நிலக்கரி அமைச்சகம்
மேற்பரப்பு நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்கள் குறித்து நிலக்கரி அமைச்சகம் விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2026 11:22AM by PIB Chennai
ரூ.37,500 கோடி மதிப்பிலான மேற்பரப்பு நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு எந்த விண்ணப்பங்களும் வரவில்லை என்று சில பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளன. நிலக்கரி அமைச்சகம் சரியான தகவல்களைப் பதிவு செய்ய விரும்புவதோடு, அத்தகைய செய்திகளில் உண்மையில்லை என்றும், அவை திட்டத்தின் தற்போதைய நிலையையோ அல்லது விண்ணப்ப செயல்முறையையோ பிரதிபலிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்த விரும்புகிறது.
மேற்பரப்பு நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான திட்டதிற்கு, ரூ.37,500 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில், 2026 மே 13 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டமானது, நாட்டில் நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலைத் துரிதப்படுத்துவதையும், உள்நாட்டு நிலக்கர பழுப்பு நிலக்கரியை, செயற்கை வாயு, மெத்தனால், அம்மோனியா, யூரியா உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களாக மாற்றுவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய மதிப்புக்கூட்டு பொருட்களின் உற்பத்திக்காக உள்நாட்டு வளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த இத்திட்டம் முயல்கிறது.
இத்திட்டத்தின் கீழ் முன்மொழிவுக்கான கோரிக்கை 2026 ஜூலை 07 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இணையதளம் தொடங்கப்பட்டது.
முதல் சுற்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 2026 செப்டம்பர் 07 ஆகும். எனவே, முதல் விண்ணப்பக் காலத்துக்கு அவகாசம் இருக்கும்போதே, இத்திட்டத்திற்கு எந்த விண்ணப்பங்களும் வரவில்லை என்று முடிவுக்கு வருவது உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை.
இத்திட்டத்திற்குத் தொழில்துறையின் தொடர்ச்சியான பங்கேற்பு கிடைக்கும் என்றும், இது இந்தியாவில் நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க உந்துதலை வழங்கும் என்றும் நிலக்கரி அமைச்சகம் நம்பிக்கையுடன் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306880®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2306918)
வருகையாளர் எண்ணிக்கை : 9