசிய இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, இலங்கையில் தித்வா புயல் பேரழிவை ஏற்படுத்தியபோது, இந்தியா தங்களுக்கு உதவிக்கரம் நீட்டியதை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள், மறுசீரமைப்புக்கு இந்தியா உதவியதையும் பாதுகாப்புதுறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து, இந்தியா பாதுகாப்புப் படை சார்பில் இலங்கையில் கட்டப்பட்ட 3 பாலங்களை, காணொலிக்காட்சி வாயிலாக, பாதுகாப்புதுறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இலங்கை அதிபர் திரு அனுரா குமார திசநாயகே ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். மேலும், அவர்கள் முன்னிலையில், இந்தியா- இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா சார்பில் இலங்கைக்கு வழங்கப்பட்ட எல்-70 ரக துப்பாக்கிகளை மேம்படுத்துவது, தேசிய மாணவர் படை, தேசியப் பாதுகாப்பு கல்லூரிகள் மேம்பாடு தொடர்பாக இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியா, இலங்கையை சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள், தேசியப் பாதுகாப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறமைகள் மேம்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308213®=3&lang=1
***
SS/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2308463)
வருகையாளர் எண்ணிக்கை : 12